உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி1

397

அம்பிகாபதி கோவை

கொடுத்தவர் என்று இவரைக் குறை கூறுவோருமுளர். அண்டை நாட்டு அரசரான போரசு என்பாரின் வலிமையைக் கண்டு பொறாமையும் அச்சமும் கொண்டிருந்த அம்பி. அலெக்சாந்தருக்கு அடிபணிந்தார், தமக்கு உறுதுணையாக நின்ற அம்பியை அலெக்சாந்தர், தட்ச சீலத்தின் முடிமன்னராக்கினார். மேலும் அவரைச் சீனாப் ஆறு சிந்துவுடன் கலக்கும் வரையிலுள்ள சிந்து சமவெளியின் ஆளுநராகவும் அமர்த்தினார். ஆனால் அவர் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் அவர் சந்திரகுப்த மௌரியரால் தோற்கடிக்கப்பட்டார். பஞ்சாபு பகுதி கிரேக்கரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.

அம்பிகாபதி1 கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன். தமக்குத் தம் பெற்றோர் ஏகம்ப நாதர் எனப் பெயரிட்டதுபோலத் தாமும் தம் மைந்தனுக்குச் சிவபெருமானுடைய பெயராகிய அம்பிகாபதி என்பதனைக் கம்பர் சூட்டினார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக விளங்கினார் என்றும், தம் தந்தை இயற்றிய கம்பராமாயணத்திற்குக் ‘கம்ப நாடன்’ எனத் தொடங்கும் சிறப்புப்பாயிரம் அளித்தார் என்றும், இவரது காலம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அம்பிகாபதி கோவை என்னும் அகப்பொருள் கோவையினை இவர் பாடினார் என்னும் கருத்தினை ஏற்க மறுப்பாருமுளர். தன் மகளை அம்பிகாபதி காதலிக்கும் செய்தியின் உண்மை அறிய விரும்பிய சோழ மன்னன், விருந்து ஒன்றினை அமைத்துத் தன் மகளை உணவு பரிமாற ஏவினான். அவளது தளர்ந்த நடைநிலை கண்ட அம்பிகாபதி, ‘இட்ட அடிநோவ’ எனத் தொடங்கிப் பாட முற்பட்டான். இரண்டடிகள் பாடக் கேட்ட கம்பர், தம் மகன் அதனை முடிக்குமுன்னர்க் ‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ என்று தொடர்ந்து, வேறு பொருளில் பாடி முடித்தார். மேலும் ஐயுற்ற மன்னன் அம்பிகாபதியின் மார்பில் சாந்து பூசித் தன் மகளிடம் சுண்ணம் பெற்று வர அனுப்பினான். அவளால் தழுவப்பெற்ற குறியறிந்து உண்மையுணர்ந்த மன்னன், நூறு பேரின்பப் பாடல் பாடினால் தன் மகளை மணஞ்செய்து கொடுப்பதாகக் கூறினான். அவையில் கடவுள் வாழ்த்திற்குப் பின் தொண்ணூற்றொன்பது பாடிமுடித்தபோது முடிந்ததென்று எண்ணி அரசகுமரி வெளிப்பட்டாள். அவளைக் கண்ணுற்ற அம்பிகாபதி ‘சற்றே பருத்ததனம்’ எனத் தொடங்கும் சிற்றின்பப் பொருளமைந்த பாடலைப் பாட சினங் கொண்ட அரசனால் அம்பிகாபதி கொலை செய்விக்கப் பெற்றான் என்றும், அரசகுமரியும் இறந்தாள் என்றும், கம்பர் சினந்து சோழ குலம் அழியப் பாடினார் என்றும், வரலாறு கூறப்படுகிறது. இவ்வரலாற்றின் உண்மை எவ்வாறாயினும் தமிழ் இலக்கிய உலகில் அம்பிகாபதி, அரசகுமரி ஆகியோரின் காதல், சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. அம்பிகாபதி பாடிய பாடல்கள் ‘பலதுறைக் காரிகை’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றை வேறு புலவர்கள் பாடியனவாகக் கூறுவாருமுளர். இவர் பாடிய பேரின்பப் பாடல்கள் இன்று கிடைக்கவில்லை.

அம்பிகாபதி2 பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். வீரசோழன் என்று வழங்கப்படும் வீரை நகரினராதலால் வீரை அம்பிகாபதி எனவும் வழங்கப் பெறுவார். அந்தணர் மரபில் தோன்றிய இவர் தந்தை பெயர் வீரைக்கவிராச பண்டிதர் எனப்படுவார். புலவர் புராண ஆசிரியரான தண்டபாணி சுவாமிகளும் ‘சவுந்தரிய லகரி’ப் பதிப்பாசிரியரான அனவரத விநாயகம் பிள்ளையவர்களும் இவர் கவிராச பண்டிதரின் மகன் என்னும் செய்தியினைக் குறிப்பிடவில்லை. இவர் பாண்டிய மன்னரொருவர்பால் இருந்தபோது, தென்காசி, மதுரை, நெல்லை, கருவை ஆகிய நான்கு ஊர்களும் அங்குள்ள இறைவன் இறைவியர் பெயர்களும் அமையத் தாம் கோயிலுக்குச் சென்று வருவதற்குள் பாடுமாறு அரசர் வேண்டினார். இவர் அத்தகைய பாடலை உடனே பாடியமை கேட்டுப் பாராட்டினார். புலமையை வியந்த அரசரின் கண்ணேறு பட்டுப் புலவர் இறந்தார் என்பது கூறப்படுகிறது. நெல்லை வருக்கக் கோவை, பராபரை மாலை, ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

அம்பிகாபதி3 அம்பிகாபதி கோவையினை இயற்றிய புலவர். இவர் கம்பர் மகன் அம்பிகாபதியினின்றும் வீரை அம்பிகாபதியினின்றும் வேறானவர் என்றும் கூறுவர். அம்பிகாபதி கோவைச் செய்யுள்களை இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் மேற்கோளாக எடுத்தாள்வதால் இவருடைய காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.

அம்பிகாபதி4 தமிழில் தண்டியலங்காரம் இயற்றிய தண்டி என்பவரின் தந்தை அம்பிகாபதி என்று பேசப்பெறுகிறார். இவர் காவிரி நாட்டினைச் சேர்ந்தவர் என்பதனைப் ‘பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு வம்பவிழ் தெரியல் அம்பிகாபதி’ என்று தண்டியலங்காரப் பாயிரப் பகுதி உணர்த்துகிறது.

அம்பிகாபதிகோவை கோவை என்னும் சிற்றிலக்கிய வகையினைச் சார்ந்த நூலாகும். கோவை என்பது அகப்பொருள் இலக்கண மரபை ஒரு கோவைப் பட விளக்கிக் கூறும் சிற்றிலக்கிய வகையாகும். இந்நூல் பிற கோவை இலக்கியங்களின் அடிப்படையிலமைந்து, நம்பியகப் பொருள் என்றும் இலக்கண நூல் கூறும் அகத்திணைத் துறைகளை நிரல்பட விளக்கி நிற்கிறது.

இந்நூலின் பெயர்க் காரணத்தை ஆராய நூலினுள் அகச்சான்று இல்லை. அவையடக்கத்தில்