உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க தாலர்

453

அமெரிக்க தாலர்

Muelder, W.G., Sears, Laurence and Schlalach, A.V. (Editors) – “The Development of American Philosophy”, New York, 1960.

அமெரிக்க தாலர்: அமெரிக்க நாட்டில் நடைமுறையில் வழங்கிவரும் செலாவணி தாலர் (Dollar) எனப்படும். ஒவ்வொரு நாட்டின் செலாவணியும் அந்த நாட்டின் எல்லைக்குள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும். உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பன்னாட்டுச் செலாவணி என்று ஒன்று இல்லை. இருப்பினும், முதல் உலகப் போருக்கு முன்பு பிரிட்டனின் ‘பவுண்டு தெர்லிங்கும்’, (Pound sterling) அப்போருக்குப் பின்னர் அமெரிக்க தாலரும் பன்னாட்டுச் செலாவணியாக உருவாகி, பன்னாட்டு வாணிகத்திலும் உலக நிதி அமைப்புகளிலும் சிறப்பான பங்கு பெற்று வருகின்றன. குறிப்பாக, 1947–இல் பிரிட்டன்வுட்சு (Bretton woods) என்னுமிடத்தில் பன்னாட்டுப் பண ஆக்க நிதி அமைப்பிலும் (International Monetary Fund), 1973 மார்ச்சுக்குப் பின்பு எழுந்த மிதப்பு மாற்றுவீத அமைப்பிலும் (Floating Exchange Rate) அமெரிக்க தாலர், முக்கியப் பங்கு பெற்று உலகப் பொருளாதாரத்தைப் பன்னாட்டு மயமாக்கியது. போருக்குப் பின்னால் ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டு நிதி அமைப்புகளின் வரலாறு அமெரிக்க தாலரை அடிப்படையாகக் கொண்டதால், அந்தத் தாலரின் பகுப்பாய்வு பணவியலின் அறிவுக்கு அடிகோலுகிறது.

போருக்கு இடைப்பட்ட காலத்தில், பிரிட்டனின் ‘பவுண்டு தெர்லிங்’ (Pound sterling) பன்னாட்டுச் செலாவணியாகத் தனது செல்வாக்கை நிலைநிறுத்தத் தவறியபோது, அமெரிக்க தாலர் உலக நாடுகளுக்குத் தலையாய செலாவணியாகப் பயன்படத் தொடங்கியது. இருப்பினும் உலக நாடுகளின் வாணிகத் தேவைகளுக்கேற்ப ஆதார நாணயமான (Key Currency) தாலரை உற்பத்தி செய்யும் நாடாகத் தன்னை ஆக்கிகொள்வதில் ஐக்கிய அமெரிக்கா தயக்கம் காட்டியது. பன்னாட்டுப் பண ஆக்க நிதி, வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வசதிகளைத் தவிர (Quota rights). வளர்ந்து வரும் உலக வாணிகத் தேவைகளுக்கேற்பப் பன்னாட்டு நீர்மையை (International Liquidity) அதாவது பன்னாட்டுச் செலாவணியின் பணநெகிழ்வு நிலையைப் பெருக்குவதற்கான கருவி எதுவும் இல்லை. இந்த நிலையில் ஐக்கிய அமெரிக்கா உலக நாடுகளுக்கு வங்கியாக ஆதார நாணயத்தை உற்பத்தி செய்யும் காப்பு இருப்பு மையமாக (Reserve Centre) ஆயிற்று. அதற்கான தகுதி மிதமிஞ்சிய பொருளாதார வலிமையால், தனக்கு இருப்பதை முழுமையாக உணர்ந்தது. உலக தேசிய வருமானத்தின் கணிசமான ஒரு பகுதியை உருவாக்கும் திறனையும், உலகத்து மைய வங்கிகளின் தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்தையும் நன்கு வளர்ச்சியுற்ற பண அங்காடியையும் அமெரிக்கா தன்னகத்தே கொண்டிருந்தது. அமெரிக்க தாலர் மட்டுமே 1 அவன்சு தங்கம் 35 தாவர் என்ற விகிதக் கணக்கில் மாற்றப்படத்தக்க செலாவணியாக இருந்தது.

பிரிட்டன்வுட்சு பண அமைப்பு முறையில் ஏனைய நாடுகளில் செலாவணிகளின் மாற்று வீதங்கள் (The exchange rate of the currencies of n–1 Countries) அமெரிக்க தாலரில் வரையறுக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்டன. அந்தந்த நாட்டு மைய வங்கிகள் அயல்நாட்டு மாற்று அங்காடியில் (Foreign Exchange Market) தங்கள் செலாவணிகளின் மாற்று வீதத்தில் அவ்வப்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஒரு விழுக்காட்டிற்குள்ளாகக் கட்டுப்படுத்தி, செலாவணிகளின் நிலையான மாற்று வீதத்தைக் (Fixed exchange rate) காப்பாற்றி வந்தன. அமெரிக்க தாலர் மைய வங்கிகளின் காப்பு இருப்பு நாணயமாகவும் (Reserve Currency), அயல்நாட்டு அங்காடியில் பயன்படுத்தக்கூடிய தலையீடு நாணயமாகவும் (Intervention Curreney) செயற்படத் தொடங்கியது. அயல்நாட்டுச் செலுத்துநிலையில் அடிப்படையான சமன்கேடு (Fundamental disequilibrium in balance of payments) நிகழும்போது, மாற்று வீதங்களில் தக்க மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கொள்கை முறையில் தீர்மானிக்கப்பட்டது. தங்கத்தின் அடிப்படையில் நிலையாகப் பிணைக்கப்பட்ட தாலரும் (Fixed gold–dollar link) செலாவணிகளின் நிலையான மாற்று வீதங்களும் பிரிட்டன்வுட்சு அமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கருதப்பட்டன.

அமெரிக்க தாலர் பன்னாட்டுச் செலாவணியாக, ஆதார நாணயமாக, nth நாணயமாகச் செயலாற்றியதன் மூலம் ஏனைய நாடுகள் (n–1 countries), தங்களின் அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் அடிப்படையான சமன்கேட்டை நிறைவு செய்யப் பன்னாட்டுப் பணவாக்கநிதியின் அனுமதி பெற்றுச் சூழ்நிலைக்கேற்பச் செலாவணிகளின் மாற்று வீதங்களை மதிப்புக் குறைக்கவோ (Devalue) மதிப்பு ஏற்றம் செய்யவோ (Revalue) மாற்றுவீத உரிமை (Exchange rate autonomy) பெற்றன. அமெரிக்கா இந்த உரிமையை இழந்திருந்தது எனினும், அதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், தனது அயல்நாட்டுச் செலுத்து நிலையில் ஏற்படும் பற்றாக்குறையை தாலர் நோட்டுகளை அடித்துத் தீர்த்துக் கொள்ள இயலும். எனவே மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பு வசதி அமெரிக்காவிற்கு மட்டும் இருந்தது. ஆராயின் அமெரிக்காவின் அயல்நாட்டுச் செலுத்து நிலையில் ஏற்படும் ஒட்டு மொத்தமான பற்றாக்குறை வழியாக