அயல்நாட்டு உதவி
519
அயல்நாட்டு உதவி
அயல்நாட்டு உதவி அதிக அளவில் வழங்கப்பட்டாலும், சீரிய முறையில் வழங்கப்படாவிட்டால் அதனால் யாதொரு பலனும் அடைய முடியாது. அயல் நாட்டுக் கடன்கள் பெற்றால் கட்டாயமாக அவற்றை முதலும் வட்டியுமாகத் திருப்பித் தர வேண்டும். ஆனால், கொடைகளாகப் பெற்றதனைத் திருப்பித் தர வேண்டியதில்லை. பொதுவாக, நாடுகள் கொடைகளை மிகுதியாக நம்பி இருக்கக் கூடாது. பெரிய கடன் தொகையை மற்ற நாடுகளிடம் இருந்து பெறும் பொழுது நாட்டின் கடன் சுமை மிகுதியாகிறது. இந்தியாவில் 1974–75 வரை அயல்நாட்டு உதவி கடன் வாயிலாகப் பெறப்பட்டது. ஆனால், 1975–76–ஆம் ஆண்டிலிருந்து அயல்நாட்டு உதவி கொடை வாயிலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் கொடை. களின் அளவு மிகுந்து கொண்டே செல்கிறது. 1974–75–ஆம் ஆண்டு 7.0 விழுக்காட்டில் இருந்த கொடையின் அளவு, 1975–76, 1976–77–இல் 15.4 விழுக்காடாகவும், 1977–78–ஆம் ஆண்டு 20.2 விழுக்காடாகவும், 1978–79–ஆம் ஆண்டு 21.6 விழுக்காடாகவும், 1979–80–ஆம் ஆண்டு 22.3 விழுக்காடாகவும், 1980–81–ஆம் ஆண்டு 18.3 விழுக்காடாகவும், 1981– 82–ஆம் ஆண்டு 17.3 விழுக்காடாகவும் உயர்வு பெற்றது. இவ்வாறு கொடைகளின் அளவு மிகுதிப்படுவதற்குக் காரணம், இந்தியாவின் கடன் பளு நாளுக்கு நாள் மிகுதியாகிக் கொண்டு வருவதேயாகும்.
அயல்நாட்டு உதவியின் நெகிழ்ச்சித் தன்மையை அறிவதற்குக் கட்டுப்பட்ட, கட்டுபடாத கடன்கள் (Tied & Untied Credits) உதவுகின்றன. கட்டுப்படாத கடனை ஒரு நாடு பெறும்போது அது விரும்பிய திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாகப் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கிடைக்கும் உதவி பெரும்பாலும் கட்டுப்பட்ட உதவியேயாகும். அமெரிக்க உதவியை இந்தியா, அமெரிக்கப் பொருள்கள், பணிகள் மீதுதான் செலவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. பொதுவுடைமை நாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் உதவியும் இவ்வகையைச் சார்ந்ததே. கட்டுப்பட்ட கடனில் பல குறைபாடுகள் உள்ளன. கடன் பெற்ற நாடு, கட்டாயமாக உதவி அளித்த நாட்டின் பொருள்களையும் கருவிகளையும் வாங்க நேரிடுகிறது. இதனால், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களின் செலவு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக மிகுதிப் படுத்தப்படுகிறது. ஏனென்றால், பன்னாட்டு விலைகளை விட உதவி அளிக்கும் நாட்டுப் பொருள்களின் விலை மிகக் கூடுதலாக உள்ளது. மேலும், அயல் நாட்டு உதவியை அளிக்கும் நாடுகள் பொருள்களையும் கருவிகளையும் தங்கள் கப்பல்களிலேயே ஏற்றுமதி செய்வதால், உதவியைப் பெறும் நாடுகள், கப்பல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதனால், கடன் உதவிபெறும் நாடு, கடன்பெறும் முக்கிய நோக்கத்தையே இழந்துவிடுகிறது. மேலும் கடன் அளிக்கும் நாடு, கட்டாயமாக மூலதனம் செறிந்த உற்பத்தி (Capital Intensive Technique) முறையையே கையாள வேண்டும் என்று உதவி பெறும் நாட்டைக் கட்டாயப்படுத்துவதால், உழைப்பு (Labour) மிகுதியாகப் பயன்படுத்தும் உழைப்புச் செறிந்த உற்பத்தி முறையைக் (Labour Intensive Technique) கையாள முடியாமல் போய்விடுகிறது.
கட்டுப்படாத கடன்கள் பொது நோக்கத்திற்காகக் கொடுக்கப்படுவதாகும். இதனைத் திட்டமில்லாத உதவி என்றும் குறிப்பிடுகின்றனர். ஆலன் கார்லின் (Alan Carlin) என்ற பொருளாதார வல்லுநரின் கருத்துப்படி, கட்டுப்படாத உதவி என்பது, உதவியைப் பெறும் நாடு, தான் பெறும் உதவியை ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டும் செலவிடாமல் பல வளர்ச்சித் திட்டங்களுக்காகச் செலவிடுவதாகும். இதனால், இவ்வுதவி கட்டுப்பட்ட உதவியை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இவ்வுதவியைப் பெறுவதால், உதவியின் செலவும் குறைவாக இருக்கும்.
ஆனால், இப்பொழுது இந்தியாவில் கட்டுப்பட்ட கடனின் அளவே பெருகி வருகிறது. கட்டுப்பட்ட கடனின் அளவு, 1976–77–ஆம் ஆண்டு, 55.4 விழுக்காடாகவும், 1977-78-ஆம் ஆண்டு 22.4 விழுக்காடாகவும், 78–79-ஆம் ஆண்டு 24.2 விழுக்காடாகவும், 1979–80–ஆம் ஆண்டு 21.3 விழுக்காடாகவும், 1980–81–ஆம் ஆண்டு 17.4 விழுக்காடாகவும், 1981–82–இல் 29.3 விழுக்காடாகவும் உயர்ந்தது. கட்டுப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் பொழுது இந்தியாவின் செலவு ஒரு மடங்கு மிகுதியாகிறது. இக்கடனை அடைப்பதற்கு இந்தியா, தன் முக்கிய பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஏற்றுமதியின் மதிப்பு, தான் வாங்கும் கடனின் அளவைவிட மிகுதியாக இருப்பதால் இந்தியாவுக்கு மிகுந்த இழப்பு ஏற்படுகிறது. மேலும், இக்கடனை அடைப்பதற்கு அயற் செலாவணி பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தியச் செலாவணியால் கடனைத் திருப்பிக் கொடுத்தால் வெளிநாட்டுக் கடன் தொல்லையைச் சிறிதளவு குறைக்க முடியும். அன்றியும் கடனைத் திருப்பிச் செலுத்தும்பொழுது அக்கடன், நீண்டகாலக் கடனாகவோ, குறுகியகாலக் கடனாகவோ இருக்கலாம். நீண்டகாலக் கடனை விடக் குறுகியகாலக் கடனைத் திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாகும். கொடைகள் வாயிலாகப் பெறும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடு இல்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவிலிருந்து பொதுச் சட்டம் 480 (P.L. 480) வாயிலாகவும், பொதுச்சட்-