உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநுபூதி நெறிக் கொள்கை

347

அநுபூதி நெறிக் கொள்கை

பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமயத்தில் கடவுளுடன் ஒன்றிய நிலை என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை.

இசுலாமிய அநுபூதி நெறியினரான ‘சூபி’ (Sufi)யினரும் கடவுளுடன் கலந்துவிடுகின்ற நெறியைக் குறிப்பிடுகின்றனர். அதனால் அங்கும் அநுபூதியாளர்களுக்கும் மதக்குருமார்களுக்கும் பூசல் ஏற்பட்டது. அல்கல்லாசு (அல்–ஹல்லாஜ்) என்னும் அநுபூதிமான் தாமும் இறைவனும் ஒன்று என்ற கருத்தில் பேசினார் என்பதற்காகப் பாக்தாத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அல்பிசுதாமி என்ற சூபி ‘நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் “நீயே நான்” என்று எனக்குள் கூறினார்’ என்கிறார்.

இந்து சமயத் தத்துவ சாத்திரங்கள் அநுபூதி நிலையின் மிக உயர்ந்த வெளிப்பாடுகள். ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றே; இரண்டல்ல; வேறுபாடுகளெல்லாம் மாயையே என்கிறார் ஆதிசங்கரர். ஆன்மா ஆண்டவனின் வடிவம். குளத்து நீரும் கங்கை நீரும் அடிப்படையில் ஒன்றே என்கின்றன இந்து சமய நூல்கள். ‘சித்தந் தெளிந்து சிவமானோர்’ என்கிறார் தாயுமான சுவாமிகள், புத்தசமயம் கூறும் ‘நிருவாணம்’ இரண்டற்ற நிலையை விளக்கும் அநுபூதிக் கருத்தே. நிருவாண நிலையில் ‘தான்’ என்ற தனித்தன்மை அழித்து உயிர் உலகத்தோடு ஒன்றாகக் கலந்து விடுகிறது. ‘எல்லைக்குட்பட்டது’ தன் தளைகளைத் தகர்த்துவிட்டு ‘எல்லையற்றதில்’ கலந்து விடுகிறது.

அநுபூதி நிலையை விளக்குவதற்கு அநுபூதியாளர்கள் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். பிரமம் இதுவன்று, இதுவன்று (நேதி, நேதி) என்கின்றன உபநிடதங்கள். கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்று கூறமுடியாது. எவ்வாறு இல்லை என்றுதான் கூறமுடியும் என்கிறார் மோசசு (Moses). தெய்வத்திரு பால் (St. Paul) சொல்வதற்கரிய காட்சியைத் தாம் கண்டதாகவும் கேட்டதாகவும் கூறுகிறார். பாகுபாடுகள் அற்ற கடவுளை உடன்பாட்டுக் குணங்களால் குறிப்பிட முடியாது; எதிர்மறைச் சொற்களைக் கொண்டே கூறமுடியும் என்கிறார் தையோனிசியசு. இதை ‘நிருவாணம்’ என்பர் புத்த சமயத்தினர்.

அநுபூதியாளர்கள் கூறும் சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றன. அதனால் அது உண்மையானதுதானா என்ற ஐயப்பாடும் எழுகிறது. பரம்பொருள் குணமற்றது, மாசற்றது என்று கூறும் அதே உபநிடதங்கள், நற்குணங்களையுடைய பிரமத்தையும் கூறுகின்றன. ஒரே பரம்பொருள் எப்படிக் குணங்களற்றதாகவும் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்? ‘கடவுளைப் பார்ப்பது என்பது கடவுள் ஏதோ ஓரிடத்தில் நிற்பது போல மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள்; ஆனால் அது அப்படிப்பட்டதன்று, கடவுள் ஒரு வெறுமை; ஆழங்காணமுடியாத பாதாளம்; தனக்குள்ளே கலக்கின்ற நீரோடை’ என்று ஏக்கார்ட்டு கூறுகிறார். ‘கடவுள் இயங்குவதுமன்று, இயங்காததுமன்று; உள்ளதுமன்று இல்லாததுமன்று’ என்கிறார் தையோனிசியசு. ‘நிறைவு’ என்றார் ஒருவர். அதையே ‘வெறுமை’ என்று குறிப்பிடுகிறார் மற்றொருவர். பேரொளியாகத் திகழ்வதே சொல்வதற்கரிய இருளாகவும் விளங்குகிறது.

இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் ஏன் நிலவுகின்றன? எல்லா அநுபூதிமான்களும் தம் அனுபவம், வாக்கு மனம் எட்டாதது என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள், நினைவிற்கும் அரிய இந்த வியக்கத்தக்க அனுபவத்தை விளக்குவதற்குச் சொற்களே இல்லை. எனவே மொழியின் இயலாமையே முரண்பட்ட கருத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். பேசாத மோனநிலையைப் பேசுவதால் ஏற்படும் இடர்ப்பாடு இது. இந்த அநுபூதி நிலை எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் எண்ணமும் ஒரு வரம்பிற்குட்பட்டதே. எண்ணும் பொழுது நாம் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும் சொற்கள் தரும் வடிவங்களைப் பயன்படுத்துகிறோம். சொற்களும் அவைதரும் வடிவங்களும் ஒரு வரம்புவரை மட்டுமே பயன்படுத்த முடிந்தவை. ஆழ்ந்த உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்த இயலா, நெடுங்காலம் பிரிந்திருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும்பொழுது பேசமுடிவதில்லை. அங்கும் பேச்சற்ற நிலையே மொழியாகி விடுகிறது. அதனால்தான் உபநிடதங்களும் பேச்சற்ற நிலையில்தான் பிரமத்தை அறியமுடியும் என்கின்றன. தாமசு அக்குவீனசு (Thomas Aquinas) என்பவர், சம்மா தியோலாசிகா (Summa Theologica) என்னும் நூலில் பார்சு தெர்சியா (Pars Tertia) என்ற பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது அநுபூதி நிலையைப் பெற்றார். தாம் அதுவரை எழுதியதனைத்தும் வீண் என்றுணர்ந்து எழுதிக்கொண்டிருந்த நூலை முடிக்காமல் ஸிட்டுவிட்டார்.

இலக்கியம் கூடச் சில காலங்களில் இலக்கணத்தை மீறிவிடுகிறது. இலக்கணம் நம் எண்ணங்களின் வெளியீட்டை ஒரு வரம்புக்குட்படுத்துகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் இலக்கண வரம்பை