உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு மூலதனம்‌

537

அயல்நாட்டு மூலதனம்‌

அயல்நாட்டு முதலீட்டாளருக்குக் கொடுக்கவேண்டிய “உரிமைப் பங்கு” (Royalty) எவ்வளவு இருத்தல் வேண்டும்; அயல்நாட்டாருடன் செய்யும் ஒப்பந்தத்திற்கான கால அளவு எவ்வளவு என்பன போன்ற பலவற்றிற்கும் வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு கட்டுப்படுத்தப்படாமல் அனுமதிக்கப்பட்ட அயல்நாட்டு மூலதனம், இப்போது கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கப்படுகிறது. எனினும், 6–ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு எதிர்பார்க்கும் அல்லது சார்ந்து நிற்கும் அயல் நாட்டு மூலதனத்தின் அளவு உரூ. 10,029 கோடி ஆகும்.

அயல் நாட்டு மூலதனத்தைப் பெற்றதால் இந்தியப் பொருளாதாரத்தில் விளைந்த நன்மைகள்: 1. அயற்செலாவணிப் பற்றாக்குறை நிலையைத் தீர்க்க அயல் நாட்டு மூலதனம் உதவியது. 2. அயல்நாட்டு மூலதனத்தைப் பயன்படுத்தியதால் இந்தியாவில் முதலீட்டு வீதமும், அதனால் சேமிப்பு வீதமும் உயர்ந்தன. 3. நாட்டில் திறமை குறைந்த உழைப்பாளர்களைத் திறமை மிக்கவர்களாக மாற்றவும் தொழில் நுட்ப அறிவு பரவவும், தொழில் உற்பத்தி முறைகளில் சீரிய முன்னேற்றங்கள் ஏற்படவும் அயல்நாட்டு மூலதனம் உதவியுள்ளது. உற்பத்திப்பொருள்களின் அளவையும் தரத்தையும் உயர்த்தத் தொழில் நுட்பப் பயிற்சிகள் உதவியுள்ளன. இப்போது பிறநாடுகளுக்குத் தொழில் நுட்ப உதவி அளிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. எடுத்துக்காட்டாக, தோகாவில் (Doha) உள்ள இயற்கை வாயுலின் வளத்தைப் பயன்படுத்தி, அங்குத் தொழில் நுணுக்க உதவியை அளிக்க, இந்தியா தயாராக இருப்பதாகக் குடியரசுத் தலைவர் செயில்சிங் 1983-ஆம் ஆண்டு திசம்பர் 19-ஆம் தேதி உறுதியளித்திருக்கிறார். 4. பெருகுகின்ற மக்கள் தொகைக்குப் போதுமான உணவை இறக்குமதி செய்யவும், அதன்மூலம் விலைகளைக் கட்டுப்பாடு செய்யவும் அயல்நாட்டு மூலதனம் உதவியுள்ளது. 5. வேளாண்மை வளர்ச்சிக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள், அணைகள், மின்சாரத் திட்டங்கள் ஆகியவை அயல் நாட்டு மூலதனத்தால் ஏற்பட்டவை. 6. பல இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள் நாட்டில் அயல்நாட்டு உதவியால் ஏற்பட்டன. 7. அயல்நாட்டு மூலதனத்தால் சாலைப் போக்குவரத்து, துறைமுக முன்னேற்றம், இருப்புப் பாதைப் போக்குவரத்து, ஆகாய விமானப் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதனால் வாணிகம் வளர்ந்து, பிற தொழில் உற்பத்தி உயர வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்ட சுரங்கப் பாதைக்கு அமெரிக்கா உதவியது; இப்பாதை கட்டுவதற்கு முன் இரயில் போக்குவரத்திற்குச் சாலை அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட 10 இலட்சம் உரூபாய் இழப்பு இதனால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதே போன்று சென்னை ஓட்டேரிப் பகுதியிலும் சுரங்கப் பாதை அமெரிக்க உதவியுடன் கட்டப்பட்டுவிடும் என்பது கூறப்படுகிறது.

சிக்கல்கள்: 1. இந்தியா அயல்நாட்டு மூலதனத்தைக் கடனாகப் பெறுவதால் அக்கடனை வட்டியுடன் திருப்பித்தரும் சுமை மிகுகிறது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 23.8 கோடியும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 119.4 கோடியும், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 524.6 கோடியும், நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 2455 கோடியும் (நான்கு மடங்கு உயர்வு), ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 3770 கோடியும், ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் (1983 வரை) உரூ. 2733 கோடியும் இந்தியா கடனைத் திரும்பச் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2. அயல்நாட்டு மூலதனம் கிடைப்பதில் உறுதியற்ற தன்மை இருக்கிறது. 3. அயல்நாட்டு முதலீட்டாளரின் தலையீடு ஒரு சில துறைகளில் பெருகுவது இடர்ப்பாடாக உள்ளது. அதன்பின் அயல்நாட்டு அரசியல் தலையீடு ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியுள்ளது. 4. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கொடுக்கப்படும் மூலதனமும் அத்திட்டத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே உதவுகிறது. முழுமையான நிதி உதவி கிடைப்பதில்லை. 5. அயல்நாட்டிலிருந்து கிடைக்கும் புதிய கருவிகள், தொழில் நுட்ப அறிவு ஆகியவை இந்தியாவில் சில துறைகளுக்குப் பொருந்துவனவாக இல்லை. 6. அயல்நாட்டு மூலதனத்தை முதலீடு செய்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து அளிக்கப்படும் ஆதாயப் பங்கு, உரிமைப்பங்கு ஆகியவற்றை உற்று நோக்கினால், நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு மிகுந்து வருவது தெளிவாகும். இது நாட்டிற்கு ஏற்படும் இழப்பு. இவை பற்றிய புள்ளி விவரங்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. ஆனால், 1956–57–இலிருந்து 1966–67 வரை மட்டும் வெளிநாட்டுத் தனியார் நிறுவனம் உரூ. 388.2 கோடியை ஆதாயப் பங்காகப் பெற்றது. பன்னாட்டுக் கழகங்கள் (Multinational Corporations) மூலம் பயன்பெறும் கால்டெக்சு (Cultex) நிறுவனத்தின் 1966–70-இன் மொத்த மூலதனம் உரூ. 16.92 கோடி. ஆனால் அது தன் கழகத்திற்கு அனுப்பிய ஆதாயப்பங்கு உரூ. 43 கோடி. அதே ஆண்டில் எசோ (ESSO) நிறுவனத்தின் மொத்த மூலதனம் உரூ. 29.58 கோடி. அது அயல்நாட்டு முதலீட்டாளருக்கு அனுப்பிய ஆதாயப் பங்கு உரூ. 83 கோடி ஆகும். இந்த எடுத்துக்காட்டுகள், முழுநிலையைப் படம்பிடித்துக் காட்டாவிட்டாலும் இந்தியாவிற்கு அயல்நாட்டு மூலதனத்தால் ஏற்படக் கூடிய பண இழப்பைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.


1–68