அம்பிகை பாகர்
399
அம்பேத்கர்
இந்நூலுள் காணப்படும் குறைபாடுகள் சில உள. இந்நூலாசிரியர் நூல் முழுவதற்கும் ஒரு தொடர்பு காட்டும் நோக்கமோ முழுப் பார்வை பார்க்கும் விருப்பமோ கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அறத்தொடு நிற்றல் என்ற இயலில், தலைவி தலைவனோடு தான் கொண்ட காதல் உறவைத் தோழிக்கு அறிவிப்பதாகத் துறை ஒன்று உள்ளது. ஆனால் பகற் குறி, இரவுக் குறிகளில் எல்லாம் தோழி, தலைவனையும் தலைவியையும் முன்னர்க் கூட்டி வைத்ததாக நூலின் முற்பகுதியில் பாடல்கள் உள்ளன. அதே போன்று, உடன் போய தலைவன் தலைவியர் மீண்ட மீட்சி பற்றிக் குறித்த புலவர், அடுத்த இயலில் உடன் போக்கில் தோன்றிய இடையீடு பற்றிப் பேசியுள்ளார். நூலை முழுமையாக நோக்காததால் தோன்றிய இம்முரண்பாட்டிற்கு, இலக்கண இயல்களை விளக்கும் உட்கிடக்கை கொண்டு ஆசிரியர் நூலின் பொருளமைதியை அமைத்துக் கொண்டமையினைக் காரணமாக்கலாம் போலும். நம்பியகப் பொருளின் இலக்கணத் துறைகளுக்கு ஏற்ற, மிகப் பொருந்தி வருகின்ற எடுத்துக்காட்டுப் பாடல்களை எழுதுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி நின்றமையும் ஒரு காரணமாகும். ஆ.இரா.
அம்பிகை பாகர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவில் இவர் ஊராகும்; வேளாள மரபினர். ஆறுமுக நாவலரவர்கள்பால் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், கந்த புராணம் தணிகைப் புராணம் போன்ற சமய இலக்கிய நூல்களையும் கற்ற இவர், இணுவில் நடராசையர் என்பாரிடம் சைவசித்தாந்த சாத்திரங்களைப் பயின்றார். தாமோதரம் பிள்ளையவர்களோடு தமிழகம் போந்து, அவர் மேற்கொண்ட நூல் வெளியீட்டுப் பணிக்கு உதவினார். தம் ஊரில் தமிழ்க் கல்விக்கூடம் ஒன்று நிறுவிக் கல்வித் தொண்டு புரிந்தார். இணுவை அந்தாதி என்னும் நூலை இயற்றினார். மேலுமிவர் சூளாமணி வசனம் என்னும் உரைநடை நூலும், தணிகைப் புராண உரையும் இயற்றியுள்ளார்.
அம்பிரியா இத்தாலியிலுள்ள ஒரு மாநிலம். இதன் வடமேற்கே தசுக்கனியும் (Tuscany) வடகிழக்கில் மார்சசும் (Marches) தென்கிழக்கிலும் தென் மேற்கிலும் இலாட்டியமும் (Latium) எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 8,456 சதுர கி.மீ. மக்கள்தொகை 8,03,988 (1981). இங்குள்ள மிகப் பெரிய நகரங்கள் பெருகியா (Perugia)வும் தெர்னி (Terni)யும் ஆகும். பெருகியா இம்மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகிறது. அம்பிரியா (Umbria) மலைப்பாங்கான செழிப்புள்ள மாநிலம். இரும்பு, எஃகு, சணல், இரசாயனப் பொருள் தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகள் இங்குள்ளன. கைவினைப் பொருள்கள் தயாரித்தல், மரச்செதுக்கு வேலைப்பாடு, மட்பாண்டத்தொழில் போன்றவை இங்கு நடைபெறும் சிறுதொழில்களாகும். இம்மாநிலத்தில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவை பொலிக்னோ (Poligno), சுபாலிடோ (Spoleto), ஓர்விடோ (Orvieto), அசிசி (Assisi), தோடி (Todi), சிட்டா–டி–கேசடிலோ (Citta di Castello), கூபியோ (Gubbio) போன்ற நகரங்களாகும். இவற்றைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாட்டின் வருவாய் பெருகியுள்ளது.
இந்நகரத்தில் அம்பிரியர் என்னும் பழங்குடியினர் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வருகின்றனர். எபிருசுக்கர்களும் (Epiruscans) இங்கு வாழ்ந்தனர். ஆனிபால் (Hannibal) என்னும் வட ஆப்பிரிக்காவைச் சார்ந்த படைத்தலைவர் இப்பகுதியை வென்றார். இம்மாநிலம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியது. இம்மாநிலம் கி.பி. 1808–ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இது கி.பி. 1861–ஆம் ஆண்டு இத்தாலியுடன் இணைந்தது.
அம்பேத்கர் இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கிய பேரறிஞர்; அரிசன மக்களின் தனிப் பெரும் தலைவர். மராட்டிய மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் மோ என்னும் வட்டத்தில் அம்பாவடே என்னும் சிற்றூரில் இவர் 1891–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 14–ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் இராம்சி மலோசி சக்பால்; தாயார் பெயர் பீமாபாய். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இராம்சி சக்பால் இராணுவப் பணியால் ‘சுபேதார் மேசர்’ என்னும் தகுதியைப் பெற்றார். இவர்களுக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தன. பதினான்காம் குழந்தையாகப் பிறந்தவரே ‘பீமாராவ் இராம்சி’ என்று அழைக்கப்பட்ட அம்பேத்கர் (Ambedkar).
தீண்டாமைக் கொடுமை, அறிவுக் கோயிலான பள்ளியிலும் குடிகொண்டிருப்பதைப் பீமாராவ் இராம்சி கண்டார். பள்ளியில் மாணவர்கள் உட்கார மரப்பலகைகள் உண்டு. ஆனால், உயர்ந்த சாதி மாணவர்களே அவற்றில் உட்காரலாம். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியின் ஒரு மூலையில் கோணிப் பையைத் தரையில் விரித்து உட்கார வேண்டும். ஆசிரியர்களோ உயர்சாதி மாணவர்களோ தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களைத் தீண்ட மாட்டார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருள்களையும் தொட மாட்டார்கள். அரசுக்குச் சொந்தமான எல்பின்சுடன் (Elphinston) உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அம்பேத்கர் தீண்டாமையால் பல்வேறு கொடுமை-