பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!

51


இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும். முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று- அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம், வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில் அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் முறை. அதுபோலவே தான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப் பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

       "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்
                            அமைந்தொருபால்
        கோடாமை சான்றோர்க் கணி."குறள்-118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/53&oldid=1133036" இலிருந்து மீள்விக்கப்பட்டது