உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபெர்டீன்

387

அம்காரா

சொல்லப்படுகிறது. இத்தொகுப்பு அக்பரின் ஆட்சிக் காலத்தை அறிய உதவும் வரலாற்றுச் சான்றாகப் பயன்படுகிறது. குறிப்பாக அக்பர் தக்காணத்திலுள்ள அரசுகளுடன் கொண்டிருந்த அரசியல் உறவை அறிய இத்தொகுப்பு உதவுகிறது. இவர் இயற்றிய பாரசீகப் பாக்கள் ‘சிந்தாமணிகள்’ என்றும், ‘சிந்தனைக் குவியல்கள்’ என்றும் பாராட்டப் பெறுகின்றன. “இந்திய முசுலிம் புலவர்களுள், அமீர் குசுருவுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கவர் பெய்சியே” எனப் பிளாக் மேன் (Black Man) என்ற புகழ்பெற்ற மேனாட்டு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். மு.அ.ர.

அபெர்டீன்: வட இசுகாட்லாந்திலுள்ள புகழ்மிக்க வாணிகத் துறைமுகப்பட்டினம். இது டீ (Dee) என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகுமிக்க நகரம். இங்குள்ள கட்டடங்கள் சாம்பல் நிறமான கருங்கற்களால் கட்டப்பட்டு அழகும் பளபளப்பும் மிக்கனவாக விளங்குதலால், இதனைக்கருங்கல் நகரம் என்றும், கடலையடுத்த வெள்ளி நகரம் என்றும் கூறுவர். காகித ஆலைகளும், நூற்பாலைகளும் இங்குள்ள சிறப்பான தொழிற்சாலைகளாகும். இந்நகரம் மீன் வாணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இந்நகரம் கி.பி. 700–இல் அமைக்கப்பட்டது; கி.பி. 1337–இல் தீவாய்ப்பட்டு அழிந்ததால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நகரம் கருங்கற்கள் வாணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இந்நகரம் 12–ஆம் நூற்றாண்டு முதல் 14–ஆம் நூற்றாண்டு வரை இசுகாட்லாந்திய மன்னர்களின் இருப்பிடமாக விளங்கி வந்தது. இம்மன்னர்களுள் இராபர்ட்டு புரூசு என்பவர், தாம் இழந்துவிட்ட அரியணையைத் திரும்பப் பெறச் செய்த முயற்சிகளுக்கு இந்நகரத்தினர் பெரிதும் உதவினர். இந்தப் பெயருள்ள நகரங்கள் அமெரிக்காவில் வடகிழக்கு மிசிசிப்பியில் ஒன்றும், தெற்குத் தக்கோட்டாவில் (South Dakota) ஒன்றும், கிரேசு ஆர்பரில் ஒன்றும் உள்ளன.

அபேதானந்த சுவாமி (கி.பி. 1866–1939) இராமகிருட்டின பரமஅம்சரின் சீடர். இவர் கி.பி. 1866–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 2–ஆம் நாள் கல்கத்தா நகரில் பிறந்தார். காளிப் பிரசாத் சந்திரா என்பது இவருடைய இயற்பெயர், தட்சிணேசுவரத்தில் இராமகிருட்டிணரின் அணுக்கச் சீடர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த இவர், காலப்போக்கில் பரமஅம்சரின் தெய்விக, சிறந்த கோட்பாடுகளைப் பரப்பக் கருவியாகத் திகழ்ந்தார். சொற்பொழிவாற்றும் திறம்படைத்த இவர், தம் சொல்லோவியத்தால் கேட்டவர்களைத் தம்பால் ஈர்த்துக் கொண்ட துறவி. இவர் 1939–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 8–ஆம் நாள் காலமானார்.

அம்காரா ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடிகளாவர். ஏறக்குறைய ஐம்பது இலட்சத்திற்கும் மிகுதியான அம்காரா (Amhara) பழங்குடியினர் இங்கு வாழ்கிறார்கள். எத்தியோப்பியாவின் மக்கள் தொகையில் இவர்கள் நான்கில் ஒரு பகுதியே ஆயினும், அந்நாட்டு அரசியலில் மேலாதிக்கம் கொண்டு விளங்குகின்றனர். இந்த

அம்காரா சமயத் தலைவன்

நிலையினை இவர்கள் அடைய நாட்டின் பல மாநிலங்களிலும் இருந்த பிரபுக்களோடு பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிறித்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அராபிய மக்கள் செங்கடல் வழியே எத்தியோப்பியாவிற்கு வந்து அங்கு முன்னரே குடியேறி இருந்த மக்களோடு கலந்திருக்கக் கூடும் என்பது கருதப்படுகிறது. கி.பி. 330–இல் எத்தியோப்பியாவில் ‘அக்சம்’ எனும் வடபகுதியை ஆண்டுவந்த அசானா என்னும்

வா.க. 1 - 26