பக்கம்:வாழ்க்கை.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90
வாழ்க்கை
 

‘இது பௌத்த தர்மமல்லவா! இது நிர்வாணம்’ [1] என்று இக்காலத்து மனிதர்கள் பதில் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லிவிட்டால், நாம் உண்மையை மறைத்துவிட முடியாது. தனி மனிதனின் வாழ்க்கை துயரமானது, பொருளற்றது என்பது உண்மையல்லவா ? தனி நலன்களுக்காக வாழ்க்கையைத் தத்தம் செய்தல் பயனற்று விபரீதமாக முடிகிறது. இதிலிருந்து தப்புவதற்குத் தனி நலன்களைத் தியாகம் செய்தலே சிறந்த வழி. பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை இவ்வாறு தான் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய மேதாவிகளும் இவ்வாறே அறிந்திருக்கிறார்கள்.

ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் ஓர் இந்து இக்காலத்து நாகரிக ஐரோப்பியர்களைவிட உயர்ந்தவன். தன் தனி நலனைத் துறந்து முக்தி பெறவேண்டும் என்று அவன் தவம் செய்கிறான். நாம் மிருகங்களின் வாழ்க்கைக்குத் திரும்பி யிருக்கிறோம்; இரும்புத் தண்டவாளங்களின்மீது உலகெங்கும் சுற்றுகிறோம். நம் மிருகத் தன்மையை மின்சார வெளிச்சத்தால் உலகிற்கு அறிவிக்கிறோம். அந்த இந்து வாழ்க்கையில் தனித் தன்மைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் முரண்பாடு இருப்பதை அறிந்திருக்கிறான். அதை நீக்குவதற்கே அவன் தனக்குத் தெரிந்த முறையைக் கையாளுகிறான். நம் காலத்து நாகரிக மக்கள் இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவில்லை; முரண்பாடு இருப்பதாகக்கூட நம்பவில்லை.


  1. பௌத்தர்கள் கூறும் முக்தி நிலை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/97&oldid=1122176" இருந்து மீள்விக்கப்பட்டது