அம்மானை
404
அம்மானை வரி
பல்வரிக் கூத்து என்று வகைப்படுத்தினர் புலவர். சாழல், கழல், தெள்ளேணம், உந்தி முதலிய மகளிர் விளையாடல்கள் இந்தப் பல்வரிக் கூத்தில் சேர்ந்தவை. நாட்டுப்பாடலாக வழங்கும் அம்மானைப் பாட்டே அம்மானை வரியாகும். இந்தப் பாடல்கள் கற்பனையாக அமையும். அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு அப்பொழுதே பாடல்கள் புனைந்து பாடப்படும். சில பாடல்கள் அவர்கள் நினைவிலிருந்தும் வரலாம். இந்த அமைப்பைப் பின்பற்றியே புலவர்கள் இலக்கியங்களில் அமைத்தார்கள். அத்தகு வகையில் இப்பொழுது கிடைப்பனவற்றுள் மிகப்பழமையானது சிலம்பில் இடம்பெற்றுள்ள அம்மானை வரியாகும். அதன் வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழ் பாடும் பாங்கில் அமைந்த அம்மானை வரிப்பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும் பொழுது ஒரு பெண் ஒரு கேள்வி கேட்பதும், மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்லுவதுமாக அமைந்துள்ளது இவ்வரிப் பாடல்.
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற ஓர் உறுப்பு உண்டு. அது மூன்று பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கும். விளையாட்டைத் தொடங்கும் பெண் ஒரு செய்தியைச் சொல்ல, இரண்டாமவள் ஒரு வினாவை எழுப்புவாள். மூன்றாமவள் அதற்கு விடை கூறுவாள். அவள் விடையில் பெரும்பாலும் சிலேடை நயம் அமைந்திருக்கும். இவ்வகையில் சில புலவர்கள் தனித்தனியே பல அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலியவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இத்தகு பாடல்களையெல்லாம் தொகுத்து மூவர் அம்மானை என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்கள். பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவாகவே உள்ளன.
அம்மானை என்னுஞ் சொல் பொதுவாகத் ‘தாய்’ என்னும் பொருளைத் தருகிறது. பேச்சு வழக்கில் அம்மா என அழைப்பது போல இலக்கிய வழக்கில் ‘அம்மானை’ என வருகிறது. பாட்டின் முடிவில் ‘அம்மானாய்’ என வருவதால், இப்பாட்டும் விளையாட்டும் அம்மானை என்னும் பெயரைப் பெற்றதாகலாம்.
இவ்விளையாட்டினை மூவர் ஆடாமல் இருவர் மட்டுமே ஆடுவதை ‘மனோன்மணீயம்’ சுட்டுகிறது. ஒருத்தி மட்டுமே ஆடுவதாகத் திருவாசகத்தில் உள்ள திருவம்மானைப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். அண்ட முதல் ஆன செம்மேனியானை, கண்டம் கரியானை, துண்டப் பிறையானைப் பாடுவதாக அமைகிறது. விளையாடிக் கொண்டே அப்பாலுக்கு அப்பாலுமாய் விளங்கும் இறைவனிடம் சிந்தை சேரும் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் மணிவாசகர்.
சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகிய பின்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் ஒரு பருவமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்டிர்க்கே உரியதாகும். பாட்டுடைத் தலைவியைத் தாயரும், செவிலியரும் அம்மானை ஆடும்படி சொல்லும் முறையில் இப்பருவப் பாடல்கள் அமைந்திருக்கும். ஆசிரிய விருத்தங்களாகப் பாடல்கள் அமையும்.
அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை போன்ற கதைப்பாட்டுகளும் அம்மானை வரிசையில் அமைந்துள்ளன. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை, கித்தேரி அம்மன் அம்மானை, ஆண்டவன் அம்மானை போன்றன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். நாடோடிப் பாடல் இயல்புகள் அம்மானைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கொச்சை மொழிகள், அனைவருக்கும் விளங்கும் உவமைகள், உலக வழக்குச் சொற்கள், ஒரு குறிப்பிட்ட சொல்லையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், சில வகையான அமைப்புகள் போல்வன அம்மானைப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.
அம்மானைப் பாடல்கள் பொழுது போக்குக்காக எழுந்தவையெனினும் அவற்றின் வளர்ச்சி பக்தியையும். தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது. சு.சி.
அம்மானை வரி என்பது சிலப்பதிகாரக் காலத்திற்கும் முன்னரே இருந்து தமிழகத்தில் விளங்கிய இசைப்பாட்டு வகையாகும். அம்மானை என்னும் விளையாட்டினை மகளிர் விளையாடும் பொழுது அவர்கள் பாடிய பாட்டு—அம்மானை வரிப்பாட்டு. இப்பாடலின் ஈற்றடியில் “அம்மானை” என்னும் சொல் வரப்பெறும். இப்பாடல் — ஆடற்பாடல்; பண்ணுடன் கூடியது; தாளத்திற்குப் பொருந்தப் பாடப்படுவது. இதனைப் பாடும்பொழுது பாடலின் அடிகள் மடக்காகவும், வினாவை எழுப்புவனவாகவும், வினாவிற்கு விடை பகர்வனவாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
அம்மானை வரிப்பாட்டு என்பது தெய்வத்தையோ மாந்தரையோ இயற்கையையோ புகழ்ந்து பாடப்படுவது. இது சிற்றூர் மகளிரின் ஆடல்வரிப் பாட்டு. அம்மானை அம்மனை அம்மானைவரி என்றும் வழங்கப்பெறும் (சிலப். 3:13) பல்வரிக்கூத்து); “அம்மனை பந்து, கழங்கு ஆடல் ஆலிக்கும் ...... கோத்தவரிக் கூத்தின் குலம்” என்று–சிலப்பதிகார