பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வாழ்க்கை நலம்

னடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை, அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தைத் தூண்ட சுவை பயன்படலாம்.

நிறைய பேச—சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிக மாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். "சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்" வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ,கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.

இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர் வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிைக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று. யாரிடமும் பணிவாக இருப்பது, தன்முனைப்பு அற்று இருப்பது, தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது, இவையே அடக்கமுடைமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/78&oldid=1133544" இலிருந்து மீள்விக்கப்பட்டது