பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வாழ்க்கை நலம்


காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்துவிடுவர். நமக்கு நன்மைபோலச் சொல்வர். நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரீகம் என்பர். ஆன்றோர், சான்றோர் நெறி என்பர். அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்: விழிப்பாக இருக்க வேண்டும்.

மற்றவர்களைப் பற்றி ஒருவரிடம் பேசாதே; எதுவும் கூறாதே, கோள் சொல்லுதலும் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

கோள் தற்சார்பு இனிப்பு முடிய கொடிய நஞ்சு. இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும் கோள் வாயிலாக அந்த நன்மை வளரவேண்டாம்.

கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேள். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க ; வளர்த்துக்கொள்க; வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/100&oldid=1133229" இலிருந்து மீள்விக்கப்பட்டது