அபிராமி அந்தாதி
382
அபிராமிபட்டர்
இளையவள் ஆகிய அம்மையே ஒப்பற்ற தெய்வமென்றும், ஏனைய தெய்வங்கள் அல்லவென்றும், பிற எத்தெய்வத்தையும் வணங்குதல் கூடாதென்றும் கருதும் கொள்கையுடையவர் பட்டர். இத்தகைய நம்பிக்கையும் கொள்கையும் உடைமையினால்தான், நாளும் வந்தனை செய்கிற வானவர் தானவர்களினும் நாள்தோறும் சிந்தனை செய்கிற திசைமுகர் நாரணர்களினும், எப்போதும் பந்திக்கும் பரமானந்தரினும் மிகுதியாகக் கோவில்கள் தோறும் இறைவியைச் சந்திக்கிற தமக்கு அவள் திருவருள் கிட்டிற்று என்கிறார். இத்தகைய எளியமுறையில் தேவியின் திருவருள் கிட்டியதால்தான் பட்டருக்கு, ‘நின்பாதம் பணிந்த பின்னே இனியொருவரைப் பணியேன்’ என்று இறைச் செருக்கோடு சொல்லும் துணிவு வந்தது.
சிவன் உருவில் பகுதி கொண்ட இறைவி அன்பு செய்ய வைத்ததைத் தாம் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறார். அதனால் ‘இனி எண்ணுவதற்குச் சமயங்களுமில்லை, ஈன்றெடுக்கத் தாயுமில்லை, பெண்டிர்பால் கொள்ளும் காமமும் இல்லை’ என்று முடிந்த முடிபாகக் கூறும் நிலை எய்தி விளங்கினார். அபிராமி தேவியின் திருவடிகளை அல்லும் பகலும் வழிபடும் அடியவர்க்கே, அழியா அரசும், தவநெறியும், சிவலோகமும் கிட்டும் என்பதைத் தமது வாழ்வில் உணர்ந்த பட்டர், ‘மலமாயையால் ஏற்படும் துன்பத்தைத் துறந்து ஒரு மாத்திரைப் பொழுதேனும் சிவயோகத்திருப்பவர், குடரும் நிணமும் குருதியும் பொருந்திய உடலை எடுத்துப் பின்னரும் பிறக்க நினையார்’ என்று உறுதியாக நம்புகிறார்.
திருத்தில்லைக் கூத்தன் தேவியாம் அபிராமியின் திருவடிகட்கு அடைக்கலமானோர், பெறவியலாப் பேறுகளோ அன்றிப் பொருள்கனோ இல்லை என்று இயம்பிய பட்டர், அவளது கடைக்கண் நோக்கே ‘தனந்தரும், கல்விதரும், ஒரு நாளுந்தளர்வறியா மனந்தரும், தெய்வ வடிவந்தரும், வஞ்சமில்லா இனந்தரும், இன்னும் நல்லன எல்லாம் தரும்’ என்று இயம்புவது எண்ணி இன்புறத் தக்கது. இதற்கு மாறான ஒரு நிலையினையும் காட்டுகிறார் பட்டர் பெருமான். ஒரு கணமேனும் அவ்வபிராமியை மனத்தால் வழிபாடு செய்யாதவர், வண்மை, குலம், கல்வி, கோத்திரம், குணம் என்பனவெல்லாம் குன்றி, குடில்கள்தொறும் உணவிற்காகப் பாத்திரங்கொண்டு பிச்சையேற்கும் நிலைக்கு ஆளாவர் என்றுங்கடிந்து கூறுகிறார்.
அபிராமி அன்னை வணங்கித் தாம் பெற்ற பேறுகளையெல்லாம் உலகிற்கெடுத்தியம்பிய பட்டர் பெருமான், உலகோர் உய்திபெறுதற்கும் எளிய வழியினை எடுத்தியம்புகிறார். கயவர் தம்பால் ஒரு காலத்திலும் தம்மைச் செல்லாமை வைத்தவள் திரிபுரசுந்தரியென்றும், உலகோரே, நீங்களும் இல்லாமை சொல்லி ஒருவர் பால் சென்று இழிவு பட்டு நில்லாமை வேண்டின், எம்போன்று அவள் பாதங்களைப் பணிமின்கள் என்றும் இயம்புவது எல்லார்க்கும் இனிய, எளிய வழியேயாகும்.
சிவகாமசுந்தரியின் சீறடியைச் சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே என்ற சிறந்தவழியைக் கண்டுகொண்ட பட்டர்பெருமான், பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக் குழியில் அழுந்தும் கயவர் தம்மோடு இனிக் கூட்டுறவே இல்லை என்ற முடிவிற்கு வருதலும் இயல்பேயாகும்.
யான், எனது என்னும் செருக்கினை ஒழித்து ஆன்மசுத்தி பெற்ற பெரியோர், தம் வாழ்வில் எது சேரினும், எது நிகழினும் கவலையுறார். எல்லாம் இறையருளே என்று இறையின்பால் ஒப்புவித்துவிட்டு வாளாயிருப்பர். இத்தகையோருள் அபிராமி பட்டரும் ஒருவர். இதனை, ‘அபிராமி அன்னையே எனக்கென்று உள்ள எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட்டேன், ஆதலால் நன்று, தீது எது வரினும் அவற்றைப் பற்றி நானறிவது ஒன்றுமில்லை, உனக்கே நான் பாரம்’ என்பதால் அறியலாம்.
நூலின் இறுதியில் பட்டர்பெருமான், ‘முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஒரு தீங்கில்லையே’ என்று நூற்பயனை மட்டும் கூறினாரில்லை; தாம் பெற்ற பெரும் பயனையும், உலகோர் பெறவேண்டிய பெரும் பயனையும் கூறினார் என்றே கொள்ளுதல் வேண்டும். சுப.கோ.
அபிராமிபட்டர் அபிராமி அந்தாதி இயற்றிய ஆசிரியர் பெயராகும். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணிய ஐயர். ஊர், சோழ நாட்டிலுள்ள திருக்கடவூர். தந்தை பெயர் அமிர்தலிங்க ஐயர், அபிராமி என்பது திருக்கடவூர் அம்பிகை பெயராகும். இவர் அபிராமி அம்மன் கோயிலின் புகழ் பெற்ற அருச்சகராகக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சரபோசி மன்னர் காலத்தில் திகழ்ந்தவர், இவர் எழுதிய அபிராமி அந்தாதி பக்தி இலக்கியங்களுள் பெயர் பெற்ற ஒன்றாகும். இந்நூற்பாடல்களை ஓதிவரின் அம்மன் அருள் வாய்க்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.
அபிராமிபட்டரைப் பற்றிச் சில நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. அவர் அகத்தே, அம்பிகை மேல் பேரன்பினராகத் திகழ்ந்தார்; புறத்தே, குறையுடையவர் போல் காணப்பட்டார். அறிவினை மயக்கும் சில பொருள்களை உண்ணும் பழக்கத்தினராகவும் இருந்தார். எனவே, இவர்மேல் வெறுப்பு வளர்ந்தது.