பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணை நலம்

29

நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

        "தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
         சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

என்று மொழிகிறது.

ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறை வேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான், தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்யமுடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற்சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள், இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் தற்காத்து 'தற்காத்து' என்றது குறள். அடுத்து 'தற்கொண்டாற் பேணுதல்' ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும், புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது; மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக்கொள்வது; குடும்பத்தின் செய்திகள் அயலறியாவண்ணம் பாதுகாப்பது, கண்ணகி 'பீடன்று' என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும். இத்தகு நலன்களையுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம்.

இத்தகு நலன்கள் பெண்ணினத்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ் நிலை அவர்களுக்கு வழங்கப்பெறுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/31&oldid=1133013" இலிருந்து மீள்விக்கப்பட்டது