அமெரிக்கத் தத்துவம்
451
அமெரிக்கத் தத்துவம்
சான் தூயி போன்றோர் அப்புதிய நிலைக்கு ஆதரவாளராக விளங்கினர். தத்துவத்தில் இயற்கையின் நிலைபேறான முறைமையாகக் கருதப்பட்டனவற்றை, எப்போதும் மாறுதலுக்குட்படும் இயங்கியல் முறையாக மாற்றிய பெருமை தார்வின் கோட்பாட்டுத் தாக்கத்திற்கே உரியதாகும். மனத்திற்குப் புறம்பான பொருளுலகுக்குரிய அடிப்படையில் மனிதனுக்கும் இயற்கைக்கும், மனத்திற்கும் உடலுக்கும் இடையிலான தொடர்புகள் ஆராயப்படலாயின.
தத்துவ வரலாற்றின் பொற்காலம்: அமெரிக்காவில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், ஆக்க அடிப்படையில், ஆழமான, உயிரோட்டமுள்ள ஆர்வ எழுச்சி தத்துவத்துறையில் தோன்றியது. இந்நாட்டு வரலாற்றில், கி.பி. 1880-க்கும் 1940-க்கும் இடையிலான காலப்பகுதி, தத்துவ வரலாற்றின் ‘பொற்காலம்’ என்றே கூறப்படுகின்றது. ஏனெனில் இந்தக் காலப் பகுதியில்தான் அமெரிக்காவின் மிகச்சிறந்த மூல தத்துவ இயலாளர்களும் இயக்கங்களும் தோன்ற முடிந்தன. மிகச்சிறந்த தத்துவ இயலாளர்களான பியர்சு சேம்சு, தூயி, இராய்சு, சார்சு சந்தயனா, ஆல்பிரட்டு, நார்த் ஒயிட்கெட்டு ஆகியோர் இக்காலத்தவரே. பயன்வழிக் கொள்கை, மெய்யியல், இயற்பியல் ஆகிய தத்துவ இயல்களும் இக்காலத்தவையே.
அமெரிக்கத் தத்துவங்களில் மிகச்சிறந்ததும் மிக்க செல்வாக்குடையதும் தனித்தன்மை வாய்ந்ததுமான ‘பயன்வழிக்கொள்கை’ என்னும் தத்துவ இயல், சார்லசு பியர்சு என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இத்தத்துவ இயலைச் சேம்சு தூயி ஆகியோர் செழுமைப்படுத்தினர். இம்மூவரின் பயன்வழிக் கொள்கைகளும் தத்துவார்த்தத்தில் வெவ்வேறு பரிணாமம் உடையவை. பியர்சின் பயன்வழிக் கொள்கை அறிவியல் சார்ந்ததாகவும், சேம்சின் பயன்வழிக் கொள்கை சமயத்தைச் சார்ந்ததாகவும், தூயியின் பயன்வழிக் கொள்கை அறவியல் சார்ந்ததாகவும் இருந்தன.
பயன்வழிக் கொள்கை: சார்லசு பியர்சு: பயன்வழிக்கொள்கை என்பது, அடிப்படையில் கருத்துப்படிவக் கூற்றுகளில் தோன்றும் குழப்பங்களைத் தீர்த்துத் தெளிவுபடுத்துகிற ஒரு முறை என்று பியர்சு கருதினார். அவர், தாம் எழுதிய ‘நம் கருத்துகளைத் தெளிவாக்குவது எப்படி’ என்ற கட்டுரையில் பயன்வழிக் கொள்கையின் சாரத்தை விளக்கினார். ஒரு கூற்றின் பொருளும் உண்மையும் அதன் நடைமுறை விளைவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பது அவருடைய கோட்பாடாகும். இத்தகு பயன்வழி முறை, எல்லாக் கருத்துப் படிவக் கூற்றுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதில்லையென்றும், அறிவியல் கூற்றுகளில் கடினமான கருத்துப்படிவங்களுக்கும் மறைபொருளாக உள்ள கருத்துப் படிவங்களுக்கும் மட்டும் பயன்படுத்தப்பட்டால் போதும் என்றும் அவர் விளக்கினார். கருத்துகள் சார்புநிலை வாக்கியங்களாக (Hypothetical Statements) வெளிப்படுத்தப்பட்டால் அவற்றின் பொருள் நன்றாகத் தெளிவாகும் என்று பியர்சு கருதினார். எடுத்துக்காட்டாக, ஒரு பொருள் உடையும் தன்மையுடையது எனக் கூற வேண்டியிருந்தால், ‘அதன் மீது அடித்தால், அது சிதறிப் போகும்’ என்று கூறுவதன் மூலம் அதன் பொருள் தெளிவாகும் என விவரித்தார். விளைவுகளை விளக்காத எந்தக் கூற்றும் பொருளற்றதே என்பது பியர்சின் கோட்பாடாகும்.
