பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



136

வாழ்க்கை நலம்

ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டு பிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

உடல், ஒரு உழைப்புச் சாதனம்—கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்து விடும்.

மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையகத்திற்கு அணியாக வாழ்வோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/138&oldid=1133343" இலிருந்து மீள்விக்கப்பட்டது