உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு உதவி

520

அயல்நாட்டு உதவி

டம் 665 (P.L. 665) வாயிலாகவும் வரும் உதவிகளைக் கூறலாம்.

எந்தத் துறையில் இந்தியா மிகுதியாக அயற்செலாவணியைச் செலவழிக்கத் திட்டமிடுகிறதோ, அந்தத் துறைக்கு முதலிடம் கொடுத்து அயல்நாட்டு உதவி வாயிலாக அத்துறையை முன்னேற்றமடையச் செய்கிறது. மேலும் இதன் வாயிலாக, மூலதனப் பொருள்கள் உற்பத்தி செய்யும் துறையையும், பொருளாதார நடவடிக்கையையும் விரிவுபடுத்தி, நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துகிறது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது, உணவுப்பொருள்களை இறக்குமதி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது. இந்தியாவில், அயல்நாட்டு உதவி, போக்குவரத்து வளர்ச்சி, மின் திட்டங்கள், இரும்பு உற்பத்தி, தொழில்துறை முன்னேற்றம், வேளாண்மை முன்னேற்றம், உணவுப் பொருள்கள் உதவி, எண்ணெய், மற்றும் எரிபொருள், ஆற்றல் (Energy) பொருள்கள் வாங்குவது, உயர்கல்வி அளித்தல், குடிநீர் வசதி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், நகர முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வாங்கப்படுகிறது. மேலும், குறுகிய காலக் கடன்களை முதலும் வட்டியும் சேர்த்து அடைக்க வேண்டியிருப்பதால் இவ்வுதவி தேவைப்படுகின்றது. பற்றாக்குறையின் காரணமாக இறக்குமதிப் பொருள்களின் அளவு ஏற்றுமதிப் பொருள்களின் அளவை விட மிகுதியாக இருப்பதால், இறக்குமதிப் பொருள்களுக்கு அயற் செலாவணியைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அயல்நாட்டு உதவியை வரையறுக்கும் காரணிகள்: அயல்நாட்டு உதவியைச் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டுமானால், பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகளில், அகக் கட்டுமான (Infrastructure) வசதிகளான போக்குவரத்து, மின்சாரம், உழைப்புத் திறன் ஆகியவை கண்டிப்பாக இருத்தல் வேண்டும். மேலும், அயல்நாட்டு உதவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை இந்நாடுகள் உருவாக்க வேண்டும். பொதுவாகப் பொருளாதார வளர்ச்சி அடையாத நாடுகளில் நிலையான அரசியல் அமைப்பினைக் காண முடியாது. எனவே, இவ்வுதவியை நிலையான அரசியல் அமைப்புள்ள நாடுகளும், சட்டமும் ஒழுங்கும் நன்றாகக் காப்பாற்றப்படும் நாடுகளுமே பெற முடியும். அந்நாடுகளில் பணவீக்கமும் மிகுதியாக இருக்கக்கூடாது. மேலும், அந்நாடுகளின் ஏற்றுமதி மிகுதியாகவும் இறக்குமதி குறைவாகவும் வளர்ச்சிக் காலங்களில் இருந்தால், மிகையான அயல்நாட்டு உதவியைப் பெற முடியும்.

நர்சுகு (Nurske) என்ற பொருளாதார வல்லுநரின் கருத்துப்படி, வீட்டில்தான் மூலதனம் உருவாக்கப்படுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல், அந்நாட்டு மக்கள் திறமைசாலிகளாகவும் உழைப்பாளிகளாகவும் வலுவுள்ளவர்களாகவும் இருந்தால், அயல்நாட்டு உதவியைப் பெருமளவில் அடையமுடியும். பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள் அயல்நாட்டு உதவியை உறுதிப்படுத்துகின்றன. அயல்நாட்டு உதவி அளிக்கும் நிறுவனங்கள் 1. பன்னாட்டு வளர்ச்சி மறு சீரமைப்பு வங்கி, 2. பன்னாட்டு நிதி நிறுவனம். 3. பன்னாட்டு வளர்ச்சிக் குழு. 4. ஆசிய வளர்ச்சி வங்கி முதலியனவாகும்.

இந்தியா 1949–ஆம் ஆண்டில் பன்னாட்டு வளர்ச்சி மறுசீரமைப்பு வங்கியில் உறுப்பினராகச் சேர்ந்தது. அவ்வங்கியின் வாயிலாக 1970 சூன் 30 வரை இந்தியாவுக்கு உரு. 18418.52 மிலியன் கடனுதவியாகக் கிடைத்துள்ளது. இதனால், இந்தியாவில் தொழிற்சாலைகளும் போக்குவரத்தும் பெரிதும் பயனடைந்தன. மேலும், தொடர் வண்டிப் போக்குவரத்து, உரத் தொழிற்சாலை, வேளாண்மை, நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகியவை நல்ல பலனை அடைந்தன. கூட்டுறவுத் துறையில் உள்ள புல்புர் உரத் தொழிற்சாலைக்கு மட்டும் உரூ. 1,253.5 மிலியன் கடனுதவியாகக் கிடைத்தது.

இந்தியாவில் கடுமையான அயற் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக, இந்திய நிதி உதவிக் கூட்டிணைப்பு (Indian Consortium) 1957–58–இல் நிறுவப்பட்டது. இதன் சிறப்பு நோக்கம், பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கும் அயல்நாட்டு உதவியை ஒன்று திரட்டி நாட்டிற்கு அளிப்பதாகும். இக்கூட்டிணைப்பின் சிறப்பு உறுப்பு நாடுகளாக இருப்பவை உலக வங்கி, பன்னாட்டு வளர்ச்சிக் கழகம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சப்பான், ஐரோப்பியக் கழகம் ஆகியவையாம். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து அயற் செலாவணியும் பெட்ரோலும் (கல்லெண்ணெய்) அயல்நாட்டு உதவியாக இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து 1974–75, 1975–76–ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பெருமளவு அயல்நாட்டு உதவி கிடைத்துள்ளது. இந்திய நிதி உதவிக் கூட்டிணைப்பு உறுப்பினர்களிடமிருந்து 1982–83–ஆம் ஆண்டுவரை 90 விழுக்காடு அயல்நாட்டு உதவி கிடைத்துள்ளது. கடன்கள், கொடைகள், பொருள்கள் மூலமாக இவ்வுதவி கிடைத்துள்ளது.

பன்னாட்டு வளர்ச்சிக் கழகத்திலிருந்து 40 விழுக்காடு அளவுக் கடன் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 1976 சூன் 30 வரை உரூ. 47457.05,