பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வாழ்க்கை நலம்

அவற்றை-முறைப்படுத்திக் கொள்வன கொள்வர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பெளதிகம் அறிந்து-அவற்றின் இயக்கத்துக்கு மாறு படாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகையாரே நீத்தார்!

புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

      "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
       நெறிநின்றார் நீடுவாழ் வார்"

"அவித்தல்" என்றால் அழித்தல்-அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையின்று. அவித்தல்-பக்குவப்படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப்போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

பற்றற்ற நிலை என்று ஒரு சூன்ய நிலை-வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்கமுடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்பொழுதும் - நீத்தார் தன்மை வந்தமைகிறது.

இத்தகு நீத்தார்க்குத் தற்சார்பின்மையால் விருப்பு வெறுப்புக்கள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை சார்பு இல்லையேல் நன்மையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/22&oldid=1133002" இலிருந்து மீள்விக்கப்பட்டது