பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35. பொறாமை கொள்ளற்க !

அழுக்காறு - அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். “அழுக்காறு என ஒருபாவி” என்று அழுக்காற்றினைத் திட்டுகிறார்.

ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது, மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் “பொறாமை” என்று பேசப்படுகிறது. . அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

ஆனால் இன்று பலர் நல்லவைகளில் -கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன்மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான். மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான். ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/85&oldid=1133209" இலிருந்து மீள்விக்கப்பட்டது