பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வாழ்க்கை நலம்

இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வா யி ல் க ளை உருவாக்கவேண்டும். நல்ல நட்பைத் தேடிக் கொடுத்து விட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவர்.

ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாக்கி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள். வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக்கூடப் பிரித்துவிடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும்கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.

ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!

          "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
           நட்பாடல் தேற்றா தவர்"(குறள்-187)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/74&oldid=1133064" இலிருந்து மீள்விக்கப்பட்டது