பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



33. பொறுத்தாற்றும் பண்பு

பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணிர் எடுத்துச்செல்ல இயலும். ஆம்! தண்ணிர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்கவேண்டும்.

வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும், பாம்பினைக் பழக்கிவிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயல வேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/81&oldid=1133205" இலிருந்து மீள்விக்கப்பட்டது