உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க இலக்கியம்

428

அமெரிக்க இலக்கியம்

யூத இன எழுத்தாளரும், நடுத்தர வகுப்பினரின் ஒழுக்க முறியினைக் (Moral Bankruptcy) கண்டனம் செய்த “பீட்” (Beat) இயக்க எழுத்தாளரும், பெண்மை எழுச்சி இயக்க எழுத்தாளரும், இருள்சூழ் நகையியல் (Black Humour) எழுத்தாளரும், அமெரிக்கருக்கே உரித்தான ஆடல் பாடல் உரை (Musical Comedy) நிரம்பிய பொழுது போக்கு எழுத்தாளரும் தோன்றினர்.

பொதுப்போக்கும் கோட்பாடுகளும்: அமெரிக்க இலக்கியம் தோன்றிய காலம் இடைக்கால ஆங்கில மொழி மாறி, இன்று வழங்கும் ஆங்கிலம் உருவான காலம். கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறிய பெரும் பண்ணையாளர், புதுப்புலம் தேடி ஆய்வோர் (Explorers) ஆகியோர், தாம் இலக்கியப் படைப்பாளர் என்ற எண்ணமில்லாமலும், பயன் நோக்கம் கருதியும் உருவாக்கியவையே அவர்தம் தொடக்கக்கால இலக்கியங்கள். பயண இலக்கியம், பருவ இதழ்கள், கவிதை ஆகியவை அன்றைய இலக்கிய வகைகள் ஆகும்.

தூய்மைக் கோட்பாடு (Puritanism), மரபுக் கோட்பாடு (Anglicanism), கத்தோலிக்கச் சமயக் கோட்பாடு (Catholicism), நண்பர் கழகச் சார்புக் கோட்பாடு (Quakerism) என்ற கோட்பாட்டுச் சுற்றோட்டத்தில் அவ்விலக்கியங்கள் தோன்றின.

18–ஆம் நூற்றாண்டு: இனி, கி.பி. 18–ஆம் நூற்றாண்டில், ‘நாம் அமெரிக்க நாட்டினர்’ என்ற உணர்வு மெல்ல மலர்கிறது. அமெரிக்கப் புரட்சிப் போர்க் காலம் வந்ததும், தாம் வந்தேறு குடியினர் என்ற மனப்பாங்கு மறையத் தொடங்கிற்று. இக்கால இலக்கிய வகைகளாக நிகழ்ச்சிப் பதிவுகள், அன்றாடக் குறிப்பேடுகள், சமய, அரசியல் கட்டுரைகள், கவிதை, அங்கத இலக்கியம், ஒழுக்க முறைமை சார்ந்த கதைகள், நெடும் புனைகதைகள், நாடகங்கள் ஆகியவற்றைக் கொள்ளலாம்.

கலைத் தொழிலாளர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் எழுத்துப் பணியைப் பிழைப்புக்குரிய வழியாகக் கொண்டனர். எனினும், எழுத்தாளர் பலர் இலக்கியத்தைத் துணைத் தொழிலாகவே கருதினர். இக்கால இலக்கியங்கள் மேலெழுந்த சில தனிக் கொள்கைகள் (isms), தேசியக் கோட்பாடு (Nationalism), கட்டற்ற கற்பனைப் பண்புக் கோட்பாடு (Romanticism) புலன் நுகர்வு கடந்த அறிவு மூலக் கோட்பாடு (Transcendentalism), புறவாய்மையியல் கோட்பாடு (Realism) – புலனால் அறியப்படும் பொருள்களுக்குப் புறவாய்மை உண்டு எனும் கொள்கை, வட்டார மரபுக் கொள்கை (Regionalism) முதலியவற்றைக் கொண்டிருந்தன. மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையையே பின்பற்றும் இயற்கைக் கோட்பாடு (Naturalism) இந்நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது.

20–ஆம் நூற்றாண்டு: இனி 20–ஆம் நூற்றாண்டில், இலக்கியப் போக்கில், இடையிடையே சுருக்கிக் கூற இயலாதபடி உள்ளார்ந்த தனி நலத்தரமும் (Individuality), வியத்தகு பரந்த இலக்கெல்லையும் (Large Scope). அதனுள் வகை வளமும் (Variety) மிக்க பெருந்திறல் எழுத்தாளர் பலர் தோன்றினர்.

இறைவன் புகழ் பாடல் ஒருபுறமும், இலக்கற்ற அகநிலைச் சோர்வு மறுபுறமும் வலித்திழுக்க, இந்த இழுவையாடலின் மேலெழுந்த தனிக் கொள்கைகள் (Isms) பல இந்நூற்றாண்டில் தோன்றின. இந்தக் கோட்பாட்டுச் சுற்றோட்டங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வடிவமும் வெவ்வேறு அசையழுத்தமும் (Emphasis) ஏற்பட, வளத்திற்கு வாய்ப்புப் பெருகியது. போர், இனவெறுப்பு, இலக்கற்ற அகநிலை (Spiritual Aimlessness), உணர்வுத்தொய்வு (Depression) போன்ற கேடுகள் எழுத்தாளர்களின் பாடுபொருள்கள் ஆயின.

படைப்பாளர்: இன்கிரீசு மாத்தர் (Increase Mather), காட்டன் மாத்தர் (Cotton Mather) ஆகிய தந்தையும் மகனும் நூற்றுக் கணக்கான சமய ஆய்வுக் கட்டுரை (Tracts)களாலும், சமய மேடைப் (Pulpit) பேச்சுகளாலும் சமயச் சார்பு ஆட்சியை (Theocracy) நிலைநிறுத்த அரும்பாடுபட்டனர். காட்டன் மாத்தர் மட்டும் ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றுள் சிறந்தது “அமெரிக்காவில் கிறித்து ஆற்றிய அற்புதங்கள்” (Magoalia Christi Americana) எனப் பொருள்படும் 1200 பக்கங்களையுடைய இந்நூல் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியதாகும். ஓமர் (Homer), மில்டன் (Milton) ஆகியோர் எழுதிய வீரமகா காவியங்களை விட இஃது அளவில் பெரியது. வீரகாவியம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பாத்திரப் பண்போவியம், புலம்பற் காவியம் (Jeremiad) ஆகிய இலக்கியக் கூறுகளை இஃது உள்ளடக்கியது.

தனித்தூய்மைச் சமயப் பிரிவினருள் (Puritans) தலையாய சொற்பொழிவாளர் சோனாதன் எட்வர்ட்சு (Jonathan Edwards) ஆவார். சில வேளைகளில் சமயப் பற்றுடையோர்க்கு உள்ள இசிவு (Hysteria) ஏற்படும் வண்ணம், பேரூழி மீளாப் பெருநரகு பற்றி இவர் சித்திரிப்பார். மற்றும், இவர் ‘மிகப்பெரிய விழிப்பூட்டல்’ (The Great Awakening) என்ற இயக்கத்தின் தலைவராவார்.

இக்காலத்துக் கவிதைகளும் சமயச் சார்புடையனவே. முதன் முதலாக அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட நூல் ‘தெய்வப் புகழ் மாலை’ (The Bay Psalm Book) ஆகும்.