உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கா

475

அமெரிக்கா

மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. தங்கம் வெள்ளி ஆகியவை மிகுதியாக அவர்களால் பயன்படுத்தப்பட்டன. பல கலைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். தென் அமெரிக்காவின் மேற்கில் பெரு, சிலி போன்ற பகுதிகளில், கி.பி. 14–ஆம் நூற்றாண்டில், இன்காக்கள் எழுச்சி பெற்றனர். வேளாண்மை, கட்டடக்கலை, சிற்பக்கலை முதலானவற்றில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இவ்விரண்டு பேரரசுகளும் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வளம் பெற்றிருந்தன.

அமெரிக்கக் கண்டங்களைப் பற்றியும் அங்கு ஏற்றம் பெற்றிருந்த எழில்மிகு பேரரசுகளைப் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்திருக்கவில்லை. கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரென்டன் முனிவர் வட அமெரிக்கக் கண்டத்திற்குச் சென்றார் என்னும் செய்தி கூறப்படுகிறது. அதே நூற்றாண்டில் புத்த சமயப் பரப்பாளர்கள் இன்றைய மேற்குக் கனடாப் பகுதிக்குச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர். இறுதியில் இசுகாண்டினேவியக் கடற்கொள்ளைக்காரர்களாகிய வைக்கிங்குகள் (Vikings) கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கிரீன்லாந்துக்குச் சென்று வந்ததாகக் கருதப்படுகிறது. இலீப் எரிக்சன் (Leif Ericsson) கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றுக்களுக்கெல்லாம் போதுமான சான்றுகள் இல்லை.

துருக்கியர்கள் கி.பி. 1453–ஆம் ஆண்டு கான்சுடாண்டிநோபிளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வரும் நிலவழிகளையும் கடல்வழிகளையும் அவர்கள் மூடிவிட்டார்கள். எனவே ஐரோப்பாவிலிருந்து மேற்குத் திசையில் சென்று இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க இசுபெயின் நாடு முயன்றது. அந்நாட்டின் அரசர் பெர்டினான்டும் அரசி இசபெல்லாவும், கி.பி. 1492-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 3–ஆம் நாள், கிறிசுதாபர் கொலம்பசு தலைமையில், 88 பேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார்கள். அவர்கள் சாந்த மேரியா, நைனா, பிண்டா ஆகிய மூன்று கப்பல்களில் பயணம் செய்தார்கள். அறுபத்தொன்பது நாள்கள் அட்லாண்டிக்குக் கடலில் பயணம் செய்த பின்னர், பகாமாத் தீவுகளில் இறங்கினார்கள். தாம் இந்தியாவுக்கு அருகில் உள்ள சில தீவுகளுக்கு வந்திருப்பதாகவும், இந்தியாவுக்குப் புதிய கடல்வழியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் கொலம்பசு தவறாகக் கருதினார். அங்கிருந்த மக்களைச் செவ்விந்தியர்கள் என்று குறிப்பிட்டனர். அப்பெயரே புதிய உலகமாகிய அமெரிக்காவில் வாழ்ந்த மக்களுக்கு நிலைத்துவிட்டது. கொலம்பசு கி.பி. 1493-ஆம் ஆண்டு சனவரி மாதம் இசுபெயின் நாட்டிற்குத் திரும்பிய போது, இந்தியாவுக்குப் புதிய கடல்வழியைக் கண்டுபிடித்ததற்காகச் சிறப்பான வரவேற்புக் கொடுக்கப்பட்டு வானளாவப் புகழப்பட்டார். அதன் பின்னர், கி.பி. 1493, 1498, 1502–4 ஆகிய ஆண்டுகளில் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகியவற்றிற்குச் சென்று அப்பகுதிகளை ஆராய்ந்தறிந்தார். கொலம்பசு மேற்கொண்ட முதல் கடல்வழிப் பயணத்திற்குப் பின்னர், இங்கிலாந்து கி.பி. 1497–ஆம் ஆண்டு சான் காபட் (John Cabot) என்பவரை அனுப்பியது. அவர் நியூபவுண்டுலாந்து (Newfoundland) பகுதிக்குச் சென்று வந்தார். போர்ச்சுகல் கி.பி. 1500–ஆம் ஆண்டு பெட்ரோ கேப்ரல் (Pedro Cabral) என்பவரை, இந்தியாவுக்குச் சென்று வரும்படி அனுப்பியது. அவருடைய கப்பல் புயலால் தாக்கப்பட்டுப் பிரேசில் பகுதிக்குத் தள்ளப்பட்டது. தாம் சென்று வந்தது அமெரிக்கா என்பதை அறியாமலேயே கி.பி. 1506–ஆம் ஆண்டில் கொலம்பசு இறந்துவிட்டார். இத்தாலிய மாலுமி அமெரிகோ வெசுபுசி (Amerigo Vespucci) என்பவர், கொலம்பசு சென்று வந்தது ஒரு புதிய பெருநிலக்கண்டம் என்பதைக் கி.பி. 1507–ஆம் ஆண்டு விளக்கினார். எனவே அப்புதிய உலகம் அவர் பெயரையே கொண்டு அமெரிக்கா என அழைக்கப் பெற்றது.

கொலம்பசு கண்டுபிடித்தது ஒரு புதிய பெருநிலக் கண்டம் என்பதை அறிந்த ஐரோப்பிய நாடுகள், அக்கண்டத்தில் தங்கள் மேலாண்மையை ஏற்படுத்திக் கொள்ளப் போட்டியிட்டன. அவற்றுள் இசுபெயின், பிரான்சு, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவை முதலிடம் பெற்றன. இசுபெயின் நாட்டினால் அனுப்பப்பட்ட கொலம்பசு அப்புதிய கண்டத்தைக் கண்டு பிடித்ததால் அக்கண்டத்தில் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இசுபெயின் சீரிய உரிமை பெற்றிருந்தது. அந்நாடு கி.பி. 1513–ஆம் ஆண்டு பால்போ (Balboa)வை அனுப்பியது. அவர் பனாமா என்னும் குறுகிய நிலப் பகுதியைக்கண்டறிந்து, பசிபிக்குக்கடற்கரைவரை சென்று திரும்பினார். அதே ஆண்டு, பான்சு டி இலியோன் (Ponce de leon) புளோரிடா பகுதியையும், கியூபாத் தீவையும் ஆய்ந்து அவற்றின் நில அமைப்பை அறிந்தார். எராண்டோ கார்டெசு (Herando Cortes) கி.பி. 1519–ஆம் ஆண்டு, 550 பேர் கொண்ட படையுடன் சென்று கியூபாவில் இறங்கினார். பின்னர், மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் வளம் பெற்றிருந்த அசுதெக் பேரரசைக் கண்டு பெருவியப்புக் கொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அப்பேரரசை அழித்துவிட்டு அங்கே இசுபெயின் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. அங்கி-