உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பலேச்சியன் மலைகள்

361

அப்பனையங்கார்

சாற்றிச் சோறிட்டார் துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்’ (பெ.தி. 259). இரண்டு பொழுதும் உயிர் வேறுபாடு இன்றி எல்லாரும் எல்லாமும் வருக என அழைத்துச் சோறிட்டுப் பஞ்சத்தை நீக்கினார். சமுதாயத் தொண்டில் இதனினும் சிறந்தது உளதோ? மேலும் நாட்டில் உழவு சிறக்க வேண்டும் என்ற உண்மையினைப் பாட்டில் உணர்த்தியவர் இவர் (4.78.2).

மற்றும் இவர் தமக்கென ஒன்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளாததோடு, மணிகளையும் பொன்னையும் ஓட்டினைப் போலவே நோக்கினார் என்பதையும், வெற்றுக் காமக்களியாட்டை வெறுப்பவர் என்பதையும் சேக்கிழார் காட்டுகிறார் (பெ.தி. 417, 424).

கொண்ட கொள்கையினை விடாது பற்றி வெற்றி பெற்றவர் அப்பர் என்பதைப் பெருமன்னன் பல்லவனை வென்று நின்றதாலும், எல்லா உறுப்புகளையும் இழந்த நிலையிலும் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் (பெ.தி. 366) என்று உறுதி கொண்டு நின்றதாலும் அறியலாம்.

சமய சமுதாயத் துறைகளுடன் அறிவியல் துறையிலும் அப்பர் சிறந்திருந்தார் என்பதை அவர் பாடல் வழியே காணல் நன்று. உலகு வட்ட உருண்டையாக உள்ளதையும் (6.18.6) நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய இவை ஒன்றிலொன்று எவ்வாறு ஒடுங்குகின்றதென்பதையும் (6.54.5) தாய்வயிற்றில் கரு படிப்படியாக எவ்வாறு வளர்ந்து நரம்பு, எலும்பு முதலியன பெற்று முற்றுருவம் எய்துகிறது என்பதையும் (6.25.2) மின்னல் இடிகளின் தோற்ற வேகங்கள் பற்றியும் (6.64.8.) நீராவி பற்றியும் (6.55.5) வேறு பல உண்மைகளையும் அறிவியல் அறிஞர்கள் வியக்கும் வண்ணம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்பரடிகள் சுட்டிக்காட்டி விளங்க வைத்தார் என்பது வியத்தற்குகியது.

இந்த வகையில் எதிலும் தன்னலமற்று, அதே வேளையில் தன்மானத்துடன் கொள்கையினையும் விடாது, உலக வாழ்வே–பிற உயிர்வாழ்வே தம் வாழ்வு எனக்கொண்டு, தொண்டே தம் வாழ்வாகப் பிறர்வாழத் தாம் வாழ்ந்து பிறர் வாடத் தாம் வாடி அவ்வாட்டத்திற்கு வழிகண்டு உதவி, என்றும் யாண்டும் உலக உயிர்களை ஓம்புதலே உயர்ந்த மெய்ச்சமயம் என்பதை உலகுக்கு உணர்த்திய சமயத் தலைவர் – சமுதாயச் சீர்திருத்தவாதி – பெரியார் அப்பரடிகளாவார்கள். அ.மு.ப.

அப்பலேச்சியன் மலைகள் வட அமெரிக்காவின் (அமெரிக்க ஐக்கிய நாடுகளில்) இரண்டாவது மிக நீளமான மலைத்தொடர். இதன் நீளம் 2,400 கி.மீ. ஆகும். இராக்கி மலைத்தொடர் முதலிடத்தைப் பெறும், வட அமெரிக்காவின் கிழக்குப் பக்கத்தில் செயின்ட் இலாரன்சு ஆற்றிலிருந்து, அலபாமா வரை இம்மலைகள் பரவியுள்ளன. இம்மலைப் பள்ளத்தாக்குகள் செழிப்பு மிக்கவை. இங்குக் கனிப் பொருள்களும் கிடைக்கின்றன. இரும்பு, கரி, துத்தநாகம்,

அப்பலேச்சியன் மலைகள்

பெட்ரோலியம் போன்றவை அவற்றுள் சில. இம்மலைத் தொடரிலுள்ள மிச்சேல் உச்சி மிக உயரமானதாகும்.

அப்பனையங்கார் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் நிறுவப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைமையாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழ் ஆசிரியராகவும் விளங்கிய தமிழறிஞர். இவர் திருநாராயணய்யங்காரின் மகன். தந்தையைப் போலவே தமிழ்ப் புலமையுடையவர். இவர் மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி ஆற்றினார்; பின்னர் இராமேசுவரம் தேவத்தானப் பாடசாலையில் தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1952-ஆம் ஆண்டிலிருந்து தலைமையாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழ் ஆசிரியராகவும் இருந்து ஏழு ஆண்டுகள் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றியுள்ளார். சிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய தமிழ் நூல்களை இவர் நுணுகி ஆராய்ந்து கண்டறிந்த நயங்கள், ஆராய்ச்சிகள், ‘செந்தமிழ்’, ‘அரிசமயதிவாகரம்’ முதலிய இதழ்களில் கட்-

1-46