உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமித்திரகட்டா

415

அமிர்தகவிராயர்

இவற்றை நீண்ட ஒலியாகவும் பாடலாம். காண்க: இசை

அமித்திரகட்டா, மௌரிய அரசர் பிந்துசாரரின் விருதுப் பெயர், பிந்துசாரர் சந்திரகுப்த மௌரியனின் மகனும், அசோகரின் தந்தையுமாவார். மித்திரன் என்றால் நண்பன்; அமித்திரன் என்றால் பகைவன்; கட்டா என்றால் கொன்றவன் என்பது பொருள். பிந்துசாரர் தம் பகைவர்களை அழித்ததால் அவரை ‘அமித்திரகட்டா’ என்று கிரேக்க நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேக்க நூலாசிரியர் அதேனாய் என்பவர் பிந்துசாரரை அமித்திரசேடசு என்றும், அல்லிட்ரோசோடசு என்றும் கூறுவர். மேற்கூறிய இரு சொற்களும் அமித்திரகட்டா என்னும் வடமொழிச் சொற்களின் திரிபாகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

அமிதசாகரர் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரு யாப்பு நூல்களைச் செய்தவர். இவரை அமிதசாகரர், அமுதசாகரர், அமிர்தசாகரர் எனப்பலவாறாக வழங்குகின்றனர். ஆனால் ‘அளப்பருங் கடற்பெயர் அமிதசாகரர்’ என்னும் தொடர் கொண்டு அமிதசாகரர் என்னும் பெயரே சரியான வழக்கு என்பது நிறுவப்பெற்றுள்ளது. குணசாகரர் என்பவர் இவர் ஆசிரியர் என்று தெரிகிறது. இவர் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியரான குணசாகரரின் வேறானவர் என்பர். இவர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.

யாப்பருங்கலத்திலும், யாப்பருங்கலக்காரிகையிலும் அருகதேவனுக்கு வணக்கங் கூறுகின்றமையால் இவர் சமணராவர். சமண சமய சங்கங்களுள் ஒன்றாக விளங்குகிற நந்திக்கணத்தின் ஒரு கூறாகிய அருங்கலான்வயம் என்ற பிரிவினை இவர் சார்ந்தவர். இப்பிரிவினர் மிகுதியாக வாழ்ந்த இடமாகிய திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊலில் வாழ்ந்த துறவியாக இவர் இருத்தல் கூடும். இவர் துறவி என்பதை ‘அமிதசாகரமுனி’ எனவும் ‘அருந்தவத்தோன்’ எனவும் வழங்கப் பெறும் தொடர்கள் உணர்த்துகின்றன.

யாப்பருங்கலக்காரிகையை இவர் அரங்கேற்றிய இடம் தொண்டை நாட்டிலுள்ள குளத்தூர் என்பது நீடூர்க் கல்வெட்டுகளால் அறியப்பெறுகிறது. அதன் பின்னர் இவ்வூர் காரிகைக்குளத்தூர் என்றே வழங்கப் பெறுகிறது.

யாப்பருங்களம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இருநூல்களும் யாப்பைப் பற்றி மட்டுமே இலக்கணங்கூறுகிற நூல்களாகும். தொல்காப்பியம் செய்யுளியலைச் சில இடங்களில் தழுவியும், சில இடங்களில் வேறுபட்டும், இந்நூல்களிரண்டும் செய்யப்பெற்றுள்ளன. சங்கயாப்பு, காக்கை பாடினியம், அவிநயம் போன்ற பல்வேறு நூல்கள் அமிதசாகரருக்கு முன் வழங்கிவந்தன என்பது இந்நூல்களின் உரைகளுள் காணப்பெறும் எடுத்துக் காட்டுகளால் விளங்குகிறது.

யாப்பருங்கலம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாகச் செய்யப்பெற்றுள்ளது. அவற்றின் உறுப்பியல் எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்னும் ஆறு ஓத்துகளையும், ஐம்பத்து மூன்று நூற்பாக்களையும் கொண்டுள்ளது. செய்யுளியலில் நாற்பது நூற்பாக்களும், ஒழிபியலில் மூன்று நூற்பாக்களும் உள்ளன.

யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலத்தினைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்யப்பெற்ற நூலாக அமைந்துள்ளது. இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையால் செய்யப்பெற்றுள்ளது. இது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களில் நாற்பத்து நான்கு காரிகைகளால் (கட்டளைக் கலித்துறை) ஆக்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியச் செய்யுளியல் அசை, சீர்களுக்குரிய வாய்பாடுகளை வகுத்துரைக்கவில்லை. ஆனால் காரிகை ஆசிரியர் வாய்பாடுகளை எளிமையாக மனங்கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார்; தளையின் இலக்கணத்தையும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். இவர் காலத்தில் வளர்ந்த பாக்களின் வகைகளையும் இனங்களையும் இனங்கண்டு கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார். வண்ணங்களை நூறு என வகுத்துக் காட்டியுள்ளார். பிற்கால யாப்பு நூல்களால் பெரிதும் பின்பற்றப்படுவதாக இந்நூல் விளங்குவது குறிப்பிடத்தக்கது. சு.சு.

அமிர்தகவிராயர் இராமநாதபுர அரசரான சேதுபதியின் அவைப் புலவர்; இராமநாதபுர மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் பொன்னாங்கால் என்னும் ஊரினர்; வேளாண் மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். கி.பி. 1646 முதல் கி.பி. 1672 வரை இராமநாதபுரத்தை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் அவைப் புலவராக விளங்கினார்.

திருமலை சேதுபதி பெருங்கல்வியாளர்; இசையில் ஈடுபாடுள்ளவர். ஒருநாள் மாலைப் பொழுதில் தம் புலவர் பெருமக்களோடு பூங்காவில் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த சேதுபதி புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றிப் பல பாடல் பாட இயலுமா? எனக் கேட்டார். அதற்கு ஒவ்வொரு புலவரும் பத்து, இருபது, முப்பது எனக்கூற, அமிர்த கவிராயர் ‘நான் நூறுபாடுவேன்’ எனக் கூறினர். அதனைச் செவிமடுத்த புலவர்கள்