பக்கம்:வாழ்க்கை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
வாழ்க்கை
 

சரித்திரத்தின் மூலம் மனித வாழ்வு வெளித் தோற்றத்தில் எப்படி யெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வது நல்லதுதான். மனிதனின் மிருக இயல்பு பற்றியும், மற்றைப் பிராணிகள், சடப்பொருள்கள் பற்றியும் தெரிந்துகொள்வதும் நலமே. ஆனல், இவைகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு மானிட வாழ்க்கையை அறிந்துவிட முயல்வது, பிரதிபிம்பத்தைப் பார்த்துக் கொண்டே அதற்குக் காரணமான மூலப் பொருளை அறிவது போலாகும்.

பெளதிகப் பொருள்களின் விதிகளை அறிவது நமக்கு நன்மை பயக்கும். எப்போது? நமது மிருக இயல்பு பகுத்தறிவின் விதிக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்ட போதுதான் பயனுண்டு ; அந்த விதியையே நாம் முற்றிலும் அலட்சியம் செய்து தள்ளும்போது பயனில்லை.

மேலே கூறிய விதிகளை யெல்லாம் ஒருவன் நன்கு தெரிந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சமயம் அவன் கையில் ஒரு ரொட்டித் துண்டு இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த அறிவு துளியாவது பயன்படுமா? அவன் ரொட்டித் துண்டைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டுமா? அல்லது நாய்க்குப் போடவேண்டுமா? அந்நியன் ஒருவனுக்கு அளிக்க வேண்டுமா? அல்லது அவனே உண்ண வேண்டுமா? அதைச் சேமித்து வைக்க வேண்டுமா? அல்லது வந்து கேட்பவருக்கு அளிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞான அறிவு பயன்படுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/57&oldid=1122084" இருந்து மீள்விக்கப்பட்டது