வில்லியம் சேம்சு: பியர்சின் பயன்வழிக்கொள்கை விளக்கங்கள் மற்ற இயக்கங்களுக்குப் பரவாமல் இருந்தன. கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வில்லியம் சேம்சு தம்முடைய புகழ்பெற்ற விரிவுரைகளை நிகழ்த்திய நேரத்தில் பியர்சின் கோட்பாடுகளை விவரித்தபோதுதான் அவருடைய பயன்வழிக்கொள்கையின் சிறப்புகள் வெளிப்பட்டன. கருத்துகளின் பொருள்களைக் கணிப்பது மட்டுமே பயன்வழிக் கொள்கையின் தத்துவம் என்ற பியர்சின் கோட்பாட்டோடு நிறுத்தாமல், சேம்சு அதை ‘உண்மை’ பற்றிய ஒரு தத்துவக் கோட்பாடாகவே செம்மைப்படுத்தினார். இக்கருத்து வளர்ச்சி பியர்சின் விளக்கங்களிலேயே மறைவாய் பொதிந்திருந்ததாகச் சேம்சு தெரிவித்தார். தாம் 1907-இல் வெளிவிட்ட பயன்வழிச் கொள்கை என்ற விரிவுரை நூலில், தம் கோட்பாட்டைக் கீழ் வருமாறு விளக்கினார் சேம்சு. நடத்தையில் நல்லது என்பது எப்படி ஏற்புடையதோ, இசைவானதோ அப்படியே சிந்தனையில் உண்மை என்பது ஏற்புடையதும் இசைவானதும் ஆகும். ஏற்புடைமையே அனைத்தையும் உறுதி செய்யும். நம்பிக்கைகளும் உண்மையான கூற்றுகளும் பயன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படுகின்றன. “அது பயனுடையது; ஏனெனில் அது உண்மையானது”; “அது உண்மையானது – ஏனெனில் பயனுடையது” என்கிற இரு கூற்றுகளும் ஒரே பொருளுடையவை. மத நம்பிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் சேம்சு எழுதினார். பயன்வழிக் கொள்கையின் அடிப்படையில், நம் வாழ்வுக்குப் பயன்படுகிற எந்தக் கருதுகோளையும் நாம் விலக்க முடியாது. கடவுள் பற்றிய கருதுகோள், அதன் முழுமைப் பொருளில் நிறைவு அளிக்கும் அளவில் பயனுள்ளதாக இருக்கும்வரை அது உண்மையே. நம் அனுபவம் இதை நிலைபெறுத்துகிறது. நன்கு ஆராயும் முறையான அறிவியலுக்குப் பயன்படும் கோட்பாடாகப் பயன்வழிக் கொள்கை பியர்சு அவர்களால் வடிக்கப்பட்டது. இதைச் சமய நம்பிக்கையை வலியுறுத்தச் சேம்சு பயன்படுத்திக் கொண்டதில் பியர்சுக்கும் மற்றச்சில தத்துவ இயலாளர்களுக்கும் உடன்பாடில்லை.
வா.க. 1 – 29அ