அயல்நாட்டுச் செலுத்துநிலை
530
அயல்நாட்டுச் செலுத்துநிலை
செலுத்துநிலை” 20–ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கத்தைப் பெற்றது. காரணம், பன்னாட்டுப் பொருளாதார உறவுகளில் இந்நூற்றாண்டில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களே ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின், பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட்ட எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, பல்துறை முன்னேற்றங்கள் ஆகியவற்றுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாறுபட்ட அரசியல் கொள்கைகளையுடைய முதலாளித்துவ நாடுகளும் சமநிலைச் சமுதாய நாடுகளும் கூடத் தங்களிடையே பன்னாட்டு வாணிக உறவை வளர்த்துக் கொண்டு வருகின்றன. எனவே, ‘அயல்நாட்டுச் செலுத்துநிலை’ பன்னாட்டு வாணிக வளர்ச்சியினால் மேன்மேலும் புதிய விளக்கங்களைப் பெற்று முதன்மைநிலை அடைந்து வருகிறது.
பி.டி. எல்சுவொர்த்து (P.T. Ellsworth) என்ற பொருளாதார அறிஞர், ‘பன்னாட்டுப் பொருளாதாரம்’ என்ற நூலில் (The International Economy) அயல்நாட்டுச் செலுத்துநிலை பற்றி விளக்கமளித்துள்ளார். “அயல்நாட்டுச் செலுத்துநிலை என்பது மிகவும் சிறந்த கோட்பாடாகும். ஒரு நாடு வெளிநாட்டாருடன் கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளும் இதில் அடங்கியுள்ளன. பொருள்களையும் பணிகளையும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நடப்புச் செயல்களும், வெளிநாட்டுச் சொத்துகளை வாங்குவது, விற்பது, வெளிநாட்டாரிடமிருந்து கடன் வாங்குவது, அவர்களுக்குக் கடன் கொடுப்பது போன்ற நிதி பற்றிய செயல்களும் இதில் அடங்கியுள்ளன, ஒரு பொருளாதார அமைப்பிற்கும் உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருளாதாரங்களுக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் முழுக் கணக்காகும்” என்று எல்சுவொர்த்து கூறினார்.
சார்லசு பி. கிண்டில் பெர்க்கர் (Charles P. Kindle Berger) என்ற பொருளாதார அறிஞர், அயல்நாட்டுச் செலுத்துநிலையின் பயன்பாட்டினைக் குறிப்பிடும் போது, ஒரு நாட்டின் பன்னாட்டுப் பொருளாதார உறவு நிலையில் மேற்கொள்ளப்படும் பணவியல், நிதியியல், செலாவணி ஆகிய கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அயல்நாட்டுச் செலுத்தல் நிலை செயற்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
அயல்நாட்டுச் செலுத்தல் நிலையில், அயல்நாட்டு வாணிக நிலையும் அடங்கியுள்ளது. அயல்நாட்டு வாணிக நிலை (Balance of Trade), கண்ணுக்குப் புலனாகும் இனங்களின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளை மட்டும் குறிக்கும். ஆனால் அயல்நாட்டுச் செலுத்தல் நிலை என்பது, கண்ணுக்குப் புலனாகும் (Visible) இனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளையும், கண்ணுக்குப் புலனாகா (Invisible) இனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி மதிப்புகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாகும்.
கண்ணுக்குப் புலனாகும் இனங்கள் என்பவை ஒரு நாட்டின் துறைமுகத்தில், விமானத் தளக் கூடத்தில் கணக்கீடு செய்யப்படும் பொருள்சார் பண்டங்களாகும். சில எடுத்துக்காட்டுகள்: உணவு தானியங்களின் ஏற்றுமதி, இறக்குமதி, இரசாயனப் பொருள்கள், சணல், துணிகள், ஆலைக் கச்சாப் பொருள்கள் போன்றவையாகும்.
கண்ணுக்குப் புலனாகாத இனங்களும் ஒரு நாட்டின் வாணிகக் கணக்குகளில் சேர்க்கப்பட்டிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்: காப்பீட்டுச் செலவுகள், அயல்நாட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி, அயல்நாட்டுக் கப்பல்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம், அயல்நாட்டுத் தூதரகச் செலவு, அயல் நாடுகளுக்குச் செலுத்தும் இன்பப் பயணங்களின் செலவு போன்றவை.
அயல்நாட்டுச் செலுத்துநிலைக் குறிப்பு (Balance of Payments Account) என்பது, ஒரு நாடு பிற நாட்டினருக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகையினையும் பிற நாட்டினரிடமிருந்து பெறவேண்டிய முழுத் தொகையினையும் குறிக்கும். இதில் பிற நாட்டவருக்குச் செலுத்தவேண்டிய தொகை இனங்கள் பற்று எனவும், பிற நாட்டவரிடமிருந்து பெற வேண்டிய தொகை இனங்கள் வரவு எனவும் கொள்ளப்படுகின்றன. தங்கத்தின் பெயர்ச்சி, கடன் பேரங்கள், முதலீடுகள் ஆகியன மூலதனக் கணக்கிலும் (Capital Account) மற்றவைகள் நடப்புக் கணக்கிலும் அடங்குகின்றன.
அயல்நாட்டுச் செலுத்துநிலையில் பாதகமான சமனற்ற நிலை ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. பருவமழை பொய்த்தல், மிகுதியான அளவில் எந்திரங்கள் இறக்குமதி செய்தல், கச்சாப் பொருள்களின் இறக்குமதி, பணவீக்கத்தால் ஏற்படும் ஏற்றுமதிக் குறைவு, வணிகச் சூழலில் தோன்றும் மந்த நிலை, மக்கள்தொகைப் பெருக்கம், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மந்த நிலையாலும் பணவீக்க நிலையாலும் ஏற்படும் இறக்குமதி மிகுதி, வெளிநாட்டில் கடன் வாங்கு நிலைமை போன்ற காரணங்களால் கேடான செலுத்துநிலை, சமனற்ற சீர்கேட்டை நீண்டகாலம் இருக்கச் செய்தால், உள் நாட்டில் பொருளாதாரம் நிலையற்றதாகிப் பல சிக்கல்கள் தோன்றும், கேடான அயல்நாட்டுச் செலுத்துநிலையைக் குறுகிய கால நடவடிக்கைகள் மூலமும் நீண்டகாலத் தொடர் முயற்சிகளின் மூலமும் ஈடு செய்யலாம்.