உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடு

437

அமெரிக்க ஐக்கிய நாடு

பணிபுரிந்த உயர் அலுவலர்களால் கி.பி. 1670–ஆம் ஆண்டு அளவில் கரோலினா குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது விரைவாக விரிவடைந்ததால், கி.பி. 1691–இல் இரண்டு குடியேற்றங்களாகப் பிரிக்கப்பட்டது. 12. நியூயார்க்கு: இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் சார்லசின் உடன் பிறந்தவராகிய யார்க்கு கோமகனால் இது கி.பி. 1663–இல் அமைக்கப்பட்டது. இங்கு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்த தச்சு (Datch) நாட்டின் அதிகாரம் ஒடுக்கப்பட்டது. 13. நியூசெர்ரி (New Jersey): நியூயார்க்குக் குடியேற்றத்தின் ஒரு பகுதி கி.பி. 1664–ஆம் ஆண்டு நியூசெர்சி குடியேற்றமாக அமைக்கப்பட்டது. 14. பென்சில்வேனியா: வில்லியம் பென் என்பவரால் கி.பி. 1681–இல் அமைக்கப்பட்டது. அவரால் இங்கு உருவாக்கப்பட்ட பிலடெல்பியா நகரம் பிற்கால வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது. 15 தெலாவர்: (Delaware) முதலில் இங்குச் சுவீடன் நாட்டினர் குடியேறியிருந்தனர். இது கி.பி. 1664–இல் ஆங்கிலேயர்களால் பெறப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. 16. சியார்சியா (Georgia) கி.பி. 1732–இல் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட கடைசிக் குடியேற்றமாகும். சேம்சு ஓகல்தோர்ப்பு (James Oglethorpe) இதன் வளர்ச்சிக்கு முக்கியமானவராக இருந்தார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் பலவற்றை ஆங்கில அரசே ஏற்று ஆட்சி செய்தது. ஒவ்வொரு குடியேற்றத்திலும் நிருவாகத் தலைவராக ஒவ்வோர் ஆளுநர் இருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருந்தது. நீதிமன்றங்களும் இருந்தன. பொருளாதார நிலையில் வடக்கு மாநிலங்களில், தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. மத்திய மாநிலங்களில் உணவு வகைப் பயிர்கள் விளைவு செய்யப்பட்டன. தென் மாநிலங்களில் தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டன. இக்குடியேற்றங்களில் வாழ்ந்த மக்களுள் புராடசுடண்டுகளும் கத்தோலிக்கர்களும் இருந்தனர். பெரும்பாலோர் இங்கிலாந்திலிருந்து சென்று இங்கே குடியேறினார்கள். என்றாலும், பல ஆயிரம் மக்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சென்று குடியேறினார்கள். ஆலைகளிலும் வயல்களிலும் உழைக்க, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நீக்கிரோக்களையும் அவர்கள் அழைத்துச் சென்றார்கள். குடியேற்றங்களின் பல இடங்களில் பள்ளிகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட்டன. ஒன்பது புகழ்மிக்க கல்லூரிகள் கி.பி. 1775–ஆம் ஆண்டுக்குள் இயங்கி வந்தன. ஐம்பது செய்தி ஏடுகள் வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் அரசியல், சட்டம், தத்துவம், சமயம் முதலான துறைகளின் உயர்கல்வியை அக்கல்லூரிகள் கற்பித்தன. பாசுடன், நியூயார்க்கு, பிலடெல்பியா, சார்சுடன் முதலானவை புகழ்மிக்க நகரங்களாகவும் பண்பாட்டு மையங்களாகவும் விளங்கின.

அமெரிக்கச் சுதந்தரப் போர் (கி.பி. 1775–1781) பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்களின் வளங்களைத் தன் நலனுக்குப் பயன்படுத்த ஆங்கில அரசு விரும்பியது. இதனால் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பல வாணிகக் கட்டுப்பாடுகளை அவற்றின்மீது ஆங்கில அரசு திணித்தது. இயற்கையாகவே சுதந்தர வேட்கை மிகுந்த அமெரிக்கர்கள் அத்தகைய கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்தனர். சான் லாக் (John Locke), மாண்டெசுகியு (Montesquieu), வால்டேர் (Voltaire), உரூசோ (Rousseau) முதலானவர்களின் அரசியல் தத்துவங்களை அறிந்திருந்த அமெரிக்க அறிஞர்கள், ஆங்கிலப் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை ஏற்க மறுத்தனர். ஆங்கில அரசு கி.பி. 1764-இல் சர்க்கரைச் சட்டத்தை இயற்றி, சர்க்கரை இறக்குமதி வரியை உயர்த்தியது. இதன்மூலம் அரசுக்கு நாற்பத்தைந்தாயிரம் பவுன் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை அமெரிக்கர்கள் வன்மையாக எதிர்த்தார்கள். எனினும், அடுத்த ஆண்டே (கி.பி. 1765) முத்திரைச் சட்டத்தை ஆங்கில அரசு இயற்றியது. அதன்படி அரசு முத்திரையிடப்பட்ட தாள்களில்தான் பணம் மற்றும் சட்டமுறையிலான பத்திரங்கள் எழுதப்படவேண்டும் என ஆங்கில அரசு ஆணையிட்டது. அதன்மூலம் ஆண்டுக்கு அறுபதாயிரம் பவுன் வருவாயை அரசு எதிர்பார்த்தது. ஆனால் அதை எதிர்த்துப் பதின்மூன்று குடியேற்றங்களிலும் வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனவே ஆங்கில அரசு முத்திரைச் சட்டத்தைக் கி.பி. 1766-ஆம் ஆண்டு விலக்கிக் கொண்டது. அதை அமெரிக்கர்கள் பெரும் வெற்றியாகக் கருதினார்கள். ஆனால் அடுத்த ஆண்டே (கி.பி. 1767) தலைமை அமைச்சர் வில்லியம் பிட்டு (William Pitt) நிதி அமைச்சர் சார்லசு டவுன்செண்டு (Charles Townshend) ஆகியோர் தூண்டுதலால் பாராளுமன்றம் ‘டவுன்செண்டு சட்டங்களை’ இயற்றியது. அதன்படி அமெரிக்கர்கள் இறக்குமதி செய்த கண்ணாடி, காகிதம் முதலான பலவகையான பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அதை அமெரிக்கர்கள் மிக வன்மையாக எதிர்த்தார்கள். ஆங்கிலப் பாராளுமன்றத்தில் அமெரிக்கர்களுக்கு இடமில்லையென்றால் வரி கொடுத்து முடியாது (No taxation without representation) என்று அவர்கள் உயர் குரல் எழுப்பினார்கள். எனவே டவுன் செண்டு சட்டங்களையும் ஆங்கில அரசு விலக்கிக் கொண்டது. பின்னர்க் கி.பி. 1773–ஆம் ஆண்டு மே மாதம் தலைமை அமைச்சர் நார்த்து (North) தின் அமைச்சரவை, தேயிலைச் சட்டத்தை இயற்றியது. அதன்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட தேயிலையை அமெரிக்காவில் விற்க ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முழுதனியுரிமை கொடுக்கப்பட்டது. அதனால் தேயிலை வாணிகம் செய்து வந்த அமெரிக்க வணிகர்கள், தங்கள் தொழிலை இழக்க வேண்-