உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க தாலர்

456

அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை

வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ளதைவிட அமெரிக்காவில் குறுகிய கால வைப்புத்தொகையின்மீது வட்டி வீதத்தை உயர்த்தியும், அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டம் வரவில்லை. அதற்கு மாறாக, மற்ற நாடுகளில் வட்டி வீதங்கள் குறைவாக இருப்பினும், அமெரிக்காவை விட்டு, அந்த நாடுகளை நோக்கி மூலதன ஓட்டம் நடைபெற்றது.

செலாவணியின் மதிப்பிறக்கத் தொடர்பான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் ஒழிய, அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் சமன்கேட்டைத் தாலர் மதிப்பிறக்கத்தால் ஈடுசெய்ய முடியாது என்ற உண்மையை அமெரிக்கா 1970–இன் இறுதியில் உணர ஆரம்பித்தது. மேலும், நீர்மையான மாற்றுவீத அமைப்பு முறையிலும், தாலரைத் தங்கமாக மாற்ற இயலாத சூழ்நிலையிலும், அமெரிக்க தாலர் பன்னாட்டுச் செலாவணியாக உலக நாடுகளிடையே இடைவிடாது செயலாற்றி வருவதால் தொடர்ச்சியான தாலர் மதிப்பிறக்கம், உலகப் பொருளாதாரம், நிதி ஆகியவற்றின் சமநிலைக்கு ஊறு விளைவிக்கும் என்ற உண்மையை 1973 இறுதியில் கார்ட்டர் அரசாங்கம் உணர ஆரம்பித்தது. தாலரை மீட்க, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

செலாவணிகளின் மாற்று வீதங்களில் ஏற்ற இறக்கங்கள் 1970–இல் அதிகம் காணப்பட்டன. பண வீக்கம் எல்லா நாடுகளிலும் ஒரே விகிதக் கணக்கில் இல்லாத நிலையில், இது தவிர்க்க முடியாத ஒன்று ஆயிற்று. மேலும், பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உலக மந்த நிலையிலிருந்து எல்லா நாடுகளும் ஒரே சமயத்தில் மீள இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க தாலர் அயல் நாட்டு மாற்று அங்காடியில் வீழ்ச்சி அடைந்தது.

அதிபர் கார்ட்டருக்குப் பின் வந்த இரீகன் (Reagan) அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, அமெரிக்க தாலரை வலிமையடையச் செய்ய வேண்டியதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இடைக் கால மீட்பு நடவடிக்கையாக, வட்டிவீதத்தை உயர்த்தி அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டத்தை வரவழைத்தது. அதனால் 1980–இலிருந்தே தாலர் வலிமையடையத் தொடங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தாலர் அடைந்து வரும் மதிப்பேற்றம், 1970–இன் இறுதியில் காணப்பட்ட மதிப்பிறக்கத்தின் மறு வெளிப்பாடு ஆகும். ஆனால், வலிமையான தாலரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பாதித்து அதன் தொடர்பான வேலை வாய்ப்பைக் குறைத்திருக்கிறது. உயர் வட்டிவீதம் காரணமாக அமெரிக்காவை நோக்கிப்பாயும் மூலதன ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த, மற்ற ஐரோப்பிய நாடுகளும், சப்பானும் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் கடன் சுமையும் இதனால் அதிகமாயிற்று. இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உலகப் பொருளாதாரச் சம நிலைக்கும் வலுவிற்கும் தாலர் வலிமையோடு இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் (Budget) பற்றாக்குறையைக் குறைப்பதோடன்றிப் பணவீக்கத்தையும் குறைத்தால் மட்டுமே தாலர் வலிமையடையும் என்பதை அமெரிக்கா உணர ஆரம்பித்தது. பணவியல் ஆய்வாளர்களின் கணிப்பில் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தாலர் பன்னாட்டுப் பண அமைப்புகளிலும், வாணிகத்திலும் பெரும் பங்கு வகித்து வரும். எனவே, அமெரிக்க தாலரின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுக்குட்படாமல் பாதுகாக்கப்படுவது அமெரிக்க நிருவாகத்தின் திறமையைச் சார்ந்தது. டி.ச.

துணை நூல்கள்:

Corgen, W.M., “Inflation, Exchange Rates and the World Economy”, Clarendon Press, Oxford, 1977.

Ronald MC. Kinnon, I., “Money In International Exchange”, Oxford University Press, 1979.

Bo Sodersten, “International Economies”, The Macmillan Press, 1980.

Yeager, L.B., “International Monetary Relations Theory, History and Policy”, Allied Publishers (Pvt.), 1978.

அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை: அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியரசில் 50 மாநிலங்கள் உள்ளன. இவற்றுள் அவாய் (Hawai) தீவுகளும் அடங்கும். அமெரிக்க நாட்டு மக்களாட்சித் தத்துவத்தைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒன்றாகக் கல்வி கருதப்படுகிறது. ஆகவே ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி இந்நாட்டில் எல்லோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடியரசில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டின் சமுதாய மேம்பாட்டிற்காகப் பயனுள்ள பங்கினை ஆற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், அமெரிக்கக் கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் மக்களாட்சிப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

பொதுப் பள்ளிகள் என்று குறிக்கப்படும் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி வழங்கப்படுகிறது. தொலை தூரத்தில் அல்லது ஒதுக்குப்புறமாக வாழும் குழந்தைகள் கூட, எளிதில் அணுகிக் கல்வி கற்கும் வகையில், பொதுப் பள்ளிகள் அமைந்துள்ளன.