உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைப்பியல்சார் மானிடவியல்

485

அமைப்பியல்சார் மானிடவியல்

நேரடியாகக் கிளைத்தவொன்றே, இன்னும் சொல்லப் போனால், மலினோசுகி, இராட்கிளிப்பிரௌன், தர்க்கைம் ஆகியோருடைய அணுகுமுறைக்கும், செருமானியப் பண்பாட்டுப் பரவல் கோட்பாட்டினரின் (German Cultural Diffusionists) அணுகுமுறைக்கும் இடையே ஒரு புது உருவாக்கத்தைப் பெற்று, அமைப்பியல்சார் மானிடவியல் விளங்கி வருகிறது எனலாம்.

அமைப்பியல் அணுகுமுறை என்பதற்கு, அமைப்புகள் பற்றிய அறிதல் முறை என்று மட்டும் சொல்வது விளக்கம் தந்ததாக அமையாது. ஏனெனில், ‘அமைப்பு’ (Structure) என்றால் என்ன எனும் வினா அடுத்து எழுகிறது. அனைத்துச் சமுதாய இயல் நிகழ்ச்சிகளும் (Social Phenomena) ஒரு குறிப்பிட்ட அளவு ஒழுங்கு முறையைக் கொண்டுள்ளன அல்லது வெளிப்படுத்துகின்றன என்பது வெளிப்படை. இத்தகு ஒழுங்கு முறையே ‘அமைப்பு’ என்பார் இலெவி–இசுட்ராசு, இதனையே, ‘விதிக்கு அடிப்படையாக அமையும் மனநிலை’ என்றும் இவர் உரைப்பார். எடுத்துக் காட்டாக ஒரு பழங்குடிக் குழு, பிறிதொரு குழுவிற்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால், அப்பெண்ணை ஏற்றுக் கொண்ட குழு, ஈடாக மற்றொரு பெண்ணைத் தர வேண்டும் என்ற முறை அவர்களிடையே ஒரு விதியாக நிலவுகிறது. இங்கு, ‘ஒன்று பெற்றால், அதற்கு ஈடாக மற்றொன்றைத் தருதல் வேண்டும்’ என்ற விதிக்கு அடிப்படையாகும் மனநிலையின் பெயரே ‘அமைப்பு’ என்று சொல்லப்படுகிறது. இத்தகைய அமைப்புப் பற்றிய கருத்தாக்கம் (Conception) இலெவி–இசுட்ராசுக்கு உருப்பெற்றது, நினைவிலி மனம் (Unconcious mind) மற்றும் அமைப்புசார் மொழியியல் கருத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே என்பது நினைவு கூர வேண்டியதொன்றாகும். சான்றாக, “நம்மால் காணமுடியாததாக உருவாவது நம் செயல்களிலும் பழக்கங்களிலும் உருவாகி இருப்பது” எனும் அமைப்புப் பற்றிய இவரது வரையறை, பிராய்டின் (Freud) நினைவிலி மனக் கருத்தாக்கத்தைத் தழுவியதே. இது போன்றே, “மொழியில், ஒலிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளின் வழியே ஒரு வகை ஒழுங்கு ஏற்படும்” எனும் அமைப்பு மொழியியல் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே, “நாம் பார்க்கும் பண்பாட்டு அமைப்பில் காணப்படும் முதன்மைக்கூறு ஒன்றே என்று அறிந்து கொண்டால், முழுமையாக மனிதப் பண்பாடு அனைத்தையும் காணவியலும்” என்ற முடிவுக்கு வருகிறார் இலெவி-இசுட்ராசு. அவர் இவ்விரு கருத்தாக்கங்களையும் தம் கோட்பாட்டில் திறம்படக் காட்டுகிறார். அடிமன நிலையில் கிடக்கிற அமைப்புகளை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டுமே ஒழிய, வெளிப்படையாகத் தெரிகிற பொருள்களை நேரடியாக ஆய்வு செய்வதில் பயனில்லை என்கிறார். அது போல், ஓர் ஆய்வானது, ஒன்றின் கூறுகளைக் குறித்துத் தெரிந்து கொள்வதைவிட அந்தக் கூறுகளுக்கு இடையில் உள்ள உறவை ஆய்வு செய்வதாக அமைய வேண்டும் என்கிறார். இக்கருத்துகளையே, பொராரோப் (Bororo) பழங்குடியினரின் சமுதாய அமைப்பின்வழி நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

பொராரோப் பழங்குடியினரிடையே இரு பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒவ்வொரு பிரிவும் கிராமத்தின் இடப் புறமும் வலப் புறமும் சிறு பிரிவுகளை மையமாகக் கொண்டு விளங்குகிறது. இவ்வாறு, தங்களுக்குள் இரு பெரும் பிரிவுகள் இருப்பதை இந்தப் பழங்குடியினர் அறிவர் என்றாலும், இலெவி–இசுட்ராசு, இரண்டாகப் பிரிந்துள்ள இவர்களின் மேம்போக்கான அமைப்புகளுக்குள் (Superficial Structure or Surface Structure) வேறு ஒரு நிலைமுறைமையும் (Ranking) இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அதாவது, ஒவ்வொரு பிரிவும் மேல்மட்டம், நடுமட்டம், கீழ்மட்டம் என மூன்று அடுக்குகளாக மேலும் பாகுபடுத்தப்படுகிறது. மேல்மட்டம் மேல் மட்டத்தோடும், நடு மட்டம் நடு மட்டத்தோடும், கீழ்மட்டம் கீழ்மட்டத்தோடும் மட்டுமே திருமண உறவு கொள்கின்றன. இவ்வாறு, வெளித் தோற்றத்தில் இரு பெரும் பிரிவுகளாகத் தோன்றும் பொராரோப் பழங்குடியினர், உண்மையில் மூன்று அகமண முறையைப் பின்பற்றும் ஒழுங்கமைப்பு கொண்டுள்ளதைப் புலப்படுத்துகின்றார். இதனால், உண்மையான அமைப்பு மேல் மட்டத்திற்குப் புரியாத நினைவிலி மட்டத்திலேயே (Unconcious level) காணப்படும் என்ற ஆய்வு உண்மையையும் உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறு, ‘அமைப்பு’ என்பதனை நிறுவிய பிறகு அமைப்பியல் குறித்த வரையறைக்கு வருகிறார் இலெவி–இசுட்ராசு, அனைத்து மனிதருக்கும் பொதுமையான, உள்ளீடு பரவியுள்ள, ஆழ்ந்த தன்னியல்பான உளவியல்–உயிரியல் தன்மையின் அமைப்புகளைப் பிரித்தறிவதே ‘அமைப்பியல்’ என்பது இவர் தம் முடிந்த முடிவு. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடும் புறநிலை நடத்தையில் (Surface Behaviour) இந்த மறைபொருளாயுள்ள அக அமைப்புகள் (Infrastructures) மிகச் சிறிதே காட்டப்படுகின்றன. பண்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்படையான நடத்தை கண்டுணரக் கூடியதே. ஆனால், சூழ்நிலை அமைப்புகள் அதாவது, முதலில் சரியான பண்பாட்டு மாற்றுவிதிகளைக் கண்டுபிடித்து, பின் ஒரு தொகுதியின் மாற்று விதிகளை ஏனைத் தொகுதிகளின் விதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். பண்பாட்டின் அடிப்படை அமைப்பை மறைத்த நிலையில், பல