பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வாழ்க்கை நலம்

நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" - என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல்நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால் தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக் கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புல் அல்ல, முளைத்தெழும்புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் கலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/18&oldid=1133529" இலிருந்து மீள்விக்கப்பட்டது