உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரப் பொருளாதாரம்

315

அதிகாரப் பொருளாதாரம்

அது மீட்பு அரசியல் மனிதன் (Homo Politicus) என்ற வடிவில் உருவெடுத்தது. மக்களின் ஒப்புதல் அவனுக்குக் கிடைத்தது, எனவே, அரசியல் மனிதனின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது. இந்நிலையில்தான் அரசியல் மனிதன், பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்தி அனைத்தையும் தனது அதிகாரத்தின்கீழ் கொணர்ந்தான்.

இவ்வதிகாரம் தழுவிய பொருளாதார அமைப்பு ஒரு நாட்டில் போர்க் காலங்களில் தோன்றி அமைதிக் காலங்களில் மறைந்து விடுவதில்லை. அமைதிக் காலங்களிலும் இப்பொருளாதார அமைப்பு இருக்கக் கூடும். பொதுவாக, வல்லாட்சி நாடுகளில் எல்லாம் அதிகாரப் பொருளாதாரம் அமைக்கப்படுவது வழக்கம். சோவியத்து உருசியா, சீனா, செருமனி, இத்தாலி, சூடான், பாகிசுதான், பர்மா, வியட்நாம், அர்செண்டைனா, துருக்கி, அங்கேரி, செக்கோசுலோவேகியா, யூகோசுலோவேகியா, எகிப்து, தான்சானியா, இலிபியா, நைசீரியா ஆகிய நாடுகள் இத்தகைய பொருளாதார அமைப்பை அவற்றின் வரலாற்றில் ஏதேனும் ஒரு காலத்தில் பெற்றிருந்தன.

அதிகாரப் பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகள்: பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நிருவாகத்தின் தன்மையைப் பொறுத்து, அதிகாரப் பொருளாதாரம் மூன்று வகையாக அமையலாம். ஒன்று, சோவியத்து உருசியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல் ஒரு கட்சியின் அதிகாரம். இவ்வதிகாரப் பொருளாதாரத்திற்கு அதிகார சமத்துவப் பொருளாதாரம் (Authoritarian Socialism) என்பது பெயர். மற்றொன்று, செருமனியில் அதிகாரம் செலுத்திய இட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தனி மனித ஆதிக்கம் பெற்ற பொருளாதாரம். இது, அதிகாரம் தழுவிய தனியார் முயற்சிப் பொருளாதாரம் (Authoritarian Free Enterprise System) என்று அழைக்கப்பட்டது. மூன்றாவதாக, பாகிசுதானின் அயூப்கான், சியா (zia) போன்ற படைத் தலைவர்களின் ஆட்சிக்குட்பட்ட அதிகாரம். இம்முறைக்குப் படைவலி முதலாளித்துவ அமைப்பு (Military–Based Capitalist Economy) என்பது பெயர். இம்மூன்று அமைப்புகளுக்குள்ளும் பல வகைகளில் ஒற்றுமை இருப்பதால், இவை அனைத்தும் அதிகாரப் பொருளாதாரம் என்றே அழைக்கப்படுகின்றன.

அதிகாரச் சமதரும அமைப்பில், பொருள் உற்பத்திக்கு மூலமான நிலம், காடுகள், சுரங்கங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்ற வளங்கள் அனைத்தும் அரசின் பொதுவுடைமையாக இருக்கும். தனியாருக்குச் சொத்துரிமை இவ்வமைப்பில் இல்லையாதலின், தனியார் சுரண்டல் ஏற்பட வழியில்லை. இப்பொருளாதாரத்தின் உற்பத்தி, ஆதாயத்தையோ தனி மனிதன் நலனைக் கருதியோ அமையாது. உற்பத்தி என்பது மக்களுக்காக, மக்கள் நலன் கருதி, மக்கள் அனைவராலும் மேற்கொள்ளப்படும்.

ஆனால், மற்ற இரு அதிகாரப் பொருளாதார அமைப்புகளிலும் முதலாளித்துவத்தின் வெளித் தோற்றம் மட்டும் காக்கப்படும். இங்கே, உற்பத்திக் காரணிகள் தனியாரிடம் இருக்க அனுமதிக்கப்படுகின்றன. சில முக்கியத் தொழிற்சாலைகள் கூட நாட்டுடைமையாக்கப்படுவதில்லை. எனவே, தனியார் தொழில் முயற்சி, பொருளாதாரத்தில் காணப்படுவது போல உற்பத்தியாகும் சமூக வருமானம், தனியார்களாலேயே வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆயினும், இப்பொருளாதாரத்தில் காணப்படும் கொடூரமான அதிகாரக் கட்டுப்பாடானது, தனியார் தொழில் முயற்சிகளையும் அதனால் ஆதாயம் பெறுதலையும் பெரிதும் பாதித்துவிடுகிறது. ஆகவே, இத்தகைய பொருளாதாரத்தில் பெயரளவில்தான் முதலாளித்துவக் கூறுகள் காணப்படுகின்றனவே தவிர, உண்மையில் அவை அழிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அயூப்கான் பாகிசுதானில் பொறுப்பேற்றபோது பொருள்களின் விலையிலும் ஆதாயத்தின் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். நிலச் சீர்திருத்தங்களைக் கடுமையாக மேற்கொண்டதன் மூலம் தனியாரிடம் நில உடைமை குவிந்திருப்பதைக் கட்டுப்படுத்தினார். செருமனியின் அதிகாரப் பொருளாதார அமைப்பில் தனியார் சொத்துரிமை எந்நேரத்திலும் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலை இருந்தது, தனியார் தங்கள் சொத்துகளை எவ்விதம் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கூட அரசு விதித்தது. ஒவ்வொரு தனியார் நிறுவனமும் அரசின் பங்கேற்புடன், அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பொது நிறுவனமாகவே (Public Trust) இயங்கியது. சுருங்கக் கூறின், செருமனியின் ஒவ்வொரு தனித் தொழில் நிறுவனத்திலும் அரசு ஒரு கூட்டாளியாக (Partner) இருந்தது. இட்லர் பதவிக்கு வந்தபோது தனியார் உற்பத்தி அனைத்தும் அவரது மையக் குழுவிடம் இருந்ததால், தனியார் சொத்துரிமைக்கு (Private Ownership) உதட்டளவு மதிப்புதான் இருந்தது.

உற்பத்திக் காரணிகள் அரசின் ஆளுகைக்குக் கீழ் இருப்பதால் அவற்றைச் சிறந்த முறையில் பங்கிட்டு வல்லாட்சியாளரின் (Dictator) சமூக, பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொருளாதாரத்தில் ஓர் அமைப்புத் தேவைப்படுகிறது. அந்த அமைப்பு மையத் திட்டக்குழு என்ற பெயரில் செயற்-