உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை

458

அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை

அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் இருநிலைகள் உள்ளன. அவை 1) இளநிலை உயர் பள்ளி (Junior High School) 2) முதுநிலை உயர் பள்ளி (Senior High School) ஆகும். இப்பள்ளிகளில் படிக்கும் கால அளவு மாநிலந்தோறும் மாறுபடும். உயர்நிலைப் பள்ளிகளில் பொதுக் கல்வியும் (General Education), சிறப்புக் கல்வியும் (Special Education) வழங்கப்படுகின்றன. பொதுக் கல்வி, மாணவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஆயத்தம் செய்கிறது. சிறப்புக் கல்வி வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழிற் கல்வியாகத் தரப்படுகிறது. மொழி, கணிதம், அறிவியல், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வரலாறு, சமூக அறிவியல் போன்ற பாடங்கள் பொதுக்கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து, வேளாண்மை, கால்நடை வளர்த்தல், வானொலி பழுதுபார்த்தல் போன்ற பாடங்கள் தொழிற் கல்வியாகத் தரப்படுகின்றன. தொழிற்கல்வி பயில்வோருக்கு ஆங்கிலம், சமூக அறிவியல், வரலாறு ஆகிய மூன்று பாடமும் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொதுக் கல்வியும் தொழிற் கல்வியும் பொதுவாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. தொழிற் கல்விக்கென்றே தனியாக உயர்நிலைப் பள்ளிகளும் உண்டு.

உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குள்ளேயும் மற்றும் பள்ளிகளுக்கிடையேயும் நடத்தப்படும் விளையாட்டுகள் அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் சிறப்புக் கூறு ஆகும். இவையல்லாமல் நாடகம், இசையாக்கம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கு கொள்ளவும், சொற்பொழிவுக்குழு, சிறு நாடகக்குழு, இசைக்குழு ஆகியவற்றில் சேரவும் மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுமலர் வெளியிடுகிறது. பல பள்ளிகளில் செய்தித்தாள்களும் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் தன்னாட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன. தன்னாட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். பள்ளியின் பொதுவான நடைமுறைகள், மாணவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் தன்னாட்சி மன்றம் பெரும்பங்கு வகிக்கிறது.

மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி நலன்களில் மிகுந்த அக்கறை காட்டுவதோடு பள்ளி நடத்தும் விழாக்கள், சுற்றுலாக்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தி வைப்பதில் ஆசிரியர்களுக்குத் துணையாக நிற்கின்றனர். பொதுமக்களில் பலர், தங்கள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உறுதுணையாக உள்ளனர். பள்ளிகள் நடத்துவதில் பொது மக்கள் துணையாக இருப்பதால், பள்ளியும் சமுதாயமும் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளன. பள்ளி முடிந்த வேளையில் பள்ளி வளாகம், பொதுமக்கள் விருப்பப்படி அவர்களது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள தொண்ணூறு விழுக்காடு தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இலவசக் கல்வி வழங்கும் பொதுப் பள்ளிகள் ஆகும். அவை மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினரால் நிருவகிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளுக்கான செலவு வட்டார வரி விதிப்பின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கர்களாலும் பிற திருச்சபைக் குழுக்களாலும் நடத்தப்படும் பள்ளிகளில் சமயக் கல்வி அளிக்கப்படுகிறது. இலவசமாக நடத்தப்படும் அரசுப் பொதுப்பள்ளியில், எந்த அமெரிக்கக் குழந்தையும் சேர்ந்து பயிலலாம். தங்கள் பிள்ளைகள் முற்றிலும் தனிப்பட்ட சமூக, கல்விச் சூழலில் பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், பொதுப்பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கின்றனர்.

பொதுவாக, அரசு நடத்தும் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருபால் மாணவரும் சேர்ந்தே பயிலுகின்றனர். இவர்களுக்குத் தனித்தனிப் பள்ளிகளும் உண்டு. திருச்சபைப் பள்ளிகளில் பொதுவாக இருபாலாரும் பயிலுகின்றனர்.

பொதுப் பள்ளிகளைக் கல்வி மன்றம் (Board of Education) என்ற அமைப்பு மேற்பார்வை செய்து நடத்துகிறது. ஒவ்வொரு கல்வி மன்றத்திற்கும் 5 அல்லது 9 உள்ளூர்க் குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்ற உறுப்பினர்களே, பள்ளி நடத்துவதற்குத் தேவையான பணம், பள்ளியின் பொதுவசதி, வருகைப் பதிவு முறை போன்ற செயல்களைத் தீர்மானிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், உள்ளூர் மக்கள் பள்ளியை நடத்துவதில் சிறப்பாகப் பங்கு கொள்கின்றனர்.

தென் அமெரிக்க மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 1950–60 களில் இனப்பாகுபாடு பெரிய சிக்கலாக இருந்தது. ஆனால், இன்று அனைத்துப் பள்ளிகளும் இனப் பாகுபாடு இன்றி ஒருமைப்பாட்டுடன் செயல்பட முயல்கின்றன. கறுப்பரின் குழந்தைகள், இன்று ஊர்திகளில் வெள்ளை அமெரிக்கக் குழந்தைகளோடு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இது இனப் பாகுபாடு பள்ளிகளில் நீங்கி ஒருமைப்பாடு வளர வழியமைக்கிறது. ஈ.ஞா.வே.