உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கத் தத்துவம்

449

அமெரிக்கத் தத்துவம்

வாயினும் பொதுப்பொருளில் பயன்வழிக் கொள்கையே (Pragmatism) அமெரிக்கத் தத்துவம் என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது. அறிவியல் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தத்துவ இயல் கி.பி. 1900–க்கு முன் எதுவும் முற்றாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனினும் வெவ்வேறு தத்துவக் கருத்தாக்க வளர்ச்சிகள், மக்கள் மனவெழுச்சி இயல்புகளுக்கேற்ப வடிவம் பெறாமலுமில்லை. பயன்வழிக் கொள்கை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வடிவம் பெற்றதாயினும், அமெரிக்க அனுபவ வரலாறு முழுவதிலும் இத்தன்மை வேரோடியிருந்தது என்பதே உண்மை. சில ஆராய்ச்சியாளர்கள் ‘பயன் வழிக்கொள்கை’ என்னும் தத்துவம், அமெரிக்க வாழ்வியலின் அடிப்படைத் தன்மையின் வடிவமைப்பு மட்டுமே என்று கூட விவாதிக்கின்றனர்.

வைதிகச் சமயப் பற்றாளர் தத்துவம்: அமெரிக்கக் குடியேற்றக் காலத்தில், வைதிகச் சமயப் பற்றாளர் (Puritans) தத்துவக் கோட்பாட்டுத் துறையில் செல்வாக்குச் செலுத்தினர். கடவுளே முழுமுதல்வர் என்றும் மனிதர்கள் இயல்பிலேயே பாவிகள் என்றும் அவர்களின் உயிர் கடவுளின் விருப்பத்தைப் பொறுத்ததே என்றும் கருதினர். யார் யாருக்கு உயிர் மீட்பு அளிப்பது என்று கடவுளே முன்முடிவெடுத்து வைத்திருக்கிறார் என்பதால், மனிதனின் எந்த நற்செயலும் இதற்கு மாறாக அவனுக்கு விடுதலை அல்லது முக்தியைப் பெற்றுத் தந்துவிடாது என்றும் அவர்கள் நம்பினார்கள். எனவே அவர்களிடையே மனிதனின் செயற்பாட்டு விடுதலைக் கோட்பாட்டுக்கும் கடவுளின் அருளுக்கும் இடையிலான முரண்பாடு பற்றிய விவாதம், பெரிதும் சிறப்புப் பெற்றிருந்தது. எனினும் நல்லொழுக்கம், நேர்மை, நிதானம், உழைப்பு, எளிமை ஆகிய பண்புகள் பெரிதும் போற்றப்பட்டன. இந்த வைதிகச் சமயப்பற்றாளரின் கோட்பாடுகள், சமயச் சார்பைவிடச் சூழ்நிலைச் சார்பிலேயே பெரிதும் உறுதிப்படுத்தப்பட்டன. இவர்கள் மத நிறுவனங்களான கோயில்களின் அதிகாரத்தைவிடத் தனிமனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான நேரடி உறவையே பெரிதாகக் கருதினார்கள். அதேநேரத்தில் சமயநெறிக்குப் புறம்பான செயற்பாடுகள் அவர்களுக்குக் கசப்பாகவும் இருந்தன. அமெரிக்கர்கள் கி.பி. 1700 முழுவதிலும் தங்கள் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்வதிலும் சமயச்சார்புடைய பக்தியிலும் மட்டுமே ஈடுபாடு கொண்டிருந்ததால் தத்துவக்கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் ஆக்கத்திலும் ஆய்விலும் அக்கறை கொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த தத்துவ ஆராய்ச்சிகள் கூடக் கடவுளின் முடிவெடுக்கும் தன்மையை நிலைநாட்டுதற்கும், பொருள் முதல்வாதத்தையும் மனிதனின் முத்திக்கான விடுதலைச் செயற்பாட்டுரிமையையும் மறுப்பதற்குமாகவே வெளிப்பட்டன. சொனாதன் எட்வர்டுசு என்பாரின் கருத்துகளும் கிங் கல்லூரி நிறுவனரான சாமுவேல் சான்சன் என்பாரின் கருத்துகளும் இவ்வகையில் சிறப்பிடம் பெற்றன. மற்றொரு பக்கம் இதே காலங்களில் அறிவியல் பற்றிய தத்துவம் அமெரிக்காவில் விரிவாக்கம் பெற்று வந்தது. பெஞ்சமின் பிராங்கிளின் போன்றோர் இத்துறையில் பேரார்வம் காட்டினர். கோள்களின் அமைப்பு விதிகள், நியூட்டனின் ஆய்வடிப்படையில் பிராங்கிளின் அவர்களால் செழுமையாக விளக்கப்பட்டபோது ஐரோப்பியர்களால் அவர் ‘அமெரிக்காவின் முதல் தத்துவ ஞானி’ என்று குறிப்பிடப் பெற்றார்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில், அமெரிக்க மக்களின் வாழ்வில் அறிவுபூர்வமான ஆய்வுக் கருத்துகள் முதன்மை பெறத்தொடங்கின. தத்துவத் துறையில் உலகாயதச் சார்பு, விடுதலை உணர்வு, செயற்பாட்டு வேகம் ஆகியவை பற்றிய கருத்தோட்டங்கள் மேலோங்கின. மனிதத்துவம், இயற்கையான தனித்த ஒழுக்கமுறை, நாட்டுணர்வு, தற்சார்பு, புரட்சி மனப்பான்மை ஆகியவை எழுச்சி பெறலாயின. நியூட்டனின் உலகாயதக் கருத்துகளால் தாக்கம் பெற்ற பெஞ்சமின் ரசு, சோசப் பிரிசுட்லி போன்றோர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகாயதத் தத்துவங்களில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பொருள்களுக்குப் பொருந்துகிற அளவு, தன்மை ஆகியவை பற்றிய வரையறை விதிகளை அவர்கள் உலகம் முழுவதற்கும், தனி மனிதனுக்கும் பொருந்துவதாக விரிவுபடுத்தினர். உலகாயதத்தோடு நெருங்கிய தொடர்புடைய இயற்கைச் சமயமும் இக்காலக் கட்டத்தில் புத்துணர்ச்சி பெற்றது. கடவுள் நம்பிக்கை பெற்றிருந்த இயற்கைச் சமயவாதிகள் நேரடியாகக் கடவுள் தோன்றி அருள் செய்வார் என்னும் கருத்தை வன்மையாக மறுத்தனர். தாமசு செபர்சு, தாமசு பெயின், ஈதன் ஆலன், உலிகீபால்மக் போன்றோர் இத்தத்துவக் கருத்தை ஏற்ற சிறந்த வல்லுநர் ஆவர். இவர்கள் கடவுளுடைய நல்ல தன்மையின் வெளிப்பாடே அனைத்தின் ஆக்கமும் (மனிதனின் தோற்றம் உட்பட) என்று விளக்கினார்கள்.

மக்கட்பண்புக் கோட்பாடுகள்: இயற்கைச் சமயவாதிகள், மனிதன் பகுத்தறிவுள்ளவன் ஆதலால் இவ்வுலகிலேயே நல்வாழ்வை நுகர இயலுமென்றும், கடவுளின் அரசியல் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தனர். ஒழுக்கவியற் கோட்பாடு, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்ததாக இல்லாமல், மக்கட்பண்பு நெறியாக (Theory of Humanism) இருப்பதென விளக்கினார்கள். இந்தத் தெளிவுகள் அறிவியல், பகுத்தறிவு, கல்வி ஆகிய மனித முன்னேற்றக்கருவிகளிடம் நம்பிக்கையை விளைவித்தன.

வா.க. 1 - 29