உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமர்நாத்

409

அமர்நீதி நாயனார்

இவர் அமைத்த பெருங்கிணற்றில் இவர் சீடர்கள் குளித்துத் தம் பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சொன்னார். இப்பெருங் கிணறானது இவர் செய்துள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும். சீக்கியர்கள் பிரயாகை, அரித்துவாரம், வாரணாசி, பூரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட புனித நீராட்டினை விட்டு அமர்தாசரின் புனித கிணறான படோலியில் குளித்தனர். இலவச உணவு மையம், தீண்டாமையை ஒழித்து எல்லா இனத்தவரையும் அரவணைத்து உணவு வழங்கிற்று. மக்கள் எளிமையாகக் கொண்டாடப் புதிய பிறப்பு, இறப்புச் சடங்குகள் பின்பற்றப்பட்டன. இவர் பஞ்சாபி மொழியை அனைவரும் அறியும்படி செய்தார். மக்கள் அறிந்த மொழியால் அறக்கருத்துகள் கற்பிக்கப்பட்டதால் மக்கள் பலர் அவற்றைப் பின்பற்றலாயினர். இவர் மது அருந்துவதை ஒழித்தார். இவர் புதியதொரு வணக்கமுறையைப் பின்பற்றினார். சீக்கியர்கள் ஒருவரையொருவர் சந்தித்தபோது அவ்வணக்க முறையைக் கடைப்பிடித்தனர்.

சீக்கிய சமயம் வளர்ச்சிபெற, அமர்தாசரின் அறிவுரைகள் ஒரு திருப்பு மையமாக அமைந்தன எனில் மிகையாகாது. வழக்கொழிந்த பழைய செயல் முறைகளைக் கைவிட்டுப் புதிய நெறிமுறைகளை இவர் புகுத்தலானார். இவர் காலத்தில் பிள்ளைப் பருவத்தில் இருந்த சீக்கிய சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுப் பெரும்பாலான இடங்களில் பரவிற்று. இந்துக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து சீக்கியர்கள் விடுபட்டனர். சீக்கிய வாழ்க்கை முறையைத் தனியானதொரு சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமயமாக உருப்பெறச் செய்தமைக்கு அமர்தாசரே காரணமாவர். தி.வீ.

அமர்நாத் சம்மு–காசுமீர் மாநிலத்தின் தென் பகுதியில் சிரீநகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள இமயமலை நகரம். இதன் உயரம் 5774 மீட்டர்களாம். இயற்கையழகு மிக்க அமர்நாத் இந்துக்களின் புண்ணியத்தலங்களுள் ஒன்று. அங்கு 4635 மீட்டர் உயரத்தில் 50 மீட்டர் அகலமும் 30 மீட்டர் உயரமும் கொண்டதொரு குகை உள்ளது. இங்குள்ள பனிக்கட்டி இலிங்கம் சந்திரனின் கலைகளுக்கேற்ப உருமாறும் தன்மை கொண்டது. ஆண்டுதோறும் ஆவணி மாத முழுநிலவன்று இந்த இலிங்கம் மிகப் பெரும் தோற்றம் அளிக்கிறது. இதை வழிபடப் பல்லாயிரவர் பொறுக்க முடியாத கடுங்குளிரையும் போக்குவரத்து வசதிகள் குறைந்த வழிகளையும் கடந்து இறைநோக்குடன் பன்னூறு ஆண்டுகளாக இங்கு வருகின்றனர்.

பயணிகள் பகல்கம் (Pahalgam) என்னுமிடத்தில் தங்கிப் பயணத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு கால்நடையாகப் பயணம் மேற்கொள்வர். பணம் படைத்தோர் தூக்கும் நாற்காலிகளில் அமர்ந்தோ பல்லக்கு, குதிரை மீதோ பயணம் செய்வர்.

பகல்கம் என்னுமிடத்திலிருந்து 20 கி.மீ. சென்றால் வழியில் சேசநாகம் (Seshnag) என்னும் எழில் மிகுந்த ஏரி வரும். பயணிகள் இங்குத் தங்கிக் களைப்பாறுவர். அமர்நாத் செல்லும் வழியில் தென்படும் ஓடைகளில் வரும் குளிர்ந்த நீரில் நீராடும் பழக்கமும் பலரிடமுண்டு. சிவன் பெயரைக் கூறிக்கொண்டு அமர்நாத்தைப் பயணிகள் நெருங்கும் காட்சி உணர்ச்சி மிக்கது. ஆண்டுச் செல்வோர் பனிக்கட்டி இலிங்கத்தை வழிபட்டுத் திரும்புவர்.

அமர்நீதி நாயனார் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் சோழ நாட்டில் பழையாறு என்னும் ஊரில், வணிக மரபில் தோன்றியவர். வணிகத்தால் பெற்ற பெருஞ் செல்வங்கொண்டு, சிவனடியார்கட்கு உணவும், உடையும், கோவணமும் உதவுதலைத் தம் கடனாகக் கொண்டு ஒழுகி வந்தார். திருநல்லூரில் விழாக் காலங்களில் சிவனடியார்கட்கு, உணவளிக்கத் திருமடம் அமைத்தார். ஒரு சமயம் சிவபெருமான் இவர் அன்பினைச் சோதிக்க, அந்தணப் பிரமசாரியாகத் திருநல்லூர்த் திருமடம் வந்தார். நாயனார் இவரை உணவருந்த வேண்டியபோது, காவிரியில் நீராடி வருவதாகச் சொல்லி, இவரிடம் தாம் கொண்டு வந்த கோவணத்தை வைத்திருக்கும்படி சொல்லிச் சென்றார். அவர் சென்றவுடன் அக்கோவணம் மறைந்தது. திரும்பி வந்து பிரமசாரி தம் கோவணத்தைக் கேட்ட போது நாயனார் காணாது வருந்திப் புதிய கோவணம் கொடுக்க முன்வந்தார். தம்மிடமுள்ள பிறிதொரு கோவணத்தைக் கொடுத்து அதன் எடைக்குத் தக்கதனைத் தமக்குக் கொடுக்குமாறு பிரமசாரி கூறினார். அதனைத் துலாக்கோலின் ஒரு தட்டில் இட்டு, மற்றொரு தட்டில் தம்மிடமுள்ள பொருள் அனைத்தையும் அமர்நீதியார் வைத்தும் அத்தட்டுத் தாழவில்லை. பிறகு அந்தணரை வணங்கி, நாங்கள் அன்பினில் திருவெண்ணீற்று மெய்யடிமை பிழைத்திலோமென்றால் இத்தட்டு நேர்நிற்க வேண்டும் என்று சொல்லி, ஐந்தெழுத்தினை ஓதித் தாமும், தம் மனைவியும், மகனும் தட்டில் ஏறினர். தட்டு இப்போது ஒத்து நேர் நின்றது. உடனே சிவபெருமான் காட்சி கொடுத்து அவர்களைத் தம் உலகுக்கு அழைத்துக் கொண்டார். இவர் முத்தியடைந்த நாள் ஆனிப் பூசம். இவர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு முற்பட்டவர். திருநாவுக்கரசர், தம் தேவாரத்தில் இவரைப் பாடியுள்ளார்.