உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடு

444

அமெரிக்க ஐக்கிய நாடு

அமெரிக்காவின் மேற்கே கோர்டில்லேரா (Cordillera) பகுதியில் செம்பு, துத்தநாகம், வெள்ளி, ஈயம் முதலான உலோகத் தாதுகள் கிடைக்கின்றன. கலிபோர்னியா, அலாசுகா, யூடா, தெற்குக் கோடா ஆகிய மாநிலங்களில் தங்கம் கிடைக்கின்றது. சுபீரியர் ஏரிக்கரைப் பகுதிகளில் பெருமளவு இரும்புத் தாது கிடைக்கிறது.

இயற்கைச் செல்வங்கள் மிகுதியாகக் கிடைப்பதால், அமெரிக்காவில் வியத்தகு தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிகாகோ நகரம், இரும்பு, எஃகுக் கருவிகள் உற்பத்தி செய்யப்படும் புகழ்மிக்க மையமாக உள்ளது. மேலும் அங்கு அச்சுத் தொழில், மருந்துகள் உற்பத்தி, மின்கருவிகள் உற்பத்தி, போக்குவரத்துக் கருவிகள் உற்பத்தி முதலான பல தொழில்கள் நடைபெறுகின்றன. கிளீவுலாந்து நகரத்திலும் இரும்பு எஃகு ஆலைகளும் இரசாயனத் தொழிற்கூடங்களும் மிகுதியாக உள்ளன. பிட்சுபர்க்கு நகரம், எல்லாப் பொருள்களும் உற்பத்தி செய்யப்படும் பெருந்தொழில் மையமாக விளங்குகிறது. பர்மிங்காம் நகரத்திலும் எல்லாவிதமான பொருள்களும் செய்யப்படுகின்றன. தெட்ராய்ட்டு நகரத்தில் மோட்டார் கார்கள் செய்யப்படுகின்றன. விசிதர், கன்சாசு ஆகிய நகரங்களில் விமானங்கள் செய்யப்படுகின்றன. உலகத்திலேயே மிகப்பெரிய விமானத் தொழிற்சாலை சியாடல் நகரத்தில் உள்ளது. தெக்சாசு மாநிலத்தில் உள்ள ஊசுடன் நகரத்தில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அந்நகரத்தைச் சுற்றிலும் பல்வேறு வகையான மின்கருவிகள் செய்யப்படுகின்றன. ஆலிவுடு நகரம் திரைப்படத் தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது. அமெரிக்காவில் செய்யப்படாத பொருள் எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

4. பண்பாடு: அமெரிக்க ஐக்கிய நாடு ‘குடியேறியவர்களின் நாடு’ (Nation of Immigrants) என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் அந்நாட்டில் குடியேறி அமெரிக்கக் குடிமக்களாக மாறியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், ஆசிய நாடுகளில் குறிப்பாகச் சீனா, சப்பான் முதலான நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் மக்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டிலும் அந்நாட்டிற்குச் சென்று குடியேறியுள்ளனர். ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளையர்களால் கொண்டு செல்லப்பட்ட நீக்கிரோக்களின் எண்ணிக்கை இப்பொழுது இரண்டு கோடியைக் கடந்துள்ளது. அவர்களும் அமெரிக்கக் குடிகளே ஆவர். மொத்த மக்கள் தொகை இருபத்து மூன்று கோடி (1980) ஆகும். அவர்களுள் பெரும்பான்மையினர் புராடசுடண்டுகள்; மற்றையோர் கத்தோலிக்கர்களும் யூதர்களுமாவர். அமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்கள் இப்பொழுது சில ஆயிரம் மக்களே உள்ளனர்.

அமெரிக்கா கி.பி. 19–ஆம் நூற்றாண்டிலிருந்தே இலக்கிய வளம் பெற்றது. வாசிங்டன் இர்விங் சுவையான பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். எமர்சன் தத்துவக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்குகிறார். எட்கார் ஆலன் போ பல கவிதைகளையும் சிறு கதைகளையும் எழுதியுள்ளார். வால்ட்டு விட்மன் மக்களாட்சி முறையைப் பற்றியும் ஊழல் சமுதாயத்தைச் சாடியும் எழுதியுள்ளார். மார்க்கு டுவெயின் பயணக் கட்டுரைகளையும் இளைஞர்களைப் பற்றியும் அமெரிக்க ஊழல்களைப் பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார். எச். டபிள்யூ. லாங்பெலோ (Long Fellow) அந்நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிஞராவர். அவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். சின்கிலெய்ர் லெவிசு, யூசீன் ஓநீல், வில்லியம் பாக்னெர், ஏர் இனெசுட்டு எமிங்வே, சான் இசுடெயின்பெக் முதலான எழுத்தாளர்கள் 20–ஆம் நூற்றாண்டில் சிறந்த இலக்கியப் பணிக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டார்கள். இந்த நூற்றாண்டின் அமெரிக்கக் கவிஞர்களுள் இராபர்ட்டு பிராசுட் (Robert-Prachute}, எசுரா பவுண்டு (Ezra Pound), டி.எசு. எலியட்டு (T.S. Eliot) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

அமெரிக்காவின் வரலாற்றைச் சிறப்பாக எழுதியவர்களுள் சார்சு பான்கிரோப்டு (George Foncroft) குறிப்பிடத்தக்கவர் ஆவார். சே.பி. மாக்மாசுடர் (Mc Masudar) அந்நாட்டின் பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வரலாற்றை எழுதியுள்ளார். எச்.எசு. சம்மேசர் இந்நூற்றாண்டின் புகழ்மிக்க அமெரிக்க வரலாற்றாசிரியராவார்.

அமெரிக்க ஓவியக்கலை சே.எசு. கோப்லே, பெஞ்சமின் வெசுட்டு முதலானவர்களால் ஏற்றம் பெற்றது. சி. இசுடூவேர்டு, சி. டபுள்யூ. பீல் ஆகியோர் வரைந்துள்ள சார்சு வாசிங்டனின் உருவப்படங்கள் புகழ் பெற்றவை ஆகும். சான் தரம்புல் (John Trumfull) போன்றவர்கள் அமெரிக்க விடுதலைப் புரட்சியின் நிகழ்ச்சிகளை வண்ண ஓவியங்களாகத் தீட்டினார்கள். பல ஓவியக் கலைக்கூடங்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிறுவப்பட்டன. பணக்காரர்களும் அக்கலையை ஆதரிக்கத் தொடங்கினார்கள். புகழ் மிக்க ஐரோப்பிய ஓவியங்கள் விலைக்கு வாங்கப்பட்டுக் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டன. ஐரோப்பியக் கலைஞர் பிகாசோவின் பாணியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புதிய ஓவியக் கலை வளரத் தொடங்கியது. பின்னர் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் ஓவியங்கள்