பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20. மற்றவர் சிந்தனைக்கு
மதிப்பு தருக !

நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது. மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டும் ஆய்வு செய்தல்-அணுகுதல் ஆகாது.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பை தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் க ரு தி - அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/52&oldid=1133035" இலிருந்து மீள்விக்கப்பட்டது