உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடு

434

அமெரிக்க ஐக்கிய நாடு

களும் ஆறுகளும் சமவெளிகளும் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடு, ஆறு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. 1. அட்லாண்டிக்கு மற்றும் வளைகுடாக் கடற்கரைச் சமவெளி, 2. அப்பலேச்சியன் மேட்டு நிலங்கள், 3. உள்நாட்டுச் சமவெளிகள், 4. இராக்கி மலைகள், 5. உள்நாட்டு மேட்டு நிலங்கள், 6. பசிபிக் கடற்கரை.

1. அட்லாண்டிக்கு மற்றும் வளைகுடா கடற்கரைச் சமவெளி: இது மசாசுசெட்சு மாநிலத்திலிருந்து தெக்சாசு (Texas) மாநிலம் வரை பரவியுள்ளது இதன் அகலம் பத்துக் கிலோ மீட்டரிலிருந்து 800 கிலோ மீட்டர் வரை உள்ளது. இப்பகுதியில் இரியோகிராண்டி; கொலராடோ, பிராசோசு, இரெட், மிசிசிப்பி அலபாமா, அலடமகா, சவன்னா, போடோமேக், தெலாவர் (Delaware), அட்சன் முதலான ஆறுகள் ஓடுகின்றன. மணற்பாங்கான கடற்கரைகளும், வளைகுடாக்களும் சிறிய தீவுகளும் இப்பகுதிக்கு அழகூட்டுகின்றன. அமெரிக்காவின் சிறந்த நகரங்களான பாசுடன், நியூயார்க்கு, பிலடெல்பியா, பால்டிமோர், வாசிங்டன், நியு ஆர்லியன்சு முதலானவை இங்கே அமைந்துள்ளன.

2. அப்பலேச்சியன் மேட்டு நிலங்கள்: அலபாமா மாநிலத்திலிருந்து மெயின் மாநிலம் வரை இப்பகுதி பரவியுள்ளது. வடகிழக்கிலுள்ள நியு இங்கிலாந்து பகுதியில் பரந்த மலைகளும் 4000 அடிக்குமேல் உயர முள்ள மலையுச்சிகளும் உள்ளன. மேற்கே அல்லிகெனி மலைகளும், அதன் தென்கிழக்கே பாறைத் தொடர்களும், பீட்மாண்டு மேட்டு நிலமும் இருக்கின்றன. தென்னசி (Tennessee), ஒகையோ முதலான ஆறுகள் இப்பகுதியிலிருந்து தொடங்குகின்றன.

3. உள்தாட்டுச் சமவெளிகள்: இப்பகுதி நாட்டின் மிகப்பெரிய இயற்கை அமைப்புப் பகுதியாகும்; கிழக்கு மேற்காக 1900 கி.மீ. தூரமும், வடக்கு தெற்காக 2100 கி.மீ. தூரமும் பரவியுள்ளது. முக்கிய ஆறுகளான மிசிசிப்பி, மிசூரி, பிளேட்டு, அர்கன்சாசு முதலானவை இங்கே ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான உணவுப் பயிர்களும் வணிகப் பயிர்களும், இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.

4. இராக்கி மலைகள்: வடக்கே கனடா நாட்டிலிருந்து தெற்கே நியூ மெக்சிகோ மாநிலம் வரை இம்மலைகள் பரவியுள்ளன. இதில் மலைத் தொடர்களும் பள்ளத்தாக்குகளும் மலையுச்சிகளும் இருக்கின்றன. எல்பெர்ட்டு, மாசிவ், ஆர்வார்ட்டு, பைக்சு முதலான மலையுச்சிகள் 14,000 அடி உயரத்திற்கு மேல் உள்ளன.

5. உள்நாட்டு மேட்டு நிலங்கள்: இவை இராக்கி மலைகளுக்கு மேற்கே, ஓரிகன் மாநிலத்திலிருந்து அரிசோனா மற்றும் நியூமெச்சிகோ மாநிலங்கள் வரை பரவியுள்ளன. இப்பகுதியின் வடக்கே கொலம்பியா மேட்டு நிலமும், மத்தியில் பெரும் வடிகால் நிலமும், இதன் தெற்கே கொலராடோ மேட்டு நிலமும் உள்ளன. பெரிய உப்பு ஏரி இங்கு உள்ளது.

6. பசிப்பிக்குக் கடற்கரை: கனடா நாட்டிலிருந்து மெக்சிகோ நாடு வரை பரவியுள்ளது. பல உயர்ந்த மலைத்தொடர்களும், வளமான பள்ளத்தாக்குகளும் இங்கு உள்ளன. மலைத்தொடர்கள் 2000 முதல் 9000 அடிவரை உயர்ந்துள்ளன. வடக்கேயுள்ள காசுகேட்டு மலைத்தொடர்களில் 14,400 அடி உயரமுள்ள இரெய்னியசு எரிமலை உள்ளது. சிர்ரா நெவேடா மலைத் தொடர்களில் உள்ள இலிட்னே மலை (14,500 அடி) அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள இரண்டாவது உயரமான மலையாகும். (அவாசுகாவில் உள்ள மாகின்லி மலையின் உயரம் 20,300 அடி) இம்மலையின் தெற்கேயுள்ள சாவுப் பள்ளத்தாக்கு கடல்மட்டத்திலிருந்து 280 அடி கீழ் மட்டத்தில் உள்ளது. கடற்கரையில் உள்ள இலாசு ஏஞ்சல்சும் சான் பிரான்சிசுகோவும் முக்கிய நகரங்களாகும்.

ஏரிகள்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் வட கிழக்கே சுபீரியர், ஈரோன், மிசிகன், ஈரி, ஒன்டேரியோ முதலான பரந்த ஏரிகள் கடல்களைப் போல் உள்ளன. அவற்றுள் மிசிகன் ஏரி மட்டுமே இந்நாட்டின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறது. மற்றவற்றை அமெரிக்கா கனடா ஆகிய இரு நாடுகளும் பயன்படுத்துகின்றன. போக்குவரத்துக்கும் மீன் பிடிக்கும் தொழிலுக்கும் இவை பயன்படுகின்றன.

தட்ப வெப்ப நிலையும் மழையும்: நாடு மிகப் பரந்திருப்பதால் தட்பவெப்பநிலையில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. அலாசுகாவில் 80°பா. வெப்பநிலையும் கலிபோர்னியாவில் 134°பா. வெப்பநிலையும் நிலவுகின்றது. பொதுவாக அமெரிக்கா குளிர் நாடாகும். மழை அளவிலும் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. அவாய்த் தீவுகளில் 460 அங்குலம் மழை பெய்கிறது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் சில இடங்களில் இரண்டு அங்குல மழை கூடப் பெய்வதில்லை. இருப்பினும் அமெரிக்காவில் நீர்வளம் மிகுதியாக உள்ளது.

2. வரலாறு: கண்டுபிடிப்பு: கான்சுடான்டி நோபிள் என்ற நகரத்தைத் துருக்கியர்கள் கி.பி. 1453–ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டார்கள். அதையடுத்து ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய நாடுகளையும் இணைக்கும் வாணிகத் தொடர்பான நில வழிகளையும் நீர்வழிகளையும் அவர்கள் மூடிவிட்டார்கள். எனவே ஐரோப்பிய வணிகர்கள், வளம் கொழிக்கும் இந்தியா முதலான ஆசிய நாடுகளுடன்