உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரப் பிரிவினை

312

அதிகாரப் பிரிவினை

அக்காலத்தில் அரசனே சட்டங்களை இயற்றுவோனாக, அவற்றைச் செயற்படுத்துவோனாக, நீதிபதியாகத் திகழ்ந்தான்.

பிரெஞ்சு அரசியல் அறிஞர் போதின் (Bodin) என்பவர் 16–ஆம் நூற்றாண்டில் தமது குடியரசு என்ற நூலில், நீதித்துறை சுதந்திரமாக அரசின் பிற பிரிவுகளின் கட்டுப்பாடில்லாமல் செயற்பட வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறியுள்ளார். அவருடைய கருத்துப்படி நிருவாக அதிகாரமும், நீதித் துறை அதிகாரமும் ஒருவரிடமே இருந்தால் அது வல்லாட்சிக்கு வழிவகுக்கும். எனவே நீதி வழங்கும் அதிகாரம் சுதந்திரமாகச் செயற்படும் நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்படவேண்டுமெனக் கருதினார். மக்களின் உரிமையைக் காப்பதற்காக அவற்றை வெவ்வேறு துறைகளாகப் வேண்டுமெனக் கூறினார். 17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், அரசருக்கும் பாராளுமன்றத்திற்குமிடையே போராட்டம் வலுத்த போது, அதிகாரப் பகுப்பு வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவு கிடைத்தது. சான் லாக் (John Locke) என்பவர் தம்முடைய ‘சிவில் அரசாங்கம்’ என்ற நூலில் அரசாங்கத்தின் பணிகளை மூவகையாகப் பகுத்தார். சட்டமன்றம், நிருவாகம், அயல்நாட்டுக்கு அனுப்பப்படும் தூதுக் குழுக்கள் என்பன அவை. நிருவாக அமைப்பும் அயல்நாட்டுக்கு அனுப்பப்படும் தூதுக் குழுக்களும் இணைவதை ஓரளவேனும் ஏற்றுக் கொண்ட சான் லாக், சட்டமன்றமும் நிருவாகமும் இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை. சட்டமியற்றும் அதிகாரமும் நிருவாக அதிகாரமும் ஒருவரிடமே குவிந்திருத்தல், வல்லாட்சிக்கு வழிவகுக்கும் என்பது இவருடைய கருத்தாகும்.

அரசியல் அறிஞர்கள், அதிகாரம் பகுக்கப்பட வேண்டும் என்பது பற்றிப் பழங்காலமுதலே சிந்தித்து வந்த போதிலும், தெளிவான–வரையறுத்த ஒரு சிந்தனை இது குறித்து ஏற்படவில்லை. தெளிவான ஒரு விளக்கத்தை அளித்தவர் 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டு அரசியல் தத்துவ ஞானியான மாண்டெசுகியூ (Montesque) என்பவராவார், மாண்டெசுகியூ அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டைத் தெளிவாக்கியதோடு அரசியலில் இக்கோட்பாடு முதன்மை வாய்ந்தது என்பதையும் நிலைநாட்டினார்.

இவர் சட்டங்களின் உட்பொருள் (Spirit of the Laws) என்ற தம்முடைய நூலை 1748–ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவர் வாழ்ந்த காலம் பிரான்சில் பதினாறாம் உலூயி அரசோச்சிய காலம், ‘நானே அரசு’ என்று அம்மன்னன் இறுமாந்த கருத்துடையவனாகத் திகழ்ந்தவன். எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டிருந்தான். அவனது விருப்பமே நாட்டின் சட்டமாகச் செயற்படுத்தப்பட்டது. இத்தகைய சர்வாதிகார ஆட்சியில் மக்கள் உரிமை என்ற சொல்லிற்கு இடமில்லை. மக்கள் உரிமைகளற்று இருப்பதற்குக் காரணம் அரசனிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பதே என மாண்டெசுகியூ கருதினார். மாண்டெசகியூ, இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்த போது, அந்நாட்டு மக்களின் உரிமையுடன் கூடிய வாழ்க்கை அவரைக் கவர்ந்தது. அந்நாட்டு மக்களின் உரிமையோடு இணைந்த வாழ்விற்கான காரணங்களை ஆராய முற்பட்டபோது அந்நாட்டின் அரசியலமைப்பு, ‘அதிகாரப் பிரிவினை’ என்ற சிறந்த அடிப்படையின் மேல் அமைந்திருப்பதே என்ற முடிவிற்கு வந்தார். உரோமானிய நாட்டு வரலாற்று அறிவும், இங்கிலாந்து நாட்டு அரசியல் அறிவும் கற்றுத் தேர்ந்திருந்த இவர், ஓர் அரிய அரசியல் கோட்பாட்டினை உலகிற்கு அளித்தார். அதுவே அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு என்பதாகும்.

யாரிடம் வரம்புக்கு மீறி அதிகாரம் இருக்கிறதோ அவர் அவ்வதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவார். சட்டமியற்றும் அதிகாரமும் நீதியும் நிருவாகமும் ஒருவரிடமே குவிந்திருந்ததால், அங்கு மக்கள் உரிமை என்ற பேச்சிற்கே இடமில்லை; அங்கு மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. இம்மூன்று அதிகாரங்களும் ஒருவரிடமே குவிக்கப்பட்டிருந்தால் அந்நாட்டு மக்களுக்குச் சுதந்திரத்துடன் கூடிய உரிமை கிடைக்க வாய்ப்பில்லை. கொடுங்கோன்மையான சட்டங்கள் இரக்கமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டு மக்கள் கொடுமையான முறையில் தண்டிக்கப்படுவர். இந்த நிலையைப் போக்க அதிகாரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படவேண்டும் என்று மாண்டெசுகியூ வலியுறுத்தினார்.

‘மாண்டெசுகியூவின் அதிகாரப் பிரிவினை’ என்பது ஓர் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவின் அதிகாரங்களும் ஒருவரிடமோ ஒரு நிறுவனத்திடமோ இருத்தல் கூடாது என்கிறது. அதிகாரம் குவிக்கப்பட்டிருந்தால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும். எனவே மக்கள் சுதந்திர உணர்வுடன் வாழ வேண்டுமென்றால் ‘அதிகாரப் பிரிவுமுறை’ ஓர் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவும் அதன் சட்ட வரம்பிற்குள் செயற்படுவதுடன், வேறொரு பிரிவிற்குள் அடங்காமல் நிற்பதுமாகும் என்பது மாண்டெசுகியூ கோட்பாட்டின் சாரம். சட்டம் அனுமதிக்கும் வரம்பைத் தாண்டி ஒரு பிரிவு செயற்படும்போது வேறொரு பிரிவினால் இதனுடைய ஊடுருவல் தடுக்கப்படும். ஒரு பிரிவானது இன்னொரு பிரிவிற்கு இணையாகச் செயற்படுமளவு ஓர் அரசாங்கத்தில் அதிகாரப் பிரிவினை செயற்பட வேண்டும். கொடுங்கோலாட்சியைத் தவிர்க்கவும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இப்படி