பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்புரவு வாழ்க்கை

93

போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப்பெறாது போனால் அழிந்துபோகும். ஆதலால், ஊருணி நீரைப்போல இழந்து போகாமல் மேலும் செல்வவளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்தழீஇய புகழ் கிடைக்கும்.

இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருவருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

'உலகம் உண்ண உண்! உடுத்த உடுத்து!'

என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/95&oldid=1133546" இலிருந்து மீள்விக்கப்பட்டது