அதிகாரப் பொருளாதாரம்
316
அதிகாரப் பொருளாதாரம்
படுகிறது (Central Planning Board) அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் இக்குழு திட்டங்களாக வகுக்கும். இக்குழுவின் திட்டங்களுக்கும் வகுக்கப்பட்ட குறிக்கோள்களுக்கும் ஏற்பத் தொழில் முயற்சி மேற்கொள்வோர் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவர். எனவே, அதிகாரம் தழுவிய பொருளாதாரம் என்பது எப்போதும் மையத் திட்டமிட்ட அதிகாரப் பொருளாதாரமாகவே (Centrally Planned Command Economy) விளங்கும். ஆனால், உலகிலுள்ள திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அனைத்தும் அதிகாரப் பொருளாதாரமாக இருக்குமென்பதில்லை.
இத்தகைய திட்டமிடப்பட்ட அதிகாரப் பொருளாதாரத்தில் விலைச் செயற்பாட்டின் (Price Mechanism) பெருமை குறைந்து காணப்படும். பொதுவாக அங்காடி விலை, பொருள்களின் தேவையாலும் (Demand) பொருள்களின் அளிப்பாலும் (Supply) வரையறுக்கப்படும். ஆனால், இவை அதிகாரப் பொருளாதாரத்தில் தனித்து இயங்குவதற்கு மறுக்கப்படுவதுடன், பொருள்களின் விலைகளையும் திட்டக்குழுவே தீர்மானிக்கும். இங்கு மேற்கொள்ளப்படும் விலை முறையானது அதிகார விலைமுறை எனப்படும் (Authoritarian Price System). திட்ட அதிகாரிகள் பொதுமக்களின் விருப்ப அளவுகோலுக்கு (Scale of Preference) ஏற்பவும் பொருளாதார முன்னேற்றத் தேவைகளுக்கு ஏற்பவும் விலைகளை உறுதி செய்வர். ஆனால், உறுதி செய்யப்பட்ட விலை மறுபடியும் அலுவலர்களால் மாற்றப்படாதவரை ஒரே நிலையில் இருக்கும். எனவே அதிகாரப் பொருளாதாரத்தில் விலைவாசிகள் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உற்பத்தி முறை இயங்காது. இதனைக் கருத்தில் கொண்டுதான், சில பொருளியல் அறிஞர்கள், அதிகாரப் பொருளாதாரம் விலைக் கருவியின் உதவியின்றியே தங்கு தடையில்லாமல் செயற்பட முடியும் என்று கூறுகின்றனர். இருப்பினும், கீழ்க்காணும் காரணங்களுக்காக, அதிகாரப் பொருளாதாரத்திலும் விலைக்கருவியின் பங்கு இன்றியமையாததாகிறது. (1) பொருளாதாரத்தில் இயங்கும் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் மற்ற நிறுவனத்தின் பொருள்களை வாங்குவதற்கு மாற்று விலைமுறை (Transfer Price) தேவைப்படுகிறது. (2) பல்வேறு இயற்பியல் அளவுகளைக் (Physical Units) கொண்ட பண்டங்களை ஒரு முடிவான அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு விலை தேவைப்படுகிறது. (3) உற்பத்தி முறைகளில் மேற்கொள்ளப்படும் செலவினங்களை ஆய்ந்து, மிகக் குறைந்த செலவினம் கொண்ட ஆனால், நிறைந்த பயன் தருகிற உற்பத்தி முறையைச் செயற்படுத்துவதற்கு விலை சிறந்த கருவியாகிறது. ஆனால், மேற் கூறியது போல் முக்கிய முடிவுகளும் வளங்களின் பங்கீடும் (Allocation of Resources) இவ்விலைகளைப் பொறுத்து அமையா. எனவே, அதிகாரப் பொருளாதாரத்தில் பணத்தின் செயற்பாடு குறைந்தே காணப்படும். அது கணக்கின் அலகாகவே (Unit of Account) இருக்கும். நிருவாக நிறுவனங்களுக்குள் ஏற்படும் அனைத்து நடவடிக்கைகளும் காசோலைகளின் (Cheque) மூலமாகத்தான் நிகழும்.
அதிகாரப் பொருளாதாரத்தில், விலைக் கருவியின் பங்கு குறைந்து காணப்படுவதால் ஆதாயம் கட்டுப்படுத்தப்பட்டும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்கும். மேலும், உழைப்போர் கூலிகளில் ஏற்றத் தாழ்வு குறைந்தே காணப்படும். இக்காரணங்களால் வருமானமும் செல்வமும் ஒரு சிலரிடையே குவிந்து, பொருளாதார ஏற்றத் தாழ்வு (Economic inequality) குறைந்தே காணப்படுகிறது. பொருளாதாரச் சமநிலை, சம உரிமை, சமவாய்ப்பு ஆகியவை நிறைந்து காணப்படும். பெரும்பாலும், ‘திறமைக்கேற்ப உழைத்துத் தேவைக்கேற்பப் பெறுதல்’ என்ற கொள்கை இப்பொருளாதாரத்தில் காணப்படும்.
ஆனால், அதிகாரப் பொருளாதாரத்தில் தனி மனித உரிமை பெரிதும் கட்டுப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்படும். பொதுவாக, நாட்டின் அரசியல் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சியில் தனி மனித விருப்புகள் தடையாக இருப்பது அனுமதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் அரசனாகக் கருதப்படும் ஒரு நுகர்வோன் அதிகாரப் பொருளாதாரத்தில், ஏறக்குறைய ஓர் அடிமையாகக் காணப்படுகிறான். அவன் என்ன உட்கொள்ள வேண்டும், எத்துணி உடுத்த வேண்டும், எவ்வகை வீட்டில் வசிக்க வேண்டும் என்ற அனைத்தையும் அரசே முடிவு செய்கிறது. அரசால் முடிவு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் எவற்றையேனும் வாங்கிக் கொள்ள நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு. அதிகாரச் சமநிலைப் பொருளாதாரத்தில் அனைத்துப் பொருள்களும் பங்கீட்டுப் பண்டசாலைகள் (Ration Shops) மூலமாகவே பிரித்தளிக்கப்படும். ஆகவே, பொருள்களின் பங்கீடு அரசால் முடிவு செய்யப்படும். ஆனால், மற்ற இரு அமைப்புகளிலும் பொருள்கள், தனியார் கடைகளில் அரசு விலைக்கு அளிக்கப்படும்.
இதுபோன்றே தொழிலாளர் வேலைவாய்ப்பும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அமையாது. கூலியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறு இடம்பெயர முடியாது. அரசாங்கம் வரையறை செய்யும் தொழில்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தொழிலாளருக்கு உரிமை அளிக்கப்படும். பெரும்பாலும், தொழிலாளர் திட்ட ஆணைக்கேற்றவாறே செயல்படவேண்டும். திட்டங்களின் குறிக்கோள்களை அடை-