பக்கம்:வாழ்க்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வாழ்க்கை


அரும்பிவரும் வாழ்வுதான் என்று தெரிந்துகொள்கிறான். விதையிலிருந்து யாதொரு முரணுமின்றி இயற்கையாக முளை வருவது போலவே மனிதனின் அகங்காரத்திலிருந்து புது வாழ்வு வருகின்றது.

பகுத்தறிவே மனிதனின் விதி

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதுதான் மிருக உணர்ச்சி கழிவதற்கு ஆரம்பம். பகுத்தறிவை விளக்கிக் கூறவேண்டியது அவசியமில்லை ; விளக்கவும் முடியாது. ஏனெனில் நாம் அதை அறிவோம்; நமக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

பகுத்தறிவைக் காட்டிலும் உறுதியாக நாம் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லை. இந்த அறிவே மற்ற எல்லாவற்றிற்கும் முந்தியது. உலகில் நாம் அறியும் எல்லாப் பொருள்களும், விஷயங்களும் இந்தப் பகுத்தறிவின் விதிகளோடு இயைந்திருப்பதால்தான், அவைகளை அறிய முடிகின்றது. பகுத்தறிவை அலட்சியம் செய்ய முடியாது. பகுத்தறிவாளரான மனிதர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விதியே பகுத்தறிவு. அதுவே வாழ்க்கையைப் பக்குவப்படுத்துகிறது. மிருகம் உணவு அருந்தித் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள விதி இருக்கிறது ; செடி கொடிகள் வளர்ந்து மலர்கள் பூப்பதற்கு விதி இருக்கிறது ; பூமியும் நட்சத்திரங்களும் சுற்றி வருவதற்குக் காரணமான அண்ட கோளங்களின் விதி இருக்கிறது. இந்த விதிகளைப் போலவே, பகுத்தறிவு மனிதனுக்கு விதியாக விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/51&oldid=1122072" இலிருந்து மீள்விக்கப்பட்டது