அமெரிக்க ஐக்கிய நாடு
442
அமெரிக்க ஐக்கிய நாடு
கடித்தது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே வில்சன், 1918-ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியிட்ட 14 கோட்பாடுகள் புகழ்மிக்கவை ஆகும். போர் முடிந்த பின்னர், 1919–ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற அமைதி மாநாட்டில், வில்சன் மிகவும் இன்றியமையாத பணியைச் செய்தார். பன்னாட்டுச் சங்கம் (League of Nations) ஏற்பட அவர் காரணமாக இருந்தார். ஆனால் அமெரிக்கா அதில் உறுப்பு நாடாகச் சேர்வதை அந்நாட்டுச் சட்டமன்றம் அனுமதிக்கவில்லை.
அஞ்சத்தக்க பொருளாதார மந்தநிலை (1929–ஆம் ஆண்டு முதல்): இது 1921–ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட வியத்தகு தொழில் வளர்ச்சியினால் ஏற்பட்டது. கடைகளில் பொருள்கள் தேங்கிக் கிடந்தன; பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன; ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்; பொருள்களை வாங்க மக்களிடம் பணம் இல்லை. இந்த மந்தநிலை, அமெரிக்காவை மட்டுமன்றி மற்ற உலக நாடுகளையும் தாக்கியது. இந்தப் பொருளாதாரச் சீர்குலைவைச் சரிப்படுத்த அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த எர்பர்ட்டு ஊவர் (Herbert Hoover) (1929–33) மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பிராங்ளின் டி. உரூசுவெல்ட்டு (1933–45) குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கைவை (New Deal) நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்படுத்தினார். அக்காலத்தில் அவர் அமைத்த தென்னசிப் பள்ளத்தாக்குத் திட்டம் (Tennessee Valley Project) அவர் பெருமையை இன்றும் பறைசாற்றி வருகிறது. உரூசுவெல்ட்டின் ஆட்சிக்காலத்தில்தான் இரண்டாம் உலபோர் (1939–45) நடைபெற்றது. செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய அச்சு நாடுகளை எதிர்த்து இங்கிலாந்து, பிரான்சு, உருசியா முதலான நாடுகள் போரிட்டுவந்தபோது, அமெரிக்கா போரில் இறங்கவில்லை. சப்பான் 1941–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7–ஆம் நாள் அமெரிக்காவின் படைத்தளமாகிய பேர்ல் (Pear) துறைமுகத்தைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. உடனே அமெரிக்கா அச்சு நாடுகளின்மீது போர் தொடுத்தது. செருமனியையும் இத்தாலியையும் தாக்கத் தளபதி ஐசனோவரையும், சப்பானைத் தாக்கத் தளபதி மெக்கார்த்தரையும் அமெரிக்கா அனுப்பியது. அமெரிக்கா 1945 மே மாதம் முதல் வாரத்திற்குள் செருமனியையும் இத்தாலியையும் தோற்கடித்து, நட்பு நாடுகளுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. எனினும் சப்பான் தொடர்ந்து போரிட்டு வந்தது. எனவே, 1945–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–ஆம் நாள் இரோசிமா (Hiroshima) நகரத்தின் மீதும், 9–ஆம் நாள் நாகசாகி நகரத்தின் மீதும் அமெரிக்கா அணுக்குண்டைப் போட்டுத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட பயங்கரமான அழிவைக் கண்ட சப்பான் அடுத்த சில நாட்களுள் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
துருமன் முதல் ரீகன் வரை (Truman to Reagan) (1945–1985): உரூசுவெல்ட்டுக்குப் பின்னர் ஆரி எசு. துரூமன் (1945–53) குடியரசுத் தலைவரானார். அவர் காலத்தில்தான் ஐக்கிய நாடுகள் மன்றம் (United Nations Organisation) 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் தலைமையகம் நியூயார்க் ஆகும். அவர் காலத்தில் அயல்நாட்டுத் துறையில் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குச் செருமனி 1948-ஆம் ஆண்டு சூன் மாதம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கப் படைகள் 1952–வரை சப்பானில் இருந்தன. அக்காலத்தில் சப்பானுக்குப் புதிய அரசியல் சட்டம் கொடுக்கப்பட்டு, முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவில் மா சே துங்கின் தலைமையில் வளர்ந்து வந்த பொதுவுடைமைச் செல்வாக்கை முறியடிக்க, அந்நாட்டின் தலைவர் சியாங் கே சேக்குக்கு (Chiang Kai-Shek) அமெரிக்கா பல வழிகளில் உதவியது. இருப்பினும், சீனா 1949-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொதுவுடைமை நாடாக மாறியது. ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் பொதுவுடைமை பரவாமல் தடுக்க, அமெரிக்கா பல கோடி தாலர் மதிப்புள்ள பொருளாதார உதவியைச் செய்தது. வட அட்லாண்டிக்கு ஒப்பந்தம் 1949-இல் செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்கா 1950–முதல் 1953–வரை நடைபெற்ற கொரியப் போரில், தென் கொரியாவுக்குப் போர்க்கருவிகளைக் கொடுத்துதவியது.
ஐசனோவர் (1953–1961) குடியரசுத் தலைவராக இருந்த போது இலிட்டில் ராக் (Little Rock) என்ற நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி (செப். 1957) நீக்கிரோ இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்தது. விண்வெளியை ஆராயச் செயற்கைக் கோள்கள் 1957–இல் அனுப்பப்பட்டன. அயல் நாட்டு நடவடிக்கைகளுள் குறிப்பிடத்தக்கது, கொரியப் போர் நிறுத்தப்பட்டதாகும் (சூலை 1953). தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்காக 1954-இல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒப்பந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. பொதுவுடைமைச் சீனாவுக்கு எதிராகத் தேசிய சீனாவின் தலைவர் சியாங் கே சேக்குக்கு அமெரிக்கா உதவி செய்தது. சூயசுக் கால்வாய்த் தொடர்பாக 1956-ஆம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்சு, இசுரேல் ஆகிய நாடுகள் எகிப்தைத் தாக்கியபோது அமெரிக்கா தலையிட்டுப் போரை நிறுத்தியது.