பக்கம்:வாழ்க்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வாழ்க்கை


ஒவ்வொருவரும் தத்தம் தனி நன்மையை நாடிச் செல்வதால் மனிதர்களிடையே தோன்றும் பூசல். இரண்டாவது காரணம்: இன்பமில்லாதவைகளை இன்பம் எனக்கொண்டு மயங்குதல், இவைகள் வாழ்க்கையை வீணாக்கித் தெவிட்டுதலையும் துயரத்தையும் உண்டாக்குகின்றன. மூன்றாவது காரணம்: மரணம்.

சுய நலத்திற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு மோதிக்கொள்வது அர்த்தமற்ற செயல். ஒவ்வொருவரும் தம் நன்மைக்காகப் போராடுவதை மற்றவர்கள் நன்மைக்காகப் போராடுவதாக மாற்றிவிட்டால், பூசலே இராது. எத்தனையோ விஷயங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதால்தான் நாம் உலகில் வாழ முடிகிறது. தனி மனிதன் தன்னைப் பார்க்கிலும் மற்றவர்கள் நன்மையில் அதிக நாட்டம் கொண்டால் முதலாவது காரணம் தீர்ந்துவிடும்.

இரண்டாவது காரணம் இன்பங்களைப் பற்றிய மயக்கம். தனி இன்பத்தை மறந்து பிறர் இன்பத்தில் நாட்டங் கொள்ளும்பொழுது, மனிதனுடைய இன்பத் தேட்டம் மறைகிறது. மனிதனுடைய மிருக இயல்பைத் திருப்தி செய்து கொண்டிராமல், பகுத்தறிவு உணர்ச்சியின் விதிகளின்படி நடக்கும் பொழுது, மற்றவர்களுடைய வாழ்க்கைக்காகச் செயலாற்றும்படி நேருகிறது. அதுவே தனி மனிதனுக்கு இன்பமாம். ஆதலால், அவனுடைய துன்பம் குறைந்து மற்றவர்களிடத்தில் அநுதாபம் பெருகுகிறது. இதுவே அவன் இன்பத்திற்கு ஊற்றாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/89&oldid=1122165" இலிருந்து மீள்விக்கப்பட்டது