பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. அறன் வலியுறுத்தல்

இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும்கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம் மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனத்திற்கு மாசு இயற்கையன்று. மனத்திற்கு மாசு கொள்முதலேயாம்.

நமது பொறிகள்-மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள்-ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வராா! மாசும் வாரா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/23&oldid=1133003" இலிருந்து மீள்விக்கப்பட்டது