உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு மூலதனம்‌

533

அயல்நாட்டு மூலதனம்‌

தொழில் அமைப்பு என்ற நான்கு உற்பத்திக் காரணிகள் தேவை. மூலதனம் என்பது, கட்டடம், எந்திரக் கருவிகள், மூலப் பொருள் போன்ற உற்பத்திக் கூறுகளைக் குறிக்கிறது. இதைத் தவிர, தொழில் நுட்பக் கல்வி, சுகாதாரம், திறன் மிகுப்பு ஆகியவற்றிற்கு முதலீடு செய்வதும் மூலதனம் என்றே கூறப்படும். வளர்ச்சி குறைந்த பிற்பட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தத் தேவையான மூலதனம் கிடைப்பதில்லை. எனவேதான், அத்தகைய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அயல்நாட்டு மூலதனத்தின் தேவை எழுகிறது. பொருளாதார வளர்ச்சியில் அயல்நாட்டு மூலதனம் சிறந்த பங்கேற்கிறது.

பொதுவாக வளர்ச்சி குறைந்த நாடுகள், அயல் நாடுகளிலிருந்து எந்திரம், கருவிகள், துணைக் கருவிகள், மூலப் பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து விரைவான வளர்ச்சி அடைய முயற்சி செய்கின்றன. உள்நாட்டில் எந்த அளவுக்கு மூலதனத்தைச் சேகரிக்க முடியும் என்பதைப் பொறுத்தே அயல்நாட்டு மூலதனத்தின் அளவும் அமையும். ஆகவே, அரசு மூலதன ஆக்கத்தை வேகப்படுத்த நான்கு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அவை வரிவிதிப்பு, உள்நாட்டில் கடன் வாங்குதல், பற்றாக்குறை நிதியாக்கம், அயல்நாட்டிலிருந்து மூலதனம் பெறுதல் என்பன. இவற்றுள் அயல்நாட்டு மூலதனம், முதலீட்டில் இறுதிநிலைப் பங்கினைப் பெறுகிறது. இருப்பினும், இதன் சிறப்புறு நிலைக்குக் காரணம், வளர்ச்சி குறைந்த நாடுகளில் நுகர்வு (Consumption) குறைந்த நிலைவில் உள்ளதோடு, மூலதனம் பற்றாக்குறையில் உள்ளதேயாகும்.

வளர்ச்சியடைந்த நாடுகளும் பொருளாதார முன்னேற்றத்தின் தொடக்கக் கட்டத்தில் அயல்நாட்டு மூலதனத்தைச் சார்ந்தே இருந்தன. இங்கிலாந்து, ஆலந்து (Holland) நாட்டிலிருந்து 17,18–ஆம் நூற்றாண்டுகளில் கடனுதவி பெற்றது. அதனால், இங்கிலாந்து இந்தியாவைச் சுரண்டிப் பொருளாதார உபரியைப் பெற்றது. அமெரிக்கா 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பன்னாட்டுப் பண அங்காடியிலிருந்து மிகுதியான கடன்களைப் பெற்றது. கனடா 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மிகுந்த அளவு அயல்நாட்டு மூலதனத்தை ஏற்றுக்கொண்டது. உருசியா தன் பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் காலங்களில் அமெரிக்க நாட்டின் உதவியைப் பெரிதும் நம்பியிருந்தது. உருசியா மிகுதியாக உதவி புரிந்ததால்தான் சீனா விரைவான வளர்ச்சியைப் பெற முடிந்தது.

இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு அயல்நாட்டு மூலதனம் பெரிதும் உதவியுள்ளது. முதலீடு செய்வோர் 19–ஆம் நூற்றாண்டிலும், 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தொழில்களில் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்யத் தயங்கினர். சேமிப்பு வீதம் குறைந்த அளவிலும் தொழில் நுணுக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும் இருந்தமையால், வாணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய வணிகக் குழுவைச் சார்ந்த ஆங்கிலேயர் முதலீடு செய்ய முன்வந்தனர். காப்பி, தேயிலை, சணல், நிலக்கரி, சருக்கரை, போன்ற பெரிய தொழில்கள் வளர்ந்தமைக்கு ஆங்கிலேயரின் மூலதனமே காரணமாகும். திட்டங்களை நிறைவேற்றவும் 1947–ஆம் ஆண்டிற்குப் பின் அயல்நாட்டு மூலதனம் பெறப்பட்டது. வளர்ச்சியடையாத எந்த நாடும் அயல்நாட்டு மூலதனத்தைப் பெறாமல் விரைவான தொழில் முன்னேற்றத்தைப் பெற இயலாது.

சப்பான், அயல்நாட்டுத் தனியார் முதலால், பொருளாதார வளர்ச்சியைப் பெறவில்லை. ஆனால், அயல்நாட்டு வல்லுநர்களை வேலைக்கமர்த்திச் சப்பானியர் அவர்களிடமிருந்து தொழில் நுட்பத்தையும் தொழில் துணிவாற்றலையும் சுற்றறிந்தனர். மேலும், உள்நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தொழில் நுட்பத்தில் பயிற்சி பெறச் செய்தனர். இத்தகைய முயற்சிகளால் சப்பான் விரைவான தொழில் வளர்ச்சியைப் பெற முடிந்தது. அயல்நாட்டு மூலதனம், பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் தோன்றுகிற குறைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றை நீக்குவதோடு, தொழில் நுட்பப் பணிகளையும் தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் உள்நாட்டு முதலாக்கத்தை வேகப்படுத்த முடிகிறது. குறிப்பாக, உள்நாட்டு நுகர்ச்சியைக் குறைக்காமலேயே வளர்ச்சிக்கான மூலதனத்தைச் சேகரிக்க முடிகிறது. அயல்நாட்டு மூலதனம், நாட்டில் பணவீக்க நிலை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் பணவீக்கமில்லாமல் முதலாக்கத்தைப் பெருகச் செய்வது கடினம். ஆனால், அயல்நாட்டு உதவி, முதலீட்டுப் பொருள்களாகக் (Capital Goods) கிடைப்பதால் பொருளாதார வளர்ச்சியின்போது பணவீக்கத்திற்கு எதிர் சக்தியாகச் செயற்படுகிறது. அயல்நாட்டு மூலதனம், பற்றாக்குறை நிதியாக்கத்தைப் பின்பற்ற வேண்டிய தேவையைக் குறைக்கிறது.

அயல்நாட்டு மூலதனம், ஓரளவிற்கு அயல்நாட்டுச் செலுத்து இருப்பு நிலைக் (Balance of Payments) குறைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. எனவே, அதனை அயல்நாட்டுச் செலுத்து இருப்பு நிலையைச் சமப்படுத்தும் கருவி எனக் கூறலாம் அன்றியும் அது பன்னாட்டு வேலைப் பகுப்பை (Division of Labour) விரிவுபடுத்திப் பன்னாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெறத் துணை புரிகிறது. இதனால் ஏழை நாடுகளில்