உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பர்

360

அப்பர்

(பெ.தி. 424) எனவே அழைத்தார். இவர் செய்த சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் பிறவற்றையும்தாம் இன்றுவரை பல பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர் நாவரசராக இருந்தாலும் வெறும் சொல்லால் சீர்திருத்தம் பேசிக்கொண்டிராது, தாமே தொண்டராய்–உழவாரப்படை கொண்டு தெருவுதொறும் ஊர்தொறும் கோயில் தொறும் புறத்தூய்மை செய்து, பாட்டால் மக்கள் அகத்தூய்மை பெற வழிகாட்டினார், நாடே இவர் செயலால் திசை திரும்பியது.

அண்ணல் காந்தி அடிகளார் ஆங்கிலப் பேரரசை எதிர்த்தது போன்று இவர் அக்காலப் பெரு மன்னராய் வாழ்ந்த பல்லவ மன்னனை எதிர்த்து வெற்றி கொண்டார். “நாமார்க்கும் குடியல்லோம்” (6.98.1), “நாவலந் தீவகத்தினுக்குக் காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவமல்லோம்” (6.98.6), பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ (6.98.3), “அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதும் இல்லை” (4.2.1) என்பன இவர் வாக்கு. எனவே கொடுமைக்கு அஞ்சாது, நாட்டு மக்கள் வாழ்வுக்கு வழி வகுத்த முதல் சீர்திருத்தவாதி அப்பரேயாவர்.

இவர் கலையுள்ளம் பெற்றவர். இவர் பிறந்ததால் பல கலைத்துறைகள் தழைத்தன என்பதை இவர் பிறக்கும் நிலையிலேயே ‘அலகில் கலைத்துறை தழைப்ப அவதாரஞ் செய்தார்’ (பெ.தி.10) என்கிறார் சேக்கிழார். இவர் இளமையில் ‘காவளர்த்தும் குளந்தொட்டும்’ (பெ.தி.36) சமூகப்பணிகள் செய்தார் இன்றைய காடு வளர்ப்பதையும் ஏரி ஆழப்படுத்தலையும் ஒத்தன இவை. இவர் ஊர்வாழச் செய்த துப்புரவுப் பணியினைச் சேக்கிழார் ‘பார் வாழத் திருவீதிப் பணி செய்து’ (பெ.தி.225) என்கிறார். மேலும் தமிழகத்தோடு இருந்து விடாது, இமயம் வரை அந்த நாளில்–நடந்து சென்று, நாடே ஒன்றெனக் காட்டி ஒருமை உணர்வை வளர்த்தார். ‘ஆரியதந் தமிழோ டிசையானவன்’ (5.18.3), “செந்தமிழோ டாரியனை” (6,46,10), “வடமொழியும் தென்தமிழும் ஆயினான்காண்” (திருச்சிவபுரம் 1), “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” (திருமறைக்காடு 5) என்பன இவர் வாக்கு. இதனால் வடக்கு தெற்கு இடவேறுபாட்டினை மட்டுமன்றி, மொழி வேறுபாட்டினையும் நீக்கி நாட்டு ஒருமைப்பாட்டுக்கு உழைத்த முதற்றொண்டர் அப்பரே ஆவர்.

சாதி வேறுபாட்டைச் சாடியவர் இவர். அந்தணராகிய சம்பந்தரோடும் பாணரோடும் வேளாளராகிய இவர் ஒருங்கிருந்து உண்டு உடுத்துத் தொண்டு செய்தார். அந்தணராகிய அப்பூதியார் மகன் விடத்தால் மறைய, விடந்தீர்த்து உயிர் பெற்றெழச் செய்தார். ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே’ என்று (6.95.10) பாடிச் சாதிச் சழக்கை வேரறுத்தார். அப்படியே சமய வேறுபாடுகளையும் கண்டித்து யாண்டும் ஒரே இறைவனே உள்ளான் எனக் காட்டுகிறார். ‘சமயம் ஆறினுக்கும் தலைவன்’ (கச்சி ஏகாம்பரர் தாண்டகம்), ‘மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி’ (4.14.3), ‘வேறொரு சமயம் செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்’ (4.60.9), ‘ஆறொன்றிய சமயங்கள்’ (4.100.4), ‘இவர் தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது’, (6.61.3), ‘ஓருருவம் மூவுருவமான நாளோ’ (6.34.9) என்பன இவர் வாக்கு. இவற்றால் இவர் பரந்த பாரதத்தினைச் சமயத்தாலும் மொழியாலும் வேறுபாடின்றி இணைக்கப் பாடுபட்ட முதல் தொண்டர் என்பது தெளிவாகும்.

அப்படியே வெறும் சாத்திரங்களையும் சடங்குகளையும் பற்றி வாழ்வது தவறு என்றும் கண்டிக்கிறார். ‘கங்கையாடிலென் (5.99.2)’ ‘குறிகளும் அடையாளமும்’ (5.90.6) ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்’ (5.60.3) என்ற இவர் பாடல்கள் பொருளற்ற சடங்குகள் தேவை இல்லை என்பதை விளக்குவனவாம், கடுஞ்சொல், பொய், வஞ்சனை உடையவருக்கு இறைவன் அருளான் என்பதையும் இவர் சுட்டிக் காட்டுகிறார் (5.48.9; 6.50.4; 4.61,7).

‘சத்தியாக்கிரகம்’ என்றும் ‘உண்ணாவிரதம்’ என்றும் இன்று நாம் பேசும் பலவும் அப்பர் கைக் கொண்டவையே. ‘இடுக்கட்பட்டிறக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற்பிரான் என வினவுவோ மல்லோம்’ (4.11.3) என்ற சுயமரியாதைக்காரராய் அப்பர் வாழ்ந்து வந்தார். பழையாறையில் இறைவன் இருக்குமிடத்தைச் சிலர் மறைத்து வைக்க, அவ்விறைவனைக் காணாது அவ்விடத்தைவிட்டு அகலமாட்டேன் என்று ‘சத்தியாக்கிரகம்’ செய்ததோடு ‘உண்ணாவிரதமும்’ மேற்கொண்டார் (பெ.தி. 296). உடனே அந்நாட்டு அரசன் உணர்ந்து வந்து அச்சிலரை அகற்றி இறைவனை அப்பர் காணுமாறு செய்தான். எனவே இன்று நாம் கொள்ளும் செயலெல்லாம் அன்று அப்பர் தந்தவையே. வீண்பொழுது போக்குவாரையும் அப்பர் கண்டிக்கிறார் (5.35.2; 5.21.8).

இவர் செய்த மற்றொரு தொண்டு மிகச் சிறந்ததாகும். சோழநாட்டுத் திருவீழிமிழலையில் கொடும் பஞ்சம் உண்டாயிற்று. பெருஞ்செல்வர்களெல்லாம் வானாயிருப்ப இவர் நாள்தொறும் இறைவனை வேண்டி வாசி இல்லாத காசு வாங்கி, உணவுப் பொருள்களைப் பெற்று ‘எல்லாம் எய்தி உண்கவென இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச், சொல்லால்