பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வாழ்க்கை நலம்

எண்ணவேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமுகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப்பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும். நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனிமனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று, அன்பு அடக்கத்தினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லோரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்கதாகிறது.

நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்சொற்களை பிறருக்கும் தனக்கும் இன்னாதன விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/40&oldid=1133022" இலிருந்து மீள்விக்கப்பட்டது