பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53. சிறப்பு செய்தொழிலாலல்ல

இன்று "மானுடம்" உலகமாக உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம், சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகளைக் கடந்து மானுடம் 'ஒருலகம்' என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது.

ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.

இங்ஙனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள்—அடிமை முறை தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/121&oldid=1133254" இலிருந்து மீள்விக்கப்பட்டது