அமைப்பு
492
அமைப்பு
இணைக்கத் தேவையான விதிகளையும் தர வேண்டும்.
சான்று: ஒலியனியலின் சிறுகூறு ‘ஒலியன்கள்’, /க/ என்பது மூன்று சூழல்களில் மூன்று விதமாக ஒலிக்கப்படுகிறது. சொல்முதலிலும் (கப்பல்), மெய் இரட்டித்தலிலும் (பக்கம்), வல்லினமெய் மயக்கங்களிலும் (கடற்கரை) (k) என்றும்; மெல்லினத்துடன் வரும்போது, (தங்கம், கண்கள்) (g) என்றும்; சொல் நடுவில் தனி உயிர்மெய்யாக வரும்போது (பகல், அகம்) (h) என்றும் ஒலிக்கப்படுகிறது, எனவே, /க/ மூன்று ஒலிகளின் தொகுப்பாகும். இதுவே ஒலியன் எனப்படுகிறது.
இவ்வாறு ஆராயும் ஒவ்வொரு நிலையும் அடுத்த உயர்நிலைக்கு அடிப்படையாகிறது. இத்துடன் வருமுறைகளையும் தரவேண்டும், மூன்று வருமுறைகள் உள்ளன. அவை, துணை நிலையாக வழங்கல் (Complementary), உறழ்வு நிலையாக வழங்கல் (Contrastive), கட்டில்லாமல் வழங்கல் (Free Variation) என்பனவாகும். இவ்வாறு ஆராய்வதற்குப் பதிலீடு செய்தல் (Substitution), அண்மை உறுப்புப் பகுப்பாய்வு (Immediate Constituent Analysis) என்று இரண்டு உத்திகள் உள்ளன.
மயக்கம்: ஒரு சொல் அல்லது ஒரு தொடர் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைத் தருதல் பொருட் பன்மையாகும். பொருள்கள் பலவாகக் கிடைப்பதன் விளைவே பொருள் மயக்கம் (Ambiguity), தொடர்களின் அமைப்பால் நேர்ந்தபொருள் மயக்கம் அமைப்பு மயக்கம் (Structural Ambiguity) எனப்படுகிறது. ஒலி (அல்லது எழுத்து), தொடரமைப்பு, சொல் ஆகிய மூன்றின் காரணமாகப் பொருள்மயக்கம் ஏற்படலாம்.
‘புலிகொல் யானை’ எனும் தொடரில் அமைப்பு மயக்கம் உள்ளது. ‘புலியைக் கொன்ற யானை’, ‘புலியால் கொல்லப்பட்ட யானை’ என்று இரு பொருள்கள் வருகின்றன. பொருள் மயக்கத்திற்குக் காரணம் இரண்டாம் வேற்றுமை உருபான ‘–ஐ’, மூன்றாம் வேற்றுமை உருபான ‘–ஆல்’ ஆகிய இரண்டும் மறைந்து நின்று பொருள் தருவதே என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இக்கால மொழியியலார் இதை வேறுவகையாக ஆராய்கின்றனர்.
இவ்வாறு பொருள்மயக்கம் ஏன் வருகிறது என்பதற்குரிய தெளிவான காரணத்தை மரபு இலக்கணமும், விளக்க மொழியியலும் (Descriptive Linguistics) தரவில்லை. இந்நிலையில் இவற்றைச் சிறப்பாக மாற்றிலக்கணமே (Transformational Linguistics) விளக்குகிறது.
வழுவற்ற வாக்கியங்களை உருவாக்குவதனை விளக்குவதாலும் அதற்குத் தேவையான விதிகளைத் தருவதாலும் மட்டும் ஒரு மொழியின் இலக்கணம் சிறப்படைந்து விடுவதில்லை. அது விளக்க வேண்டிய பகுதிகள் மிகுதியாக உள்ளன. சில வாக்கியங்களுக்கு ஒரே அமைப்பு இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பது; வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரே பொருளைத் தருவது; வாக்கிய அமைப்புகள் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பது போன்ற பலவற்றையும் இலக்கணம் விளக்க வேண்டும்.
ஒரு கூற்றில் (Utterance) அமைந்திருக்கும் இலக்கணக் கூறுகளையும் அவற்றின் இயல்புகளையும் ஒன்றுக்கொன்றுள்ள தொடர்புகளையும் அமைப்பு விளக்குகிறது. இவ்வாறு அமைகின்ற வாக்கியத்திற்கு ‘அகஅமைப்பு’ (Deep Structure), ‘புறஅமைப்பு’ (Surface Structure) என இரண்டு அமைப்புகள் உள்ளன என மாற்றிலக்கணம் கூறுகிறது. அகஅமைப்பில் மாற்று விதிகள் (Transformational Rules) செயற்பட்டுப் புற அமைப்பு வருகிறது. இப்புற அமைப்பே தாம் பார்க்கும் அல்லது கேட்கும் வாக்கியமாகும். சில வேளைகளில் இரண்டு அல்லது மேற்பட்ட அக வாக்கியங்களிலிருந்து ஒரேயொரு வாக்கியத்தையோ தொடரையோ மாற்றுவிதிகள் வருவிப்பதுண்டு. இவ்வாறு இரண்டு அடிப்படை வாக்கியங்களிலிருந்து வருகிற ஒரு வாக்கியத்தில் பொருள் மயக்கம் இருக்கும், இது அமைப்பொற்றுமை (Constructional homonemity) எனப்படும்.
‘புலிகொல் யானை’ இருபொருளைத் தருவதற்கு, ‘புலி யானையைக் கொன்றது’; ‘யானை புலியைக் கொன்றது’ எனும் இரண்டு அக வாக்கியங்களிலிருந்து அத்தொடர் வந்ததுதான் காரணமாகும்.
இதைப்போன்றே ‘நான் ஓர் அழகான பெண்ணையும் ஆணையும் பார்த்தேன்’ என்ற வாக்கியத்தில் அழகான எனும் பெயரடை ‘பெண்’ எனும் பெயருக்கு அடையாக வந்தால் ஒரு பொருளையும், பெண் - ஆண் எனும் இரு பெயர்களுக்கும் அடையானால் இன்னொரு பொருளையும் தருகிறது. இங்கும் இவ்வாறு பொருள் மயக்கம் ஏற்பட்டதற்கு வாக்கியத்தின் அகஅமைப்பு வேறுபாடுகளே காரணம் ஆகும். விளக்க மொழியியலார் இதைப் போன்ற வாக்கியங்களின் பொருள் மயக்கத்தை அண்மை உறுப்புப் பகுப்பாய்வால் (Immediate Constituent Analysis) விளக்குவர்.
ஒலி காரணமான பொருள் மயக்கத்திற்குச் ‘செம்பொன்பதின்றொடி என்னும்’ சொற்றொடரைக் கூற